scorecardresearch

தேர்தல் 2019 : தமிழகத்தில் உதிக்கும் சூரியனும், உதிரும் நட்சத்திரங்களும்!

சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம் தொகுதியில் கடுமையான மும்முனை போட்டி நிலவும் என்பதில் ஐயமில்லை.

General Election 2019 Tamil Nadu
General Election 2019 Tamil Nadu

Arun Janardhanan

General Election 2019 Tamil Nadu : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக் குளம், காலை 10 மணியை கடந்த நிலையில், கொதிக்கும் கோடை வெயிலில் நின்று கொண்டிருக்கின்றோம். ஆனால் வெயிலை ஒரு பொருட்டாகவும் மதிக்காமல், கார்பெண்டர் ஜி.வினோத், தன்னுடைய குடும்பத்தார் அனைவரையும், கனிமொழி கருணாநிதி பேசும் பரப்புரையை கேட்க அழைத்து வந்திருக்கிறார். வினோத்தின் அருகே அவர் அம்மா மகேஸ்வரி, வினோதின் மூன்று வயது மகளை தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார். சிவந்து போன அந்த குட்டிக் குழந்தை, அதிமுகவின் நிரந்திர பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் போட்டோ பொறிக்கப்பட்ட பச்சை நிற துண்டுக்குள் கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

கனிமொழியின் வருகைக்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்க, மகேஸ்வரியும், மகேஸ்வரியுடன் கூலி வேலைக்கு செல்லும் ரமணீஸ்வரியும் கனிமொழிக்கும், தூத்துக்குடிக்குமான உறவைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராஜாத்தியம்மாள், கனிமொழியின் தாயார், மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் மனைவி தூத்துக்குடியை சேர்ந்தவர். இங்கு போட்டியிடும் தலைவர்கள், இங்கிருக்கும் நாடார் பெரும்பான்மையினரை மையப்படுத்தியே வாக்கு சேகரிக்கின்றனர். ராஜாத்தியம்மாளும் இந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தான் தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுகிறார். ஆனால் ராஜாத்தியம்மாள்ளோ தூத்துக்குடியில் இருந்து சென்று சென்னையை வசிப்பிடமாக மாற்றிக் கொண்டு வெகு ஆண்டுகள் ஓடிவிட்டன.

கனிமொழிய அவங்களுக்கு பிடிக்குமா ? என்று ரமணீஸ்வரி கேக்க, பிடிக்குறதுக்கும் பிடிக்காம போறதுக்கும் என்ன இருக்குது ? இவங்க இப்டிதான் வருவாங்க போவாங்க… ஆனா மோடிய தோக்கடிக்க நாங்க கனிமொழிக்கு தான் ஓட்டுப்போடுவோம் என்று நகர்ந்தார் மகேஸ்வரி.  கனிமொழி அவர்கள் தேர்வாக இல்லையென்றாலும், அவர்களின் ஓட்டானது பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் தமிழிசை சௌந்தராஜனுக்கு கிடையாது என்பதை உறுதிபட தெரிவித்தனர். மகேஷ்வரி நிச்சயமாக உதயசூரியனுக்கு தான் வாக்களிப்பேன் என்று கூறிக் கொண்டு பேத்தியை கொஞ்சினார். அவளோ, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த போது, அம்மா பேபி கிட்டில் வைத்துக் கொடுத்த பச்சை நிறத்துண்டில் அழகாய் தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

2014 தேர்தல் முடிவுகள்
2014 தேர்தல் முடிவுகள்

18ம் தேதி நடைபெற இருக்கும் பொதுத்தேர்தல்

இன்னும் 10 நாட்களில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நடந்த தேர்தல்கள் போல் இது இருக்காது. காரணம், இரண்டு மிகப் பெரும் ஆளுமைகளின் மரணம். ஆகஸ்ட் 2018 அன்று கருணாநிதி மறைய, ஜெயலலிதாவோ 2016 டிசம்பரில் காலமானார்.

இம்முறை தேர்தல் களமும், களமாடும் முறையும் முற்றிலும் மாறியிருக்கிறது. ஆளுங்கட்சியான பாஜக மாநிலத்தில் வெறும் 5 இடங்களில் இருந்து தான் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில், தேமுதிகவுடன் கை கோர்த்திருக்கிறது பாஜக. எதிரணியில் நிற்கும் காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தை கட்சிகள், மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் பாஜகவை எதிர்த்து இங்கு போட்டியிடுகின்றன.

