Election Results 2019 Uttar Pradesh : உத்திரப் பிரதேசம் மாநிலம் தான் நிச்சயமாக, மத்தியில் ஆட்சி அமைக்கவிருக்கும் அரசினை தேர்ந்தெடுக்கும் சக்தியாக இருக்கிறது என யாராவது கூறினால் அதற்கு மாற்றுக் கருத்தே இருக்காது. காரணம் 543 தொகுதிகளில் 80 தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது உத்திரப் பிரதேசம். எப்போதுமே நான்கு முனை போட்டிகளை சந்தித்த இந்த மாநிலம் தற்போது தான் மும்முனை போட்டியினை சந்தித்திருக்கிறது.
பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணியான மகாகத்பந்தன் என பெரும் போட்டியினை அங்கு உருவாக்கியுள்ளது இந்த தேர்தல்.
யாரும் எதிர்பார்க்காத திருப்புமுனைகள்
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 24 ஆண்டு உள்பூசலுக்குப் பிறகு சமாஜ்வாடி கட்சியினருடன் கூட்டணி வைத்தது தான். ரே பரேலி மற்றும் அமேதி தொகுதி நீங்கலாக 75 இடங்களில் இவர்களின் கூட்டணி போட்டியிட்டது. மூன்று தொகுதிகளில் ராஷ்ட்ரிய லோக் தளம் போட்டியிட்டது.
உத்திரப்பிரதேசம் கிழக்கு பிராந்தியத்திற்கு பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார் ப்ரியங்கா காந்தி. நட்சத்திரப் பேச்சாளர் என்பதை கடந்து கட்சிப் பொறுப்புகள் அவருக்கு ஜனவரி 23ம் தேதி வழங்கப்பட்டது.
எப்போதும் ஒரே ஒரு தொகுதியில், அமேதியில் போட்டியிட்டு வந்த ராகுல் காந்தி முதல் முறையாக தென்னிந்தியாவில் ஒரு தொகுதியில் போட்டியிட்டார். அமேதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி இதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தார்.
எப்போதுமே அதிக அளவு இஸ்லாமியர்களுக்கு அதிக அளவு தொகுதிகளை ஒதுக்கி வந்த பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி இம்முறை தங்களின் கத்பந்தனில் 10 தொகுதிகளுக்கு மட்டுமே இடம் ஒதுக்கியுள்ளது.
பிரதமரை எதிர்த்து போட்டியிட இருப்பதாக பீம் ஆர்மியின் தலைவர் மற்றும் வழக்கறிஞருமான சந்திரசேகர் ஆஜாத் தெரிவித்தார். பிறகு சமாஜ்வாடியில் இருந்து முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பஹதூர் போட்டியிடுவதாக அறிவித்ததால் தன் முடிவை மாற்றிக் கொண்டார் சந்திரசேகர். ஆனால் தேஜ் பஹதூரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் வாரணாசியில் அஜய் ராய் மற்றும் மோடி என்று காங்கிரஸ் - பாஜக போட்டி மட்டுமே நிலவியது.
கடந்த கால தேர்தல் முடிவுகள்
2014 election results in UP
2014ம் ஆண்டு தேர்தலின் முடிவுகள் உத்திரப் பிரதேசத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது என்றே சொல்ல வேண்டும். 80 பாஜக 71 இடங்கள், காங்கிரஸ் 2, சமாஜ்வாடி 5, அப்னா தால் 2 என வெற்றி தேர்தல் முடிவுகள் அமைந்தன. இதுவே பாஜகவை தனிப் பெரும்பான்மையாக 272 தொகுதிகளை தக்க வைக்க பெரிதும் உதவியது. 99ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு 30க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கைப்பற்றியது கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் தான்.
2004 and 2009 General Election results in UP
2009ம் ஆண்டு தேர்தலில் இந்திய காங்கிரஸ் கமிட்டி 21 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணியுடன் 26 இடங்களை தக்க வைத்தது. ஆனால் 2004ம் ஆண்டு வெறும் 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது காங்கிரஸ்.
பாஜக 2009ம் ஆண்டு தேர்தலில் வெறும் 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2004ம் ஆண்டு 11 இடங்களில் வெற்றி பெற்றது.
பகுஜன் சமாஜ் 2009 தேர்தல்களில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2004ம் ஆண்டு 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
சமாஜ்வாடி தான் 2009 (23) மற்றும் 2004 (35)ம் ஆண்டு வெற்றி வாகை சூடியது. முறையாக பார்த்தால் மற்ற அனைத்துக் கட்சிகளைக் காட்டிலும் 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் சமாஜ்வாடி தான் அதிக அளவு வெற்றிகளை குவித்தது. இருப்பினும் அவர்களின் துணையோடு அந்த இரண்டு முறையும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : கருத்துக் கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிவுகள் அல்ல… கடைசி 3 மக்களவைத் தேர்தல் முடிவுகள் தான் இதற்கு உதாரணம்!
பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது உத்திரப் பிரதேசத்தில் வெற்றி பெற்ற 12 எம்.பிக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். நரேந்திர மோடி, மேனகா காந்தி, உமா பாரதி , ராஜ்நாத் சிங், வி.கே. சிங், சத்ய பால் சிங், க்ருஷ்ண ராஜ், அனுப்ரியா படேல், சிவ் ப்ரதாப் சுக்லா என அந்த பட்டியல் நீள்கிறது. நான்கு எம்.பி.க்கள் அமைச்சரவையில் இடம் பெற்றனர்.