Advertisment

முதல்வர் ரேஸில் இபிஎஸ்- ஸ்டாலின்: மீண்டும் இரு தலைவர்களை மையப்படுத்தி அரசியல்

ஒருவர் தற்செயலான முதல்வர். மற்றவர் அரசியலில் சீராக வளர்ந்தவர். ஒருவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். மற்றவர் மாநிலத்தின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவரின் மகன். தமிழகத்தில் ஏப்ரல் 6 ம் தேதி கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல் நடைபெறுகிறது. சண்டே எக்ஸ்பிரஸ் முதல்வர் பதவிக்கு போட்டியிடும் இருவர் பற்றி குறிப்பிடுகிறது.

author-image
WebDesk
New Update
முதல்வர் ரேஸில் இபிஎஸ்- ஸ்டாலின்: மீண்டும் இரு தலைவர்களை மையப்படுத்தி அரசியல்

திமுக தலைவர் மு.கருணாநிதியின் அரசியல் வாரிசு மு.க.ஸ்டாலின்தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்பது வழக்கமான ஒன்று. இருப்பினும், குடும்ப அரசியலில் வழக்கத்திற்கு மாறாக அவர் ஜனவரி, 2017ல் திமுகவின் செயல் தலைவராக வருவதற்கு 64 வயது வரை காத்திருக்க வேண்டியிருந்தது. பின்னர், ஆகஸ்ட் 7, 2018 அன்று தனது தந்தை இறந்த பிறகு கட்சித் தலைவராக வந்தார்.

Advertisment

மு.க.ஸ்டாலின் மெதுவாகவும் படிப்படியாகவும் கட்சித் தலைமை பதவிக்கு உயர்ந்தார். அசாதாரண சூழ்நிலை நிலவியபோது, அதிமுக தலைவி ஜெயலலிதாவின் விசுவாசிகளில் ஒருவரான எடப்பாடி கே பழனிசாமி தமிழக முதல்வரானார்.

ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பரில் இறந்தார். கட்சியில் ஒற்றைத் தலைமையாக இருந்த அவர் தனது கட்சியை துயரத்தில் ஆழ்த்தியது. அடுத்தகட்ட தலைவர்கள் காலியாக இருந்த அவருடைய இடத்திற்கு வெளிப்படையாக உரிமை கோரி போராடினார்கள். அப்போது மூண்ட நெருப்பு இன்னும் தணியவில்லை.

தமிழ்நாட்டில் மாநில அரசியல் ஆளுமைகளைச் சுற்றியே இருந்துள்ளது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் இல்லாத முதல் தேர்தல் இது. இருந்தாலும்கூட, இந்த தேர்தலிலும் இந்த போக்கு மாறவில்லை அல்லது இரண்டு புதிய தலைவர்களின் தலைமையில், அதாவது திமுக தரப்பில் மு.க.ஸ்டாலினும் அதிமுக தரபில் எடப்பாடி பழனிசாமியும் மோதுகின்றனர். இருவருடைய தலைமையிலான கூட்டணிகள் 70-80% வாக்காளர்களைக் கொண்டுள்ளனர்.

அனுபவம் Vs புதியவர்

எடப்பாடி பழனிசாமி போல இல்லாமல், வாழ்க்கையின் பிற்பகுதி வரை கட்சித் தலைவராக அறிவிக்கப்படாவிட்டாலும் ஸ்டாலின் நீண்ட காலமாக, தனது தந்தையின் நிழலாக இருந்தார். 5 ஆண்டுகள் முன்னதாகவே அரசியலில் சுழன்று செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

சென்னையில் ஒரு வி.வி.ஐ.பி-யின் குழந்தையாக வளர்ந்த ஸ்டாலினைப் போல இல்லாமல், இ.பி.எஸ்-க்கு வேறு ஒரு பின்னணி உள்ளது - அவர் சேலத்தில் ஒரு கவுண்டர் (ஓபிசி) விவசாயி குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்களை அனுபவம் மூலமாக தன்னை சரி செய்துகொள்ளும் வாய்ப்பு மு.க. ஸ்டாலினுக்கு கிடைத்தது. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே சசிகலாவால் முன்னெடுக்கப்பட்ட ஒரு முயற்சியில், மிகவும் அதிர்ஷ்டமான ஒரு சூழ்நிலையில் முதல்வர் பதவி இ.பி.எஸ்-க்கு வந்தது.

