இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் புகைப்படத்தை பயன்படுத்திய டெல்லி பாஜக எம்.எல்.ஏ -வை புகைப்படத்தை நீக்குமாறு,தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என இரண்டுமே ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அத்துடன் இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில், டெல்லி விஸ்வாஸ் நகர் எம்.எல்.ஏ.வான ஓ.பி.சர்மா என்பவர், பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் வர்தமானின் புகைப்படங்களுடன் கூடிய பதிவை, தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மார்ச் 1 ஆம் தேதி இதனை பதிவிட்டுள்ள அவர், பாகிஸ்தான் நமக்கு தலைவணங்கி விட்டது. நமது தீரம்மிக்க வீரர் திரும்பி வந்துவிட்டார். மோடியின் ராஜதந்திரத்தால் மிகவும் குறைந்த காலத்திலேயே அபிநந்தன் திரும்ப அழைத்து வரப்பட்டார் என பதிவிட்டு அவர்களது புகைப்படங்கள் அடங்கிய போஸ்டரை ஷேர் செய்துள்ளார்.
இதனால் தேர்தல் கமிஷன், அந்த பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏ பிரகாஷ் சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.