Tamil Nadu Assembly Election Verdict News in Tamil 2021 : தமிழகத்தில் 16-வது சட்டப் பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது. ஜெயலலிதா கருணாநிதி இல்லாத முதல் சட்டப் பேரவை தேர்தல் என்ற பரபரப்பையும் கடந்து, கொரோனா பாதிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா கெடுபிடிகளால் வாக்கு எண்ணிக்கை குறித்த பல்வேறு தகவல்களும், விவாதங்களும், அதிரடி உத்தரவுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
நெருக்கடிகளுக்கு மத்தியில், திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். அதன்படி, தேர்தல் ஆணையத்தின் திட்டப் படி, நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 75 மையங்களில், நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்காக மொத்தம் 4420 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, ஒவ்வொரு தொகுதிக்கும் தனித் தனி கூண்டுகள் அமைக்கப்படும். தொகுதிகளில் வேட்பாளர்களின் எண்ணிக்கையினை பொறுத்து 14 முதல் 30 சுற்றுகள் வரை நடைபெறலாம்.
வாக்கு எண்ணிக்கையை எந்த வித சச்சரவுகளும் இல்லாமல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதோடு, கொரோனா கட்டுப்பாடுகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் கிடுக்கிப் பிடிக்கும் உள்ளாகி இருக்கிறது தேர்தல் ஆணையம். நீதிமன்றத்தின் காட்டமான அறிவுறுத்தல்களை தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை அதிரடியாக விதித்தது.
வாக்கு எண்ணிக்கைக்கு வரும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 72 மணி நேரத்துக்கு முன்னர் அரசியல் கட்சி முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி தேர்தல் அலுவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட செய்தி வெளியானதை அடுத்து முகவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் பேசு பொருளானது.
விருதுநகரில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள் என 2527 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், புதுக்கோட்டையில், 54 அதிகாரிகள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா தொற்று காரணமாக இதுவரையில் 6 தேர்தல் அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளார் என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை வாக்கு எண்ணும் மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அப்போது, வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்படும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் போது, தபால் வாக்குகளே முதலில் எண்ணப்பட உள்ளது. தபால் வாக்குகள் ஒரு சுற்றுக்கு 500 வாக்குகள் மட்டுமே எண்ணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் நிலையில், முடிவுகள் வெளியாக தாமதமாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது, முகவர்கள் வெளியே செல்ல நேரிட்டால் அவர்களுக்கு மீண்டும் உள்ளே அனுமதி கிடையாது எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்றுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் போதிய காற்றோட்டம் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
வெற்றிச் சான்றிதழ்களை பெற வேட்பாளர்களுடன் இரண்டு நபருக்கு மட்டுமே அனுமதி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கையின் போதும், வாக்கு எண்ணிக்கைக்கு பின்னும் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தும், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் தேவையான கொரோனா கட்டுப்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு எனவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட சுகாதார அதிகாரிகள் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.