Tamil Nadu lok sabha election result: பாராளுமன்றத் தேர்தல் ஒருவழியாக நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து மத்திய அமைச்சர்வையில் இடம் பெறப்போவது யார், யார்? என்கிற விவாதம் களை கட்டியிருக்கிறது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளிலுமே இந்த விவாதம் உச்சம் பெற்றதுதான் சுவாரசியம்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தமிழ்நாட்டின் பிரதான இரு கட்சிகளின் வட்டாரத்திலும் மத்திய அமைச்சர் பதவி யார், யாருக்கு? என்கிற பேச்சு களை கட்டியிருக்கிறது.
Tamil Nadu election results 2019: தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019
எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜக கூட்டணி அமைவதாக தகவல்கள் வெளியானதும், அதிமுக.வில் அமைச்சர் பதவிக்கான காய் நகர்த்தல்கள் வேகம் பெற்றன. குறிப்பாக கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பு வகிக்கும் மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார், தென் சென்னை வேட்பாளரும் அமைச்சர் ஜெயகுமாரின் மகனுமான ஜெயவர்தன் ஆகியோர் இதில் முன்னணியில் இருக்கிறார்கள்.
திமுக தரப்பில் தயாநிதி மாறன், கனிமொழி, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அமைச்சர் பதவிக்கான ஆர்வத்தில் இருப்பதாக தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக எக்ஸிட் போல் முடிவுகள் அமையாதது திமுக முகாமில் சோர்வை உருவாக்கியிருக்கிறது.
அதிமுக கூட்டணிக் கட்சிகளில் அன்புமணி, டாக்டர் கிருஷ்ணசாமி, எல்.கே.சுதீஷ், ஏ.சி.சண்முகம் ஆகியோரும் அமைச்சர் பதவிக்கான காய் நகர்த்தலில் இறங்கினர். ஆனாலும் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே இவர்களின் முயற்சி வெளிப்படையாக அரங்கேறத் தொடங்கும்.