எதிர் அணியில் இருப்பவர்கள், மோடியை ஆட்சியில் இருந்து நீக்க உங்களுக்கு விருப்பமில்லையா என்ற எளிமையான கேள்வியைக் கொண்டு பிரச்சாரத்தை துவங்குகின்றனர்.  ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் இது. அரசியல் நகர்வுகள் எல்லாம் முற்றிலும் மாறியிருக்கின்றது.

டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடைப்பட்ட அரசியல் தூரத்தினை கடந்த ஐந்தாண்டுகள் மிகவும் அதிகப்படுத்திவிட்டதாய் தான் கூற வேண்டும்.  சில நலத்திட்டங்கள், கொள்கைகள், அரசியல் முடிவுகள், தமிழகமெங்கும் போராட்டங்களை உருவாக்கியது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். நீட் பொதுத்தேர்வு, கன்னியாகுமரியில் அமைய இருக்கும் துறைமுகம், ஜல்லிக்கட்டு விளையாட்டில் மத்திய அரசு எடுத்த நிலைத்தன்மை என அனைத்தும் போராட்டங்களை தான் உருவாக்கியது.

பாஜக 5 வருடங்கள் மத்தியும், அதிமுக 8 வருடங்கள் மாநிலத்திலும் கொடுத்த ஆட்சியை கேள்விக்குறியாக்கி பிரச்சாரத்தில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவினர் கூடுமானவரையில் மோடி என்ற பதத்தை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். பாஜகவினரோ ஸ்வட்ச் பாரத், ஜி.எஸ்.டி, பண மதிப்பு நீக்கம் ஆகியவற்றை தாண்டி வெளிவரவில்லை.

சிவகங்கை பிரச்சாரத்தில் இருந்த எச்.ராஜா
சிவகங்கை பிரச்சாரத்தில்  எச்.ராஜா – புகைப்படம் அருண் ஜனார்தனன்

திமுகவின் நம்பிக்கை

தூத்துக்குடியில், கடந்த இரண்டு வருடங்களாக மழை இல்லாமல் தகித்து வரும் விளாத்திக்குளத்தில் நடைபெற இருக்கும் பிரச்சாரத்தில் பங்கேற்க ஓட்டுக் கேட்கும் வாகனத்துடன் கனிமொழியும், கட்சியினரும் வரிசையாக சொகுசு கார்களில் வருகின்றனர். ஒரு ஓட்டுக் கேட்கும் வாகனத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் வருகிறார்.

நடிகராக கோலிவுட்டில் வலம் வந்த உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தான் அரசியலில் நுழைந்தார். தன்னுடைய பிரச்சாரத்தில், மோடியின் ஆட்சியை உதவாக்கரை ஆட்சி என்றும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் இருவரையும் பாஜகவின் அடிமைகள் என்று பிரச்சாரத்தில் பேசி கொண்டிருந்தார் உதயநிதி.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று கூறி தன்னுடைய அத்தைக்காக வாக்கு சேகரித்தார் உதயநிதி. கனிமொழியோ கைகளை கட்டிக் கொண்டு, சிரித்துக் கொண்டு உதயநிதியின் பிரச்சாரத்தை கேட்டுக் கொண்டிருந்தார்.

தூத்துக்குடியில் சில வருடங்களாகவே மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரும் கனிமொழிக்கு இந்த தேர்தலில் இங்கு வெற்றி பெறுவோம் என்பதில் அதிக நம்பிக்கை இருக்கிறது. இதற்கு நேர் எதிராக கன்னியாகுமரி பகுதியில் நடக்கும் பிரச்சாரங்கள் பாஜகவின் தொய்வு முகத்தினை காஅட்டுகிறது.

2014ம் ஆண்டு தேர்தலில் பாமக, தேமுதிகவுடன் கூட்டணி வைத்து, பாஜக வென்ற ஒரே தொகுதி கன்னியாகுமரி மட்டும் தான். மத்திய இணை அமைச்சர், கன்னியாகுமரியின் நாடாளுமன்ற உறுப்பினர். ஒக்கி புயலின் கோரவம் மக்களை தாக்கிய ஒரு மாதம் கழித்து மீனவ கிராமங்களுக்குள் நுழைய முற்பட்ட போது, மக்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. அவருடைய பிரச்சார கூட்டம் மோடியின் சாதனைகளை மட்டுமே விளக்கிக் கொண்டிருந்தது.

ஒக்கி புயலில் 234 பேர் பலியாகினர். அதில் 162 நபர்கள் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள். கடலில் தத்தளித்தவர்களை காப்பாற்ற முறையான உபகரணங்கள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எதுவும் இல்லை என்று கைவிரித்த மத்திய மாநில அரசின் செயல்பாடுகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இந்நிலையில், மீனவர்களின் நலனை பாதுகாக்க புதிதாக அமைச்சகம் உருவாக்கப்படும் என மோடியும் கூறியிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கூறியிருக்கிறார்.

ஒக்கி புயலில் பாதிக்கப்பட்ட கிராமங்கள் மட்டுமல்லாமல், புதிதாக துறைமுகம் அமைக்கப்படும் என்று கூறப்பட்ட பகுதியில் இருக்கும் கிராமங்களும் பொன்னாருக்கு வரவேற்பினை அளிக்கவில்லை.   தூத்தூர் பகுதியில் வசிக்கும் மீனவர் ராபர்ட் ஃப்ரான்கோ கூறுகையில் “ராதாகிருஷ்ணன் கனவான இந்த துறைமுகம் கட்டப்படுவதால் எங்களின் கிராமங்கள் அழிந்து போகலாம். எங்களுக்கு மேம்படுத்தப்பட்ட படகுகளும், மீன்பிடி துறைமுகம் தான் தேவையே தவிர, பெரிய பெரிய கண்டெய்னர்கள் வந்து நிற்கும் துறைமுகம் வேண்டாம். ஏற்கனவே விழிஞ்சம் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் பெரிய அளவு பாதித்துள்ளன என்று கூறினார்.

மேலும் படிக்க : இந்திரா… சோனியா… ராகுல்… நேரு குடும்பத்தின் தென் திசை பாசம்

ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிடும் வசந்தகுமாரிடம் பேசுகையில் “2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்று நம்பிக்கையுடன் கூறினார். மேலும் 40000 கோடி ரூபாய்க்கு இங்கு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாய் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகின்றார். ஆனால் அதற்கான ஆதரங்கள் எங்கே. மீனவர்கள் மீன்பிடி துறைமுகங்கள் கேட்க, இவரோ பெரிய போர்ட் கட்டுவதில் தான் விருப்பம் காட்டுகிறார் என்று குற்றம் சாட்டினார். கன்னியாகுமரியில் வாழும் இந்து மற்றும் கிருத்துவ நாடார்களின் வாக்குகளை பெறும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இவரை போட்டியில் நிறுத்தியுள்ளது இந்த கூட்டணி.

கோவை தொகுதி நிலவரம்

பாஜக வேட்பாளராக 1998 மற்றும் 99ல் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் மீண்டும் களம் இறங்குகிறார். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இடதுசாரி கட்சி, பி.ஆர்.நடராஜனை இங்கு போட்டியாளாராக நிறுத்தியுள்ளது. ராதாகிருஷண் இங்கு இருக்கும் கவுண்டர் வகுப்பின் வாக்குகளை பெறும் முனைப்பில் களம் இறங்கியுள்ளார். தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி, இவருக்கு உறுதுணையாக இங்கு செயல்பட்டு வருகிறார்.

சிறு, குறுந்தொழில்களின் நகரமாக விளங்கி வரும் கோவையில் கனிசமான அளவு இந்து வாக்குகள் கிடைக்கப்பெற்றாலும், சமீபத்தில் நடைபெற்ற பொள்ளாச்சி கூட்டுப்பாலியல் பலாத்கார நிகழ்வுகள், ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவைகள் நடராஜனுக்கு ஆதரவாக வாக்களிக்க உதவுகின்றது.

2014ல் இருந்து 2018 வரை 43% வியாபாரிகள் வேலை இழந்துள்ளனர். 32% மைக்ரோ இண்டஸ்ட்ரீஸ், 35% சிறு தொழில் முனைவோர்கள், 24% நடுத்தர தொழில் முனைவோர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மட்டுமல்ல சிவகாசி, திருப்பூர், கரூர், ஒசூர், அம்பத்தூர், கிண்டி, கும்மிடிபூண்டி போன்ற நகரங்கள் இதனால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. திருச்சியில் அமைந்திருக்கும் பெல் நிறுவனமும் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்திருக்கிறது என்கிறார் கே.ஈ.ரகுநந்தன்.

கொங்கு வேளாள கவுண்டர்கள் அதிகம் இருக்கும் மற்றொரு பகுதி சேலம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரில் அவர் கொண்டு வந்திருக்கும் மேம்பாலங்கள், சாலைகள், போன்றவைகள் இங்கு அதிமுக வேட்பாளருக்கு பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும். இங்கு கே.ஆர்.எஸ் சரவணனை எதிர்த்து திமுக சார்பில் எஸ்.ஆர். பார்த்திபன் போட்டியிடுகிறார்.

