தமிழ்நாட்டில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு வருகிற 19-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தேனி, ஈரோடு உள்ளிட்ட தொகுதிகளில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் 46 பூத்களில் மறு வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். எனவே அதற்கான அறிவிப்பு டெல்லியில் இருந்து எந்த நேரமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்று இரவு 9 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் 13 வாக்குச்சாவடிகளில் மே 19-ம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.
தர்மபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகள், தேனியில் 2 வாக்குச்சாவடிகள், திருவள்ளூர், கடலூர், ஈரோடு தொகுதிகளில் தலா ஒன்று என மொத்தம் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
தேனி, ஈரோடு தொகுதிகளில் மறு வாக்குப்பதிவுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்காத நிலையில் தேர்தல் ஆணையம் அதற்கான உத்தரவு பிறப்பித்திருப்பதை எதிர்க்கட்சிகள் சர்ச்சை ஆக்குகின்றன.