கமல. செல்வராஜ்
தமிழகத்தில் மொத்தம் 5.91 கோடி வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையை நிலைநாட்டுகின்றனர். இவர்களி்ல் 4.50 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்கள் என்பது தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அளித்துள்ள தகவல்.
இந்த 4.50 லட்சம் வாக்காளர்களில் குறைந்தது 2.50 லட்சம் பேர் தற்போது பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரிகளில் மாணவர்களாகத் தங்கள் படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கலாம் என்பது உறுதி.
இம்முறை, இதற்கு முன்பு நடந்த தேர்தல்களைவிட மிக அதிக சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் மிகுந்த தீவிரம் காட்டின. அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் தேதி அறிவித்தவுடன் வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து, இம்முறை நூறு சதவீத வாக்குப்பதிவு என்னும் இலக்கை எட்ட வேண்டும் என நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார். மட்டுமின்றி அவர், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனைத்து எதிர் கட்சி தலைவர்களிடமும், அனைத்து வாக்காளர்களிடமும் வாக்களிக்க வலியுறுத்தும்படி வேண்டுகோள் விடுத்தார்.
அதன் அடிப்படையில் தமிழகத் தேர்தல் அதிகாரிகள் நூறு சதவீத வாக்குப் பதிவு நடத்துவதற்காகப் பல்வேறு உத்திகளைக் கடைபிடித்து வருகின்றனர். அவற்றில் ஒரு உத்தியானது அனைத்துக் கல்லூரிகளிலும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி அனைத்து புதிய மாணவ வாக்காளர்களையும் வாக்களிக்க வைக்க வேண்டும் என்பது.
கல்லூரிகளைப் பொறுத்தவரை இதுவரை மாணவர்களிடையே, எயிட்ஸ் விழிப்புணர்வு, போதை விழிப்புணர்வு, ஈவ்டீசிங் விழிப்புணர்வு போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. ஆனால் இம்முறை அனைவரும் வாக்களித்து தேர்தலில் நூறு சதவீதம் வாக்களித்தல் என்ற இலக்கை அடைய வேண்டும் என்ற பிரச்சாரம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை உருவாக்கியுள்ளது.
பிரச்சாரத்தோடு மட்டும் நின்று விடாமல் புதிதாக வாக்களிக்கும் மாணவர்களின் வாக்குகள் செல்லா வாக்குகளாகாமல் இருப்பதற்காக, வாக்களிக்கும் எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கல்லூரிகளில் நேரடியாகக் கொண்டு வந்து, வாக்களிப்பதற்கான பயிற்சியும், அவர்கள் அளித்த வாக்கு, அளித்தவர்களுக்குத் தான் விழுந்ததா என்பதை கண்டறிவதற்கானப் பயிற்சியும் அளித்தனர். இவை புதிதாக வாக்களிக்கும் மாணவர்களை உற்சாகக் கடலில் ஆழ்த்தியுள்ளன.
இப்பிரச்சாரத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவு என்பது மட்டுமின்றி, ஓட்டிற்குப் பணம் வாங்கக் கூடாது, நேர்மையாக மட்டுமே வாக்களிக்க வேண்டும், நேர்மையானவர்கள் மற்றும் திறமையானவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும், கள்ள ஓட்டுப் போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பன உட்பட தேர்தல் சம்பந்தமான பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டன.
மேலும் இந்தப் விழிப்புணர்வு பிரச்சாரமானது வெறும் கல்லூரிக் கலையரங்குகளில் வைத்து, தலைவர்கள் அல்லது தேர்தல் அதிகாரிகளின் அறிவுரை மற்றும் நீண்ட நெடிய மேடைப் பேச்சாக சம்பிரதாயத்திற்காக மட்டும் நடத்தப்படவில்லை. மாறாக மாணவர்களை வைத்து, கல்லூரியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனப் பிரச்சாரம் செய்வது, சாலையோரங்களில் மனித சங்கிலி நடத்துவது, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தெரு நாடகங்கள் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது என விதவிதமான பிரச்சார உத்திகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
மட்டுமின்றி மாணவர்களை வாக்களிக்க உற்சாகமூட்டும் விதத்தில் அவர்களுக்கிடையே, நேர்மையான தேர்தலை வலியுறுத்தி குறு நாடகப் போட்டி, பேச்சுப் போட்டி, பாட்டுப்போட்டி, மாணவிகளை ஈர்க்கும் வண்ணம் ரங்கோலிப் போட்டி, சுலோகன் எழுதும் போட்டி எனப் பல்வேறு வகையானப் போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்பட்டன. இவை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தங்கள் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் நூறு சதவீத வாக்குப் பதிவை நடத்தி, தங்களுக்கும், தங்கள் மாவட்டத்திற்கும் பெருமைச் சேர்க்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்படுகின்றனர்.
அதனால் இம்முறை நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில், இந்தியாவின் பிற மாநிலங்களில் நடக்கும் வாக்குப்பதிவைவிட தமிழகத்தின் வாக்குப்பதிவு சதவீதமானது கணிசமான அளவிற்கு அதிகரிப்பதற்கான நல்ல சூழ்நிலை உருவாகியுள்ளது. 100 சதவிகித வாக்குப் பதிவை உறுதி செய்ய ஒவ்வொருவரும் சபதம் செய்தால், நல்ல ஜனநாயகத்தை காண முடியும்.
(கட்டுரையாளர், முனைவர் கமல. செல்வராஜ் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.