Advertisment

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து விவகாரம்: ஏ.சி.சண்முகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தேர்தலில் வெற்றி பெற்றவர்களைத்தான் தகுதி நீக்கம் செய்ய முடியும். தேர்தலில் போட்டியிடுபவர்களை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai High Court

பணப்பட்டுவாடா செய்ததாக தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக, வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி. சண்முகம், சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்திடம் இருந்து வருமான வரித்துறையினர் பணம் பறிமுதல் செய்ததால், அத்தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்த பின்னர், அதில் யாரும் தலையிட முடியாது. ஒரு தொகுதியில் தேர்தலை நடத்துவதும், ரத்து செய்வதும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. வேட்பாளர் முறைகேட்டில் ஈடுபட்டார் என்பது உறுதியானால், அந்த வேட்பாளர் தேர்தலில் நிற்க தகுதி நீக்கம் செய்யத்தான் தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வேட்பாளர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளதே தவிர, தேர்தலை ரத்து செய்வதற்கு குடியரசு தலைவருக்கு அதிகாரம் இல்லை. மேலும், வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப் பட்டுள்ளது. ஆகவே, வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட உத்தரவை செல்லாது என்று அறிவித்திட வேண்டும். வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்திட உத்தரவிட வேண்டும்' என்று தெரிவித்து இருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஏ.சி. சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி வாதிட்டார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டால், தேர்தல் ஆணையம் தவிர, மற்றவர்கள் யாரும் தலையிட முடியாது. தேர்தலை ரத்து செய்ய குடியரசு தலைவருக்கு அதிகாரம் இல்லை. வேட்பாளர் முறைகேட்டில் ஈடுபட்டால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுக்க வேண்டுமே தவிர, ஒட்டுமொத்தமாக அந்த தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்யக் கூடாது என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், 'தேர்தலை ரத்து செய்யக்கூடாது என்றால், பணப்பட்டுவாடா முறைகேட்டில் ஈடுபடுபவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? தேர்தலில் வெற்றி பெற்றவர்களைத்தான் தகுதி நீக்கம் செய்ய முடியும். தேர்தலில் போட்டியிடுபவர்களை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்? பணப்பட்டுவாடா விவகாரத்தில் குறிப்பிட்ட சில வேட்பாளர்களை மட்டும் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்ய முடியும்?' என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து வாதிட்ட ஏ.சி.சண்முகம் தரப்பு வழக்கறிஞர், தவறு இழைத்த வேட்பாளரை தகுதி நீக்கம் தான் செய்ய சொல்கிறோம் என வாதிட்டார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்வு செய்யப்பட்டவரைதான் தகுதி நீக்க வகை செய்கிறது. எப்படி குறிப்பிட்ட சில வேட்பாளரை மட்டும் தகுதி நீக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஏ.சி சண்முகம் வழக்கறிஞர் - ”நேத்துவரை பரப்புரை செய்துள்ளனர். நாளை வாக்குப்பதிவுக்கு எல்லா ஏற்பாடுகளும் முடிந்துள்ள நிலையில், திடிரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

பூத் கைப்பற்றுதல், சட்டம் ஒழுங்கு, இயற்கை சீற்றங்களில்தான் ரத்து செய்ய முடியும். அப்படி ஒது சூழல் இதுவரை ஏற்படவில்லை.

வருமான வரித்துறை அளித்த அறிக்கை அனைத்துமே கதிர் ஆனந்த் மற்றும் அவரை சார்ந்தவர்களின் இடங்களில் நடத்தபட்டபோது கைப்பற்றபட்ட ஆவணம், பணம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே உள்ளது. எனவே தவறு செய்தவர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கட்டும், நாளை தேர்தல் நடத்தட்டும், பாதிக்கப்பட்டதாக கருதுபவர் வேண்டுமானால் தேர்தல் வழக்காக தொடரட்டும். ஒருவர் தவறுக்காக தேர்தலை ரத்து செய்தால் மற்ற வேட்பாளர்கள் பாதிக்கப்படுவர். தேர்தல் நடைமுறையே தவறானதாக கருதப்படும் என வாதிட்டனர்.

தேர்தல் ஆணைய முடிவுகளை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது எனவும் ஓட்டுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவது குற்றம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் தண்டிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என தெரிவித்த வழக்கறிஞர் தேர்தல் ஆணையம் தனக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மட்டுமே தேர்தலை ரத்து செய்தாக வாதிட்டார்.

இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு வழக்கின் தீர்ப்பை இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிப்பாதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர் சுகுமாரன் தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Vellore High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment