Advertisment

அரசியலில் குதித்த சகாயம் ஐஏஎஸ்: கமல்ஹாசனுடன் கைகோர்ப்பாரா?

முன்னாள் ஐஏஎஸ் சகாயம் அரசியலில் இறங்குவதை உறுதி செய்துள்ள நிலையில், அவர் அரசியல் கட்சி தொடங்கினால், அவர் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவாரா? அல்லது புதிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
sagayam ias enters politics, former ias sagayam, mnm, makkal needhi maiam, சகாயம், சகாயம் ஐஏஎஸ், கமல்ஹாசன், தமிழ்நாடு, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021, kamal haasan, sagayam ias contest in election, tamil nadu assembly elections 2021

கடந்த ஜனவரி மாதம் ஐஏஎஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ் விரைவில் அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று (பிப்ரவரி 21) சென்னையில் நடைபெற்ற தனது ஆதரவாளர்களின் கூட்டத்தில் அரசியலில் இறங்கி புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவேன் என்று உறுதியளித்துள்ளார்.

Advertisment

நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக அறியப்பட்டவர் சகாயம் ஐஏஎஸ். மதுரையில் கிரானைட் முறைகேடு விவகாரத்தில் விசாரணை நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் கொள்ளை நடந்திருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார். இவர் ஓய்வுக்குப் பிறகு, அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில், சகாயம் ஐஏஎஸ் கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தனது ஐஏஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதாக ராஜினாமா கடிதம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, அவர் ஐஏஸ் பணியில் இருந்து கடந்த ஜனவரி 2ம் தேதி விடுவிக்கப்பட்டார்.

சகாயம் ஐஏஎஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது அரசியல் பிரவேசத்தை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஜே.பி.பேரடைஸ் மைதானத்தில் ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம் என்ற நிகழ்ச்சியில் தான் அரசியலில் இறங்குவதை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்கள் அனைவரும் ஊழல் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

முன்னாள் ஐஏஎஸ் சகாயம், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், “தமிழக அரசு பணியில் நேர்மையாக பணியாற்றும் போது அவமானப் படுத்தப்பட்டேன். 27 ஆண்டுகளில் 25 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். ஏழைகளுக்கு என்னுடைய அரசுபணியை செய்ய முடியாமல் தடுக்கப்பட்டேன். இந்த அடிப்படையில் தான் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இளைஞர்களோடு இணைந்து சமூகப் பணியாற்றத் தொடங்கினேன். அரசியல் தாக்கத்தோடு நான் பயணிக்கவில்லை. அரசியல் களம் எளிதானது இல்லை. ஊழல்வாதிகள் அவ்வளவு சாதாரணவாதிகள் அல்ல. நான் எந்த நடிகரையும் நேரில் சந்தித்ததோ அவருக்கு ஆதரவாக இருந்ததோ இல்லை.

நான் எங்கு சென்றாலும் இளைஞர்கள் என்னை அரசியலுக்கு வரவேண்டும் என பல ஆண்டுகளாக அழைகிறார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் லஞ்சம், ஊழலை ஒழித்து, மொழிப்பற்றோடு தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அரசியல் களம் காண்போம் என்கிற உங்களது கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் காமராஜர், கக்கனை போல் நேர்மையாக இருந்து சாதி மத பாகுபாடு இன்றி தமிழகத்தில் ஊழலை ஒழித்து நேர்மையாக பாடுபட வேண்டும். புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவேன்” என்று உறுதி கூறினார்.

தொடர்ந்து பேசிய சகாயம், சாதி மத தடைகளை உடைத்து விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், உழைக்கும் வர்க்கம், நகர்ப்புற ஏழைகள் உட்பட அனைத்து மக்களையும் நேசிக்கவும் அவர்களுக்காக உழைக்கவும் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிற சூழலில், முன்னாள் ஐஏஎஸ் சகாயம் அரசியலில் இறங்குவதை உறுதி செய்துள்ளார். சகாயம் அரசியல் கட்சி தொடங்கினால், அவர் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவாரா? அல்லது புதிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தனித்து போட்டியிடுகிறார் என்றால் அவர் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் அப்போதுதான் அவர் வாக்கு சதவீதத்தை காட்ட முடியும். கூட்டணி அமைப்பது என்றால் நிச்சயமாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடியாது. அதனால், சகாயத்துக்கு கூட்டணி அமைக்க வேறு வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்த வகையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தேர்தலை சந்தித்தால், கூட்டணி அமைப்பதற்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையே வாய்ப்புகளாக உள்ளன. அதனால், சகாயம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் கைகோர்ப்பாரா என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Kamal Haasan Mnm Sagayam Ias Sagayam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment