மக்களவைத் தேர்தலுக்கு குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க கட்சி கோரிக்கை வைத்திருந்தது.
ஆனால் அ.ம.மு.க முறையாகப் பதிவு செய்யப்படாததால், அக்கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
”அப்படியெனில் எங்களுக்கு ஏதாவது பொதுச்சின்னம் ஒதுக்குங்கள், நாங்கள் கட்சியைப் பதிவு செய்யத் தயார், ஆனால் அதற்கான கால அவகாசம் இப்போது இல்லை” என தினகரன் தரப்பு கேட்டுக் கொண்டது.
அதன்படி டி.டி.வி தினகரன் அணிக்கு ஒரு பொதுவான சின்னத்தை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையே மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, சின்னம் இல்லாமலேயே பிரச்சாரம் செய்து வந்தது தினகரன் அணி.
இந்நிலையில் இன்று காலை அமமுக-வுக்கு ‘பரிசுப் பெட்டி’யை பொதுச்சின்னமாக ஒதுக்கியிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில், ‘பரிசுப் பெட்டி’ சின்னத்தில் டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க-வினர் போட்டியிடுகிறார்கள். இருப்பினும் அவர்கள் சுயேட்சைகளாகத் தான் கருதப்படுவார்கள்.