மக்களவைப் பொதுத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மே 19 வரை நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்தது.
இந்நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார். 'நாட்டின் மீதான பிரதமர் மோடியின் எதிர்கால பார்வை என்னை ஈர்த்ததன் காரணமாக நான் பாஜகவில் இணைந்தேன்' என்று அப்போது கம்பீர் தெரிவித்திருந்தார். இதனால், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் கம்பீர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக இன்று(ஏப்.22) வெளியிட்டிருக்கும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கம்பீருக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாஜக சார்பில் கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் கம்பீர் போட்டியிடுகிறார்.