குஜராத் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஹர்திக் படேல் தேர்தல் பிரசார மேடையில் தாக்கப்பட்டார். அவரைத் தாக்கிய நபரை கட்சிக்காரர்கள் வளைத்துப் பிடித்தனர். இது தொடர்பான வீடியோ வெளியானது.
குஜராத்தில் பட்டேல் சமூக தலைவராக அடையாளப் படுத்தப்படுபவர் ஹர்திக் படேல். இவர் காங்கிரஸில் இணைந்து செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சிக்காக குஜராத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
குஜராத் சுரேந்தர நகர் தொகுதியில் இன்று (ஏப்ரல் 19) காலை பொதுக்கூட்ட மேடையில் ஹர்திக் படேல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மேடையேறிய ஒரு தாடி ஆசாமி, ஹர்திக் படேலின் வலது புறமாக சென்று திடீரென அவரை கன்னத்தில் அறைந்தார்.
ஹர்திக் படேலும் சுதாரித்துக் கொண்டு அந்த ஆசாமியை தாக்க முயன்றார். அதற்குள் கட்சியினர் மேற்படி ஆசாமியை பிடித்து வசமாக கவனித்தனர். இந்த நிகழ்வின்போது, சுரேந்தர நகர் காங்கிரஸ் வேட்பாளர் சோமா படேலும் மேடையில் இருந்தார்.
தாக்கிய நபரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். அவர் யார்? எதற்காக ஹர்திக் படேலை தாக்கினார்? என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வரும். பாஜக தலைமையகத்தில் நேற்று அந்தக் கட்சி எம்.பி. நரசிம்மராவ் மீது காலணி வீசப்பட்ட நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் தாக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.