மு.க.ஸ்டாலினுக்கு தலைவர் பதவி சென்றதால் அவருடைய மூத்த சகோதரர் மு.க.அழகிரி அதிருப்தியில் உள்ளார். அதனால், மு.க.ஸ்டாலினுக்கு எந்தவிதமான சவாலும் இல்லை. இப்போது அவர் ஒரு கட்சித் தலைவராக, திமுக மீது வைத்திருக்கும் பிடிப்பு முழுமையானது.

கட்சியில் தனது மகன் உதயநிதியை உயர் பதவிக்கு கொண்டுவர மு.க.ஸ்டாலின் தெளிவான முடிவுகளை எடுத்தபோதும், அவர் எந்தவொரு எதிர்ப்பையும் எதிர்கொள்ளவில்லை. அவருடைய சகோதரி தூத்துக்குடி எம்.பி கனிமொழி, கட்சியில் தனது இடத்தை உறுதிப்படுத்தத் தெரியவில்லை.

ஜெயலலிதாவின் நம்பிக்கையான அமைச்சர்களில் ஒருவரான செந்தில் பாலாஜி, அவரது மரணத்திற்குப் பிறகு, சசிகலா-டிடிவி தினகரன் முகாமுக்கு சென்றார். 2018ன் பிற்பகுதியில் திமுகவில் சேருவதற்கு முன்பு, அவர் ஸ்டாலினைப் பற்றி கூறுகையில், “நான் ஜெயலலிதா, தினகரன் மற்றும் இப்போது தளபதியுடன் பணியாற்றியுள்ளேன். தளபதி மிகவும் எளிதில் அணுகக்கூடிய தலைவர் என்று நான் கூறுவேன். அவர் ஒருபோதும் ஒரு படிநிலையை திணிப்பதில்லை… அவர் எனக்குத் தெரிந்த மிகவும் கடினமான உழைப்பாளி” என்று கூறினார்.

ஸ்டாலினைப் போல இல்லாமல், இ.பி.எஸ் மிகவும் தள்ளாட்டத்துடன் தொடங்கினார். பாஜகவிடம் அவர் அவ்வளவு எளிதில் பாதிக்கக்கூடியவராக இருந்தார் என்பதை சுற்றி இருந்தவர்கள் நினைவு கூர்ந்தனர். அவருக்கு தன்னை தேர்ந்தெடுத்த சசிகலாவை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, கட்சியில் இரண்டு அதிகார மையங்கள் உருவானது. சசிகலா மற்றும் பாஜக ஆதரவு பெற்ற ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். ஆனால், சசிகலா அணி ஓ.பன்னீர்செல்வத்தை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடித்து 2017ம் ஆண்டின் தொடக்கத்தில் இ.பி.எஸ்-ஐ முதல்வராக்கியது. விரைவில், சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். சசிகலா சிறையில் இருந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இ.பி.எஸ் அணிகள் ஒன்று சேர்ந்து நிபந்தனையின் பேரில், அவரை கட்சியில் இருந்து விலக்கி வைத்தனர்.

ஆனால், அதற்குப் பிறகு நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன. இபிஎஸ்-ஐ பன்னீர்செல்வம் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டார். சசிகலா குறித்த அவரது நிலைப்பாடும் மாறிவிட்டது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் அழுத்தம் இருந்தபோதிலும் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் யோசனையை ஏற்க மறுத்துவிட்டார்.

2018 ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஜெயலலிதாவைப் போலவே டஜன் கணக்கான வாகனங்களில் அணிவகுத்துச் சென்றார். ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்தார். பதவி நீக்கம் செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எம்.மணிகண்டனுக்கு இந்த முறை போட்டியிட சீட் இல்லை என்பதை இ.பி.எஸ் உறுதி செய்துள்ளார்.

மேற்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் கூறுகையில், “இ.பி.எஸ் தனது கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த அதிகமான நபர்களை காவல்துறையிலும், அரசாங்கத்தின் முக்கிய பதவிகளிலும் கொண்டுவந்ததன் மூலம் கட்சி மற்றும் அரசாங்கத்திற்குள் அதிகாரத்தை பலப்படுத்தினார். அவர் ஒரு தற்செயலான முதல்வராக இருந்தார். ஆனால், அவர் தன்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறார்.” என்று கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில் அரசாங்கம் ரூ.2 லட்சம் கோடி கடன் பெற்றதை சுட்டிக்காட்டிய அமைச்சர், “அவர் அந்த பணத்தை வெவ்வேறு பணிகள் மற்றும் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தினார் என்பதை இது காட்டுகிறது. நீங்கள் ஊழலை நோக்கி 10-15% எழுதினாலும், அது இன்னும் நிறைய வளர்ச்சித் திட்டங்களுக்கு செல்கிறது”என்று அந்த அமைச்சர் கூறினார்.

இருப்பினும், நீட் தேர்வு நடத்துவதற்கும், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க மாநில அமைச்சரவை முடிவெடுத்தாலும், விடுவிப்பதில்லை என்பதற்கும் பொதுமக்கள் எதிர்க்கும் பல விஷயங்களில் மத்திய அரசின் பல அழுத்தத்திற்கு இ.பி.எஸ். ஆளாகியிருக்கிறார்.

இருப்பினும், ஸ்டாலினின் முகாம் அமைதியாக நம்பிக்கையுடன் உள்ளது. திமுக மெதுவாக செயல்படுகிறதா என்று கேட்டதற்கு, ஒரு தலைவர், “நாங்கள் ஓய்வாக இருப்பதாக தோன்றுகிறதா? ஆமாம், இருக்கலாம். ஏனென்றால், இந்த முறை நாங்கள் வெற்றி பெறுகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்.” என்று கூறினார்.

ஆனால், இ.பி.எஸ் சாலையில் பிரசாரம் செய்யும் நிகழ்ச்சிகள் எதைக் காட்டுகிறது என்றால், அவர் மிகவும் மோசமாக எதுவும் செய்யவில்லை. அவர் தனது ஒவ்வொரு பிரசார இடத்திலும் நல்ல கூட்டத்தை ஈர்க்கிறார். அவருடைய உரைகள் அரசாங்கத்தின் திட்டங்களை பரப்புகின்றன. முந்தைய 2006-1 திமுக ஆட்சியின் போது ரவுடிசத்தின் மோசமான அத்தியாயங்களைப் பற்றி மக்களுக்கு நினைவூட்டுகின்றன.

“ஜெயலலிதா இறந்தபோது, ​​அதிமுகவும் இறந்துவிடும் என்று நினைத்தார். அவருக்கு பொறுமையில்லை. அவர் முதல்வராவதற்கு துடித்தார். துரதிர்ஷ்டவசமாக, என்னைப் போன்ற ஒரு விவசாயி மிகவும் பிந்தங்கிய ஒரு பின்னணியில் இருந்து வருவார் என்று அவர் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை.” என்று கருணாநிதியின் பிறப்பிடமான திருவாரூரில் ஒரு பெரிய கூட்டத்தில் இ.பி.எஸ் கூறினார்.

இந்த ‘விவசாயி’ பிம்பத்தைதான் இந்த தேர்தலில் இ.பி.எஸ் காட்டி வருகிறார். அவர் ஸ்டாலினை கேலி செய்கிறார். அவரது அறிக்கைகளை அசிங்கப்படுத்துகிறார். ஸ்டாலினின் உளறல்களை சுட்டிக்காட்டுகிறார். அவரது உரைகளை சுட்டிக்காட்டி அவர் முதல்வர் வேட்பாளருக்கு தகுதியற்றவர்” என்று கூறுகிறார்.

அவரது பதவிக்காலத்தில் பல பெரிய ஒப்பந்தங்கள் மீதான பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யும் போது இபிஎஸ் சமமாக சவால் விடுகிறார். அதில் பல உறவினர்கள் அல்லது அவரது நெருங்கிய உதவியாளர்களுக்கு தொடர்பு உள்ளது.

டிசம்பர் 2020 இல், மு.க.ஸ்டாலின் அதிமுக அமைச்சர்களுக்கு எதிராக 97 பக்க ஊழல் ஆவணத்தை சமர்ப்பித்தார். அதில் உறவினர்களுக்கு ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக இ.பி.எஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், அவரது போட்டியாளர்கள்கூட சமீபத்திய பத்தாண்டுகளில் எந்த முதல்வரும் கடந்த நான்கு ஆண்டுகளில் இ.பி.எஸ்-ஸைப் போல பயணம் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

ஸ்டாலினை விட அதிகமான பிரசார நிகழ்ச்சிகளில் இ.பி.எஸ் பேசியுள்ளர். திமுக தலைவர் ஒரு நாளைக்கு ஐந்து நிகழ்வுகளுக்கு மேல் பேசவில்லை. சில சமயங்களில் குறைவாகக்கூட பேசியிருக்கிறார். இபிஎஸ் ஒரு நாளைக்கு சுமார் 20 முதல் 22 இடங்களில் பிரசாரம் செய்கிறார். ஒவ்வொரு இடத்திலும் 2,000-10,000 பேர் கூட்டம் கூடுகின்றனர். மார்ச் இரண்டாவது வாரத்தில், அவர் குறைந்தது 120 தொகுதிகளில் பிரசாரம் செய்தார். அவருடைய பெரும்பாலான சாலை வழியே செய்த பிரசாரக் கூட்ட காட்சிகள் நன்கு விளம்பரப்படுத்தப்பட்டது.

பொதுக்கூட்டங்கள் இல்லாத நிலையில், இரு கட்சிகளும் பயன்படுத்தும் ஒரு உத்தி, சாலை வழியாக வாகனங்களில் இருந்தபடி பிரசாரம் செய்வதை மேலே இருந்து புகைப்படங்கள் எடுத்து விளம்பரப்படுத்துவதாகும். ட்ரோன்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சிறிய நகரங்களில் பெரிய கூட்டங்கள் இருப்பதாக காட்சி அளிக்கிறது.

நிர்வாகி

இருவரில், ஸ்டாலின் நிர்வாகத்தில் சிறந்த சாதனை படைத்துள்ளார். அவர் சென்னை மேயர் (1996-02) மற்றும் துணை முதல்வர் (2006-11) போன்ற நிர்வாக பதவிகளில் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில்தான் சென்னை நகரம் முக்கிய திட்டங்களைக் கண்டது. மேம்பாலங்களைக் கட்டுவது மற்றும் ‘சிங்காரா சென்னை’ கழிவு மேலாண்மை திட்டத்தைத் தொடங்கியது என பல திட்டங்களைக் கொண்டு வந்தார்.

அத்திக்கடவு-அவினாசி நிலத்தடி நீர் திட்டம் மற்றும் குடிநீர் விநியோகத் திட்டம் உள்ளிட்ட சில முக்கியமான திட்டங்களை இ,பி,எஸ் பெருமையாகக் கூறலாம். ஸ்டாலின் சென்னையில் மேம்பாலங்களைக் கட்டினால், இ.பி.எஸ் சேலத்தில் அதேபோல செய்துள்ளார். அவருடைய எடப்பாடி தொகுதி சேலத்தில் ஒரு பகுதியாகும். ஜெயலலிதா இல்லாத தேர்தலில், இ.பி.எஸ்-க்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே தவிர்க்க முடியாத ஒப்பீடுகள் உள்ளன.

தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துக்குடிக்கு அருகிலுள்ள கோவில்பட்டியில் தேர்தல் பிரசார இடைவேளையில், இது குறித்து பேசுகையில், “அம்மாவைவிட இ.பி.எஸ் மிகவும் திறமையானவர்… அதே நேரத்தில் ஜெயலலிதா சந்தேகத்திற்கு இடமின்றி ஈர்ப்புமிக்க தலைவராக இருந்தார்” என்றார்.

ஆட்சி அதிகாரத்தை யார் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், திறமையான அதிகாரத்தால் நடத்தப்படும் நற்பெயரை தமிழகம் பெற்றுள்ளது. “தமிழ்நாட்டில், ஒரு திறமையான நிர்வாக மாதிரியாக அதிகார மையத்துவத்திற்கு சுதந்திரம் வழங்கப்படுகிறது. இது ஒரு திறமையான அமைப்பால் ஆதரிக்கப்படுகிறது” என்று அரசாங்கத்தின் மூத்த செயலாளர் ஒருவர் கூறினார்.

ஐ.ஜி. அளவில் இருக்கும் அதிகாரி ஒருவர், ஸ்டாலின், துணை முதல்வராக இருந்தபோது தனது அணியில் மிகச் சிறந்த மற்றும் தூய்மையான அதிகாரிகளை வைத்திருந்ததாகத் தெரிகிறது என்று கூறினார்.

அதிமுகவில் உள்ள பல அதிகார மையங்களில் இ.பி.எஸ் அரசாங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக அதிகாரத்துவ மட்டத்தில் குற்றம் சாட்டுகின்றனர்.

“பல அமைச்சர்கள் பினாமி முதல்வர்களாக செயல்படுகிறார்கள். சில வட்டார, சமூகத் தலைவர்கள் அமைச்சர்களாக செயல்படுகிறார்கள்” என்று மூத்த செயலாளர் ஒருவர் கூறினார்.

அத்தகைய ஒரு அதிகார அமைப்பில், இ.பி.எஸ் தோல்வியுற்றார். அவரது வலிமை - அவர் தனது கட்சி சகாக்களிடம் அரிதாகவே நெகிழ்ந்துகொடுத்தார்.

முக்கிய முடிவுகள் குறித்து இளைய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்கூட இ.பி.எஸ்-க்கு தெரியாமல் மறைத்த சம்பவங்கள் உள்ளன.

அதுபோன்ற ஒரு சம்பவம், கடந்த மாதம் தனது அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சரின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி எஸ்.பி.க்களை மாற்றியது நடந்துள்ளது. அவர் அதை அறிந்ததும், ஆத்திரமடைந்து இ.பி.எஸ் உத்தரவுகளை மாற்றுமாறு கேட்டார்.

தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அவர் மெதுவாக செயல்படுவதாக காணப்பட்டது. சாதான்குளத்தில் காவல் கொலை வழக்கில் - தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போலீஸ் காவலில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட போலீசார்களை சஸ்பெண்ட் செய்வதற்கு 10 நாட்கள் ஆனது. இதேபோல, 2018ம் ஆண்டில் ஒரு பெண் எஸ்.பி.யால் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஐ.ஜி பதவியில் உள்ள அதிகாரி எஸ்.முருகன் வழக்கிலும், அவரை கடந்த வாரம் ஐ.ஜி-தெற்கு மண்டலம் பதவியில் இருந்து மாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. சிறப்பு டிஜிபி-யால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஐ.பி.எஸ் அதிகாரியின் வழக்கில், மெட்ராஸ் ஐகோர்ட்டின் பல அறிவுறுத்தல்களுக்குப் பிறகுதான் அரசாங்கம் அவரை மார்ச் 18ம் தேதி இடைநீக்கம் செய்தது.

