தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளுக்காக தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை அறிவிப்பதற்கு 5 மாதங்களுக்கு முன்னதாகவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்கினார். அப்போது தொடங்கிய தேர்தல் சூறாவளி பிரசாரப் பயணம் தேர்தல் அறிவித்த பிறகு உச்சத்தை அடைந்து வாக்குப்பதிவு முடிந்த பிறகுதான் முடிந்தது. 6 மாங்களுக்கு மேலாக, ஓய்வில்லாத தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட அலைச்சலில் இருந்து ஓய்வெடுப்பதற்காக ஏப்ரல் 16ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார். கொடைக்கானலில் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் என குடும்பத்தினர் அனைவரும் கொடைக்கானலில் தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார்கள்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மட்டும், நடிகர் விவேக் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக சனி்க்கிழமை கொடைக்கானலில் இருந்து சென்னை வந்து அன்று இரவே கொடைக்கானல் திரும்பினார்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின், துர்கா மற்றும் குடும்பத்தினர் கொடைக்காணலில் உள்ள மன்னவனூர், கூக்கால் மலை கிராமங்களில் இயற்கை எழிலை கண்டு ரசித்தனர்.
மு.க.ஸ்டாலின் கொடைக்காணலில் தங்கி ஓய்வெடுப்பதொடு மட்டுமல்லாமல், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில், ஈ.வி.எம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு எப்படி இருக்கிறது. கட்சியினர் எந்த அளவுக்கு கண்காணிப்புடன் இருக்கிறார்கள் என்பதை விசாரித்துக்கொண்டும் இருக்கிறார். ஈ.வி.எம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் வந்த கண்டெய்னர்கள் மற்றும் அடையாள அட்டைகள் இல்லாமல் நுழைந்த நபர்கள் என பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து திமுகவினர் தெரிவித்த நிகழ்வுகள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்த அன்று, கட்சிக்காரர்களும் திமுகவுக்கு தேர்தல் பிரசார உத்தி வகுத்து தந்த பிரசாந்த் கிஷோரின் ஐபெக் குழுவும் திமுக 180 இடங்கள் வரை வெற்றி பெறும் என்று ஒரே மாதிரியான எண்ணிக்கையை தெரிவித்தன. இதனால், சந்தோஷம் அடைந்த ஸ்டாலின் ஐபேக் குழுவினரையும் பிரசாத் கிஷோரையும் சர்பிரைஸாக நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.
வாகுப்பதிவுக்குப் அதிமுகவும் திமுகவும் இரண்டு கட்சிகளுமே தாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று கூறி வருகின்றனர். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் சில திமுகவுக்கு சாதகமாகவே இருந்தன. மேற்கு வங்கத்தில் இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகுதான், ஊடகங்கள் தேர்தலுக்குப் பிந்தைய எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளை வெளியிடும்.
இதனிடையே, தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என திமுகவினர் நம்பிக்கையுடன் கூறுவருவதால், திமுக வெற்றி பெற்றால் அமைச்சரவையில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதை மு.க.ஸ்டாலின் இப்போது பட்டியல் தயாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
முழுமையாக மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் அவர் தன்னை நிரூபித்தாக வேண்டிய நிலையில் இருக்கிறார். மேலும், 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அமையவிருக்கிற ஆட்சியில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமில்லாமல், தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைய உள்ள அமைச்சரவையில் மூத்த தலைவர்கள் யார் யார் இடம்பெறுவார்கள்? இளைஞர்களுக்கும் புதுமுகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுமா? அப்படி புதுமுகங்கள் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற உத்தேச பட்டியலும் யூகங்களும் அரசியல் நோக்கர்கள் விவாதிக்கப்படுகிறது.
கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, திமுகவின் தலைவரான மு.க.ஸ்டாலின் கட்சியில் தனக்கு சீனியர்களுண்டன் எந்த வகையிலும் முரண்படவில்லை. அதனால், ஸ்டாலினின் அமைச்சரவையில் நிச்சயமாக சீனியர்கள் அனைவரும் இடம்பெறுவார்கள்.
இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ள ஏற்கெனவே திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ,வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரிய கருப்பன், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வெள்ளக்கோவில் சாமிநாதன், கீதாஜீவன், பூங்கோதை ஆலடி அருணா, சுரேஷ்ராஜன் ஆகியோர் மீண்டும் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் மட்டுமில்லாமல், புது முகங்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நிலையும் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, அன்பில் மகேஷ், டாக்டர் எழிலன் போன்றவர்களும் அமைச்சவையில் இடம் வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் அன்பில் மகேஷ் திருச்சி திருவெறும்பூர் தொகுதியிலும் டாக்டர் எழிலன் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர். தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மூத்த தலைவர்களுடன் புதுமுகங்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.