கொரொனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, வாக்கு எண்ணிக்கையின்போது அரசியல் கட்சியினர் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், தடையை மீறி நடைபெறும் வெற்றி கொண்ட்டாடங்களை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிககி எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் 2வது அலையால் கொரோனா தொற்றால் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதனால், பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்காத நிலையும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் நிலவிவருகிறது.
கொரோனா பரவல் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்றைய நிலைமைக்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு, கொலை வழக்கு பதிவு செய்தாலும் தவறில்லை என்று கடுமையாக விமர்சித்தது.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் குறித்து நீதிபதிகள் வாய்மொழியாக கூறியதை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது அரசியல் கட்சியினர் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று தடைவிதிப்பதாகவும் அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை ஏற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுகவினர் கொரோனா கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து வீடுகளுக்குள் இருந்து வெற்றியை கொண்டாடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பாண்மையான இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. இதனால், திமுக தலைமையின் வேண்டுகோளையும் மீறி திமுகவினர் வெற்றிக் களிப்பில் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வெற்றி கொண்டாட்டங்களி ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே திமுக தொண்டர்கள் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து வெற்றி கோஷமிட்டு கொண்ட்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பானது.
அதே போல, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் அம்மாநிலத்தில் வெற்றி கொண்ட்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, மாநிலங்களில் அரசியல் கட்சியினர் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அண்ணா அறிவாலயம் பகுதியில் வெற்றி கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத தேனாம்பேட்டை காவல் அதிகாரி முரளி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட வீதிக்கு வர வேண்டாம். கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும். வீடுகளுக்குள் கொண்டாடுங்கள் வேண்டுகோள் விடுத்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”