“காவல்துறையில் சுமார் 30% பெண்கள் உள்ளனர். அவர்கள் கடுமையான புகாருடன் முதல்வரை சந்தித்த பிறகும் அவர்களால் அடிப்படையான நீதியைப் பெற முடியாவில்லை என்றால், அவர்கள் ஏன் இந்த அரசாங்கத்தை நம்ப வேண்டும்” என்று டிஐஜி பதவியில் உள்ள ஒரு அதிகாரி கூறினார்.

முந்தைய தேர்தல்களில், திமுக ஆட்சியின்போது நில அபகரிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தொழிலதிபர் ‘லாட்டரி மன்னன்’ சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் ராஜாசங்கர், ஸ்டாலினுடைய பிரச்சாரத்திற்கான ஆதாரங்களைத் திரட்டினர்.

இந்த முறை மார்ட்டின் அணி ஸ்டாலின் முகாமிலிருந்து பெரும்பாலும் வெளியேறவில்லை என்றாலும், ராஜாசங்கர் மற்றும் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இப்போது அவரது முக்கிய நம்பிக்கையானவர்களாக கருதப்படுகிறார்கள். அவரது தேர்தல் குழுவில் எஸ்.என்.ஜே டிஸ்டில்லரிஸ் தொழிலதிபர் எஸ்.என்.ஜெயமுருகன், மிகவும் கறைபடிந்த திமுக தலைவர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன் மற்றும் எ.வ.வேலு (கடந்த வாரம், வருமானவரித் துறை அவரது வீடு அலுவலகங்களில் நடத்திய சோதனைகளில் ரூ.3.5 கோடி பறிமுதல் செய்தது) ஆகியோர் உள்ளனர்.

இது தவிர, கருணாநிதி காலத்திலிருந்து பாரம்பரிய அரசியல் குழுவும் உள்ளது. திமுக சார்பாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கிய திருச்சியைச் சேர்ந்த திமுகவின் மூத்த தலைவர் கே.என்.நேரு, கட்சியின் முன்னாள் அமைச்சர் துரைமுருகனைத் தவிர முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோரும் உள்ளனர்.

இ.பி.எஸ்-ஸின் பிரசார நிகழ்ச்சிகள் பெரும்பாலும் உள்ளூர் தலைவர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஸ்டாலினின் கருத்துக் கணிப்பு பிரசாரங்களில் ஐ-பேக் சீருடை ஊழியர்களின் படையைக் கொண்டுள்ளன.

ஐ-பேக் இருந்தபோதிலும், ஸ்டாலின் தனது சொந்த பாணியில் வேட்பாளர் தேர்வை மேற்கொண்டதாகத் தெரிகிறது. ஒவ்வொரு சீட்டுக்கும் அவர் ஐ-பேக் மற்றும் அவரது கட்சி மாவட்ட செயலாளர்களிடமிருந்து தலா மூன்று பெயர்களை சேகரித்தார். அதன் பிறகு, அவர் ஒரு இணை பட்டியலில் தேர்வு செய்தார். “மூன்று பட்டியல்களிலும் இடம் கிடைத்த அந்த பெயர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்பட்டது” என்று ஒரு திமுக தலைவர் கூறினார்.

ஸ்டாலின் முகாமில் கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் நபர் சபரீசன் என்றால், இ.பி.எஸ் முகாமில் “எஸ்எம்எஸ்” உள்ளது: தேர்தல் உத்தி நிபுணர் சுனில், இ.பி.எஸ் மகன் மிதுன் குமார் மற்றும் தமிழக காவல்துறையின் முன்னாள் புலனாய்வுத் தலைவர் கே.என். சத்தியமூர்த்தி ஆகியோர் உள்ளனர். இ.பி.எஸ்-ஸின் நெருங்கிய உதவியாளர் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர் இளங்கோவன் ஆகியோர் உள்ளனர்.

