MK.Stalin Vs Edappadi Palaniswami: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு முன்னர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் பணபுழக்கம் காரணமாக வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இங்கு திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், மறுபுறம் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும் களம் காணவிருந்தனர்.
இதற்கிடையே திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு வேட்டை நடத்தினார்.
இவர்கள் இருவரும் தங்களின் பிரச்சாரத்தில், வார்த்தைகளால் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
அவற்றில் சில கவனம் ஈர்த்த விஷயங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
மு.க.ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிச்சாமி
‘நாட்டை ஆள்வது ஒரு சர்வாதிகாரி. மாநிலத்தை ஆள்வது உதவாக்கரை. அங்கு சர்வாதிகாரி இங்கு உதவாக்கரை’.
‘ஏன் வாரிசுக்கு சீட் கொடுக்கக்கூடாதா?’.
‘ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் போது கைகட்டி குனிந்து நின்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்போது எம்ஜிஆரை போல் கழுத்தில் துண்டு எல்லாம் போட்டு பேசுகிறார்’.
‘முதல்வருக்கு இணையாக.. அது கூட வேண்டாம்.. ஒரு அமைச்சர் அந்தஸ்தில் இருக்கிறேன். நான் புகார் கொடுக்கிறேன். மோடி வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது. எடப்பாடி வீட்டிலும் பணம் குவிந்திருக்கிறது. அங்கு சென்று போடுவீர்களா சோதனை?’.
‘எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவை கொண்டு போய் அமித்ஷாவிடம் அடகு வைத்துள்ளார். மார்வாடி கடையில் கொண்டு சென்று அடகு வைத்தால் கூட மீட்டுவிடலாம். அமித்ஷாவிடம் அடகு வைத்துள்ளீர்களே, அதை மீட்கவே முடியாது’.
‘இந்தியாவே திரும்பி பார்க்கக்கூடிய அளவிற்கு மெகா கூட்டணி வைத்துள்ளோம் என எடப்பாடி கூறுகிறார். சாக்கடையில் நாற்றம் வந்தால் கூடத்தான் திரும்பி பார்ப்பார்கள்’.
‘நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வு என்கிற ஜவ்வு கிழிந்து தொங்கும்’.
‘நாம் ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையாக ஜெயலலிதா மரணத்துக்கு யாரெல்லாம் காரணமோ, அவர்களைப் பிடித்து, ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுப்போம். யாராக இருந்தாலும் விடமாட்டேன்’.
‘மே 23-க்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கப் போகிறது. மோடி மற்றும் எடப்பாடியின் கதை காலி. நான் சொல்வது நடக்கும். நான் கருணாநிதியின் மகன்’.
'தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் மத்தியில் ஆட்சி செய்கிற நரேந்திர மோடியும், மாநிலத்தை ஆளுகின்ற எடப்பாடியும் எதிராக செயல்படுகிறார்கள்’.
எடப்பாடி பழனிச்சாமி Vs மு.க.ஸ்டாலின்
‘ஸ்டாலின் இந்த ஆட்சியையே அன்னைக்கு கலைக்க பார்த்தார். சட்டப்பேரவையில் நீங்களே பாத்திருப்பீங்களே! என்னா ஆட்டம் ஆடினார் தெரியுமா? என்னுடைய பெஞ்ச் மேல ஏறி ஆட்டம், பாட்டம் தான்! பெண் அமைச்சர் பெஞ்ச்சில் ஏறி நின்று டான்ஸ் ஆடினார். இவங்களா நாட்டை காப்பாத்த போறாங்க?’.
‘ஸ்டாலின் உழைப்பால் உயரவில்லை; உழைத்திருந்தால் கஷ்டம் தெரியும்’.
‘கருணாநிதி வாய் பேசாத நிலையில் கூட ஸ்டாலினை தலைவராக்கவில்லை. ஏன் என்றால், தந்தைக்கே மகன் மீது நம்பிக்கை இல்லை. பிறகு ஸ்டாலினை மக்கள் எவ்வாறு நம்புவார்கள்?’.
‘ஸ்டாலின் 25 வயது இளைஞர் போல், செல்லும் இடங்களில் கறுத்து போய் விட்டேன் என்று கூறி வருகின்றார். இதனை எம்.ஜி.ஆர்., கூட சொன்னது கிடையாது. இங்கு கோமாளியாக வேஷம் போட்டு சுற்றி வருகின்றார். இந்தியாவிலேயே ஷூ போட்டுக் கொண்டு ஏர் உழுதவர் ஸ்டாலின் தான்’.
‘தி.மு.க.வினரின் அராஜகம் நாடறிந்த ஒன்று. பிரியாணி கடை, புரோட்டா கடை என அனைத்து கடைகளிலும் தகராறு செய்பவர்கள் அவர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அராஜகம்தான் தலைவிரித்தாடும். ஆனாலும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். தி.மு.க.வால் மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது’.
‘பொய் சொல்வதற்கான நோபல் பரிசை ஸ்டாலினுக்கு கொடுக்கலாம்’.
‘ஸ்டாலின் ஒரு வைரஸ் கிருமி மாதிரி. செடிக்கு எப்படி பூச்சிக்கொல்லியை தெளித்து கட்டுப்படுத்துவோமோ, அதே போல் ஸ்டாலினுக்கு மருந்து தெளித்து இந்தத் தேர்தலோடு அவரது சகாப்தம் முடிவுக்கு வர அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டும்’.
‘தந்தையின் ஆதரவில் கொள்ளைப் புறம் வழியாக அரசியலுக்கு வந்த ஸ்டாலின், மரியாதை கொடுத்து பேசினால் மரியாதை கிடைக்கும்; நான் திருப்பி பேசினால் ஸ்டாலினின் காது சவ்வு கிழிந்துவிடும்’.
'கண்ணுக்குத் தெரியாத காற்றில்கூட ஊழல் செய்யும் அளவுக்கு விஞ்ஞான மூளை படைத்தவர்கள் தி.மு.க கட்சியினர்’.
'தி.மு.க-வின் பாரம்பரியம் என்ன? ஆனால் ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்துவருகிறார். ஸ்டாலின் தி.மு.க தலைவரா... இல்லை கட்டப்பஞ்சாயத்து தலைவரா?’
மேலே குறிப்பிடப்பட்டிருப்பவைகள் மீடியாக்களிடமும், பொதுமக்களிடமும் அதிகளவில் கவனம் ஈர்த்தவை.