சிவகங்கை

பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் நேரடியாக பலப்பரீட்சை நடத்தும் மற்றொரு களம். இங்கு ஏற்கனவே பலமுறை போட்டியிட்ட எச்.ராஜா பாஜக சார்பிலும், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரமும் நேரடியாக மோதுகின்றார்கள். எங்களுக்கு மோடியை வெளியேற்றுவதைத் தவிர தனி அஜண்டாவே கிடையாது என்கிறார் கார்த்தி. நிச்சயம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு நான் வெற்றி பெறுவேன் என்கிறார் கார்த்தி.

இந்து மக்களின் வாக்குகளை கைப்பற்றும் விதம் இங்கு போட்டியிடும் ராஜா, தன்னுடைய வாழ்வை ஆர்.எஸ்.எஸ் தொண்டராக ஆரம்பித்தார். இந்து மக்களின் தேவைகளுக்காக குரல் கொடுப்பேன். அதற்காக நான் வருத்தப்படமாட்டேன் என்று கூறுகிறார் அவர்.

அமமுக

இந்த கடும் போட்டிகள் மத்தியிலும் நினைவில் கொள்ள வேண்டியவர் அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன். 39 தொகுதிகளில் 38 தொகுதியில் அமமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அமமுகவின் இருப்பு என்பது அதிமுகவின் வாக்கு வங்கிகளை கலைப்பதோடு மட்டுமல்லாமல் வெற்றி வாய்ப்பினையும் கேள்விக் குறியாக்கிவிடும். மேலும் தவறான ஒரு வேட்பாளரின் வெற்றியையும் இது உறுதி செய்யும் என்று மூத்த அதிமுக பிரமுகர் ஒருவர் கூறுகிறார்.

தேனியில் காங்கிரஸ் தோற்பதற்கும், மதுரையில் இடதுசாரி தோற்பதற்கும், தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் தோல்வியடைவதற்குமான சாத்தியக் கூறுகளை அமமுக உருவாக்குகிறது. சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம் தொகுதியில் கடுமையான மும்முனை போட்டி நிலவும் என்பதில் ஐயமில்லை.

39 தொகுதிகளிலும் 30% வாக்குகளை அதிமுகவும், திமுகவும் பெறும். அமமுக குறைந்தது 10 தொகுதிகளிலாவது 20% வாக்குகளைப் பெறும். மாநிலம் முழுவதும் பார்த்தால் நிச்சயம் 15% வரையில் வாக்குகளை பெறும் என்பதால் பெரும்பான்மை யாருக்கு என்பதில் கேள்வியை உருவாக்கும் கட்சியாக அமமுக இருக்கும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர், திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டவர். எந்த தொகுதியிலும் வெற்றி உறுதி என்றில்லை. இருப்பினும் 3 முதல் 5% வரை வாக்கு வங்கிகளை தயார் செய்யும் முனைப்பில் இருக்கிறார் அவர்.

சிதம்பரம் தொகுதியில் நிற்கும் விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல்.திருமாவளவன் எந்த கட்சிகளும் தொகுதிக்குள் எதிர் வினையாற்றாமல் இருக்கும் வகையில் ஸ்ட்ராங்கான வேட்பாளராக இருக்கிறார். பெரியாரின் திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தொல்.திருமாவளவன், சிதம்பரத்தில் உள்ள ஜெயங்கொண்டான் பட்டிணத்தில் வாக்கு சேகரிக்கும் சேகரித்துக் கொண்டிருந்தார். தலித் பெண்கள் சூழ நின்று அவருக்கு வியூதியும் குங்குமமும் வைத்து எல்லை மாரியம்மன் நமக்கு துணை நிற்பார் என்று வேண்டிக் கொள்கிறார்கள்.

இந்த தேர்தலினால் நாங்கள் அடையப் போகும் நன்மை என்று எதுவுமில்லை. வாக்களித்துவிட்டு வந்து நாங்கள் வாழ்வோடு போராட வேண்டும் என்று கூறிச் சென்றார் அந்த கூட்டத்தில் இருந்து வெளியே வந்த 80 வயது மதிக்கத்தக்க மாணிக்கம் என்ற தொழிலாளி.

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Tamil App.

Web Title: General election 2019 tamil nadu a rising sun and setting stars in tn