முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா 4 ஆண்டு சிறை தண்டையை முடித்து நேற்று தமிழகம் திரும்பினார். அவருக்கு அவருடைய ஆதரவாளர்கள் வழிநெடுக அதிமுக கொடியுடனும் அமமுக கொடியுடனும் திரண்டு உற்சாகமாக வரவேற்றனர்.
சசிகலாவின் வருகையால் அதிமுகவில் மாற்றங்கள் ஏற்படு என்று அரசியல் நோக்கர்கள் சிலரால கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிமுகவில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ் மற்றும் முக்கிய அமைச்சர்கள் யாரும் சசிகலாவுக்கு ஆதரவாக இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
அதே நேரத்தில், சசிகலா பொது எதிரியான திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றினைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.
இதனால், அதிமுக – அமமுக இணையுமா? அல்லது சசிகலா, தினகரன் அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு முதல்வர் பழனிசாமி 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.
சசிகலாவின் வருகையை திமுக எப்படி பார்க்கிறது? அதிமுகவும் – அமமுகவும் இணைந்தால் அதிமுக பலம் பெறுமா? 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுகவுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் திமுகவுக்கு வருமா? என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில்தான், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “சசிகலா வருகையால் அதிமுகவுக்கு ஆபத்து இருக்கலாம். திமுகவுக்கு எந்த பிரச்னையும் கிடையாது… திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைய வேண்டும் என்பது, பாஜக முருகனின் ஆசை.. ஆனால், உடையாது.” என்று கூறினார்.
மு.க.ஸ்டாலின் பேட்டி மூலம், சசிகலா வருகையால் அதிமுகவுக்கு ஆபத்து என்று உறுதியாக சொல்லவில்லை. ஆபத்து இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம் என்ற பொருள்படவே கூறியுள்ளார். அதே நேரத்தில் திமுகவுக்கு எந்த பிரச்னையும் கிடையாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக – அமமுக ஒன்றிணைந்தால், பிரிந்திருந்த அதிமுகவின் வாக்குகள் ஒன்றிணையவே செய்யும். இதனால், அதிமுகவின் பலம் கூடும் என்றே அதிமுகவினரும் அமமுகவினரும் கருத்துகின்றனர். இதனால், திமுகவுக்கு நெருக்கடி ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், ஸ்டாலின் திமுகவுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளார்.
அதிமுகவின் முக்கிய அமைச்சர் ஜெயக்குமார், அமமுகவை திமுகவின் பி டீம் என்று அழைத்துள்ளார். இதனால், திமுக எதிர்ப்பு வாக்குகளை அமமுக பெற்று வாக்குகளை பிரிக்கும் என்று பொருள் கொள்ளப்பட்டது.
சசிகலா வருகை என்பது அதிமுக அமமுகவின் பிரச்னை சசிகலாவின் அமமுகவும் அதிமுகவும் இணைந்தால், அதிமுக பலம் அடைந்தாலும் என்ன நடந்தாலும் அதை திமுக சமாளிக்கும் என்ற நம்பிக்கையில் திமுக இருப்பதாகவே திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.