பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்வு செய்தது ஏன்? என்பது குறித்தான சென்டிமென்ட் பின்னணியை டிடிவி தினகரன் விவரித்தார். காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் தன்னை போலீஸார் சுற்றி வளைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பொதுச் சின்னம் கிடைக்குமா? என்பது கடந்த சில நாட்களாக விவாதமாக அமைந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை சென்று அந்தக் கட்சி போராடியது. இதைத் தொடர்ந்து, குக்கர் சின்னம் இல்லாவிட்டாலும் ஒரே சின்னத்தை வழங்க பரிசீலிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தச் சூழலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பரிசுப் பெட்டி சின்னம் வழங்கப்பட்டிருப்பதாக அந்தக் கட்சியின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இன்று காலையில் தெரிவித்தார். அடுத்த சில மணி நேரங்களில் சமூக வலைதளங்களில் அந்த சின்னத்தை அமமுக.வினர் டிரெண்ட் செய்தனர்.
பரிசுப் பெட்டி சின்னத்தை காஞ்சிபுரத்தில் இன்று பிரசாரத்திற்கு இடையே செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் கூறியதாவது: ‘36 பொதுச் சின்னங்களை கொடுத்து, அதில் ஒன்றை தேர்வு செய்யும்படி எங்களை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.
அந்தப் பட்டியலில் பரிசுப் பெட்டியைப் பார்த்ததுமே, அம்மா (ஜெயலலிதா) அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கிய பரிசுப் பெட்டகம் ஞாபகத்திற்கு வந்தது. அம்மாவை ஞாபகப்படுத்துவதாக இருந்ததால், அதை தேர்வு செய்தோம்.
நேற்று தென்சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோதுதான், தேர்தல் ஆணையத்தின் மெயில் வந்தது. அதற்கு நாங்கள் பதில் தெரிவித்து, இரவே பதில் மெயில் வந்தது. எங்கள் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேட்டபடியே இருந்ததால், அவரையே காலையில் அறிவிக்க கூறிவிட்டேன்.
எம்.ஜி.ஆர். நகரில் பிரசாரம் செய்தபோது தகவல் வந்தது, அம்மாவின் பரிசுப் பெட்டகம் என சென்டிமென்டாக பரிசுப் பெட்டியை தேர்வு செய்திருக்கிறோம். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் பொதுச் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி’ என்றார் டிடிவி தினகரன்.
காஞ்சிபுரத்தில் நேற்று பிரசாரம் முடிந்து, ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் டிடிவி தினகரன். இரவு 1 மணியளவில் ஒரு தாசில்தார் மற்றும் போலீஸார் அங்கு சோதனை போட குவிந்தனர். உடனே ஜெயா டிவி குழுவினர் அங்கு வந்து மேற்படி போலீஸாரை படமெடுக்க முயன்றார்கள். உடனே தாசில்தார் மற்றும் போலீஸார் அங்கிருந்து நழுவினர்.
இந்தத் தகவலை இன்றைய பேட்டியின்போது தெரிவித்த டிடிவி தினகரன், ‘எந்த நேரத்தில் சோதனைக்கு வருவது என நாகரீகம் வேண்டாமா? அரசு இப்படி சொன்னாலும், அதிகாரிகளுக்கு தெரிய வேண்டாமா?’ என கண்டனம் தெரிவித்தார்.