தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிவுக்கு வரவுள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் இலவச பொருட்களின் மதிப்பீடு குறித்துதேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் மார்ச் மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 5 மாநில அரசியல கட்சியினர் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தங்களது தரப்பில் தேர்தல் பணிகளை கவனித்து வந்தது. இதில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் அசாம் மற்றும் மேற்குவங்க மாறிலத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 3 மாநில தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெறவுள்ளதால் 5 மாநிலத்திற்கும் சேர்த்து மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து வாக்கு எண்ணும் நாளுக்காக அரசியல் கட்சிகள் காத்திருக்கும் நிலையில், தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு என்பது கறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து தேர்தல் ஆணையம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தது. இதில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலரின் வீடுகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கோடிக்கணக்கான பணம், நகைகள், மதுபான பாட்டில்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. தற்போது 5 மாநிலங்களிலும் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், கைப்பற்றப்பட்ட பணம் ரூ 1000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிக பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்ட மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில், அசாம் மாநிலத்தில் 27.09 கோடி பணம், 41.97 கோடி மதிப்புள்ள மதுபானம், 34.41 கோடி மதிப்புள்ள மருந்துபொருட்கள், 15.18 கோடி மதிப்புள்ள இலவச பொருட்கள், 3.69 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் என மொத்தம் 122.35 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், 5.52 பணம், 0.70 கோடி மதிப்புள்ள மதுபானம், 0.25 கோடி மதிப்புள்ள மருந்துபொருட்கள், 3.06 கோடி மதிப்புள்ள இலவச பொருட்கள், 27.42 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் என மொத்தம் 36.95 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 236.96 கோடி பணம், 5.27 கோடி மதிப்புள்ள மதுபானம், 2.22 கோடி மதிப்புள்ள மருந்துப்பொருட்கள், 25.64 கோடி மதிப்புள்ள இலவச பொருட்கள், 176.46 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் உட்பட மொத்தம் 446.28 கைப்பற்றப்பட்டுள்ளது.
கேரளாவில் 22.88 கோடி பணம், 5.16 கோடி மதுபானம், 4.6 கோடி மருந்துப்பொருட்கள், 1.95 கோடி மதிப்புள்ள இலவசப்பொருட்கள், 50.86 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் என மொத்தம் 84.91 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில், 50.71 கோடி பணம், 30.11 கோடி மதுபானம் 118.83 கோடி மருந்துப்பொருட்கள், 88.39 கோடி இலவச பொருட்கள், 12.07 கோடி தங்க நகைகள் என மொத்தம் 300.11 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் மொத்தமாக 5 மாநிலங்களைளும் சேர்த்து 344.85 கோடி பணமும், 85.01 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், 161.60 கோடி மதிப்புள்ள மருந்துப்பொருட்கள், 139.18 கோடி மதிப்புள்ள இலவச பொருட்கள், 270.80 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் என் மொத்தம் 1001.44 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது 2016-ம் ஆண்டு தேர்தலில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை விட அதிகம் என்றும், தமிழகத்தில் கடந்த 2016 தேர்தலை விட 225.77 கோடி அதிகம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.