விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் திருச்சி மற்றும் பெரம்பலூரில் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வர்த்தக பிரிவு நிர்வாகி ராஜாவின் நிறுவனத்தில் சோதனை நடக்கிறது.
தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வருமான வரித்துறையினரும் தொடர் சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.
வேலூரில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் நடந்த சோதனை, காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் சார்ந்த நிறுவனங்களில் சோதனை, ஓசூரில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ரெய்டு, திருச்செந்தூரில் திமுக மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் பண்ணை வீட்டில் ரெய்டு என இந்த நடவடிக்கை தொடர்கிறது.
இந்தச் சூழலில் பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் சென்ற காரில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ2.10 கோடி கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது யாருடைய பணம்? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
இதனைத் தொடர்ந்து திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வர்த்தக பிரிவு நிர்வாகி ராஜா என்பவரின் நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை விவரம் குறித்து வருமான வரித்துறையினர் அதிகாரபூர்வ தகவல் எதையும் இதுவரை வெளியிடவில்லை.