ஸ்டாலினுக்கான வாய்ப்புகள்

ஒரு தேர்தலில் பல்வேறு மாறுபட்ட மற்றும் சிக்கலான காரணிகள் இருந்தபோதிலும், இப்போது, ​​ஸ்டாலினுக்கு குறைந்த பட்சம் இரண்டு வகைகளில் நன்மை உள்ளது.

ஒன்று, அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு எதிரான மனநிலை. அதேசமயம் ஸ்டாலின், இளைஞர்களிடையேயான தொடர்பையும், திறமையான நிர்வாகியாக அவரது பிம்பத்தையும்கொண்டு, ஆட்சி செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவார். 234 இடங்களில் 170க்கும் மேற்பட்ட இடங்களில் இரு கட்சிகளும் அந்தந்த கட்சி சின்னங்களில் போட்டியிடுவதால் ஆட்சிக்கு எதிரான மனநிலை உள்ளவர்கள் முக்கிய காரணியாக இருப்பார்கள்.

இரண்டு, அதிமுகவைப் போல இல்லாமல், கூட்டணி கட்சிகளுடன் திமுக நடத்திய பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை வலுவானதாகவும் இருந்தது. அதோடு, அவர்களின் கூட்டணி பல்வேறு பிரிவுகளையும் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

மொத்தம் உள்ள 234 இடங்களில் 25 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸைத் தவிர, கூட்டணியில் உள்ள தோல்.திருமாவளவனின் தலித் கட்சி வி.சி.க, சிபிஐ மற்றும் சிபிஎம், வைகோவின் மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மற்றொரு முஸ்லீம் கட்சியான மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளன.

மறுபுறம், டி.டி.வி தினகரன் தலைமையிலான தனது சொந்த கட்சி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக இ.பி.எஸ்., காவிரி டெல்டா பிராந்தியத்திலும் தெற்கு தமிழ்நாட்டிலும் அதிமுக தொண்டர்களின் வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளது. இது தவிர, கடந்த ஒரு மாதத்தில் கேப்டன் விஜயகாந்த்தின் தேமுதிக மற்றும் கே.கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி உட்பட அதிமுக குறைந்தபட்சம் ஆறு கூட்டணி கட்சிகளை இழந்ததால் அதன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பேரழிவு தந்துள்ளது.

பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதால் சிறுபான்மை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வாக்குகள் தடைபட்டுள்ளது. அவர்கள் 12 சதவீதம் வாக்காளர்களாக உள்ளனர்.

அதிமுக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் பாஜக தமிழகத்தில் எங்கும் இருந்திருக்காது. ஆனால், முதல்வர் பதவியில் இந்த வரையறுக்கப்பட்ட நேரத்தில் அவர் என்ன செய்தாலும் இ.பி.எஸ் பாராட்டப்பட வேண்டும். அவருக்கு வழி இருந்திருந்தால், பாஜக அதிமுக கூட்டணியில்கூட இருந்திருக்காது.” என்று கூறினார்.

ஆனால், திமுகவை மிகவும் வேதனைக்குள்ளாக்குவது என்னவென்றால், உள்ளூர் கட்சி தலைவர்கள் கடைசி ஆட்சிக் காலத்தில் அவர்கள் கடுமையாக நடந்து கொண்டனர். அரை டஜன் திமுக அமைச்சர்கள் நில அபகரிப்பு, சட்டவிரோத குவாரி மற்றும் கொலை போன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

இருப்பினும், ஒரு திமுக தலைவர் கூறுகையில், ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் அதை அனுமதிக்க வாய்ப்பில்லை என்று கூறினார். “அவர் மாற்றங்களைச் செய்கிறவர் … கடந்த முறை போலவே எங்கள் மாவட்ட செயலாளர்களையும் உள்ளூர் தலைவர்களையும் அதேப்போல, செல்ல அவர் அனுமதித்தால், திமுக ஒருபோதும் திரும்பி வராது என்பதை அவர் அறிவார்” என்று கூறினார்.

Dmk Aiadmk Edappadi K Palaniswami M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment