IT Raids DMK Leader Kanimozhi Residence: தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் குறிஞ்சி நகர் வீட்டில் வருமானவரித் துறை சோதனை. 10 அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியரின் தகவலின் பேரில், கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க - அமமுக அலுவலகத்தில் தடுக்கப்பட்ட போலீஸ்... வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!
கனிமொழி தங்கியுள்ள அந்த வீட்டிற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் வந்துள்ளார்.
இந்த ரெய்டு குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழிசை வீட்டில் கோடிகோடியாக பணம் வைத்துள்ளனர்; அங்கு ஏன் சோதனை நடத்தவில்லை? தேர்தல் ஆணையத்தில் முறையாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை; வரும் காலங்களில் தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் ஏற்படுத்த வேண்டும் என்பது என் கோரிக்கை" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரவு 10.30 மணியளவில் கனிமொழி வீட்டில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியே வந்தனர். கோஷம் எழுப்பிய திமுக தொண்டர்களை அப்புறப்படுத்திய போலீசார், பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகளை அங்கிருந்து காரில் அழைத்துச் சென்றனர்.
இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, "சுமார் 8.30 க்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ரெய்டு நடத்த அனுமதி கேட்டனர். சோதனை நடத்த அனுமதி இருக்கா-னு கேட்டேன். அதுக்கு முறையா பதில் அளிக்கவில்லை. இந்த நேரத்திற்கு சோதனை நடத்த வந்துள்ளீர்களே என்று கேட்டதற்கும் அவர்கள் சொன்ன பதில் சரியாக இல்லை. இருப்பினும், நாங்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம்.
9.30 மணிக்கு எனக்கு ஒரு சம்மன் கொடுத்தார்கள். அதில், உடனுக்குடன் நான் பதில் சொல்ல வேண்டும் என்றார்கள். இது சட்டத்திற்கு புறம்பானது.
நீங்க யாரை விசாரிக்க வந்தீங்க?-னு கேட்டேன். கேண்டிடேட்.. கேண்டிடேட் என்று சொன்னார்கள். எதிர்க்கட்சி வேட்பாளர் என்பதாலேயே என்னை சோதனை செய்திருக்கிறார்கள். ஒரு மணி நேரம் முழுமையாக சோதனை செய்த அதிகாரிகள், வீட்டில் ஒன்றுமே இல்லை என்று சொல்லி அவர்களாகவே சென்றுவிட்டார்கள்.
தமிழிசை வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது. அங்கு சென்று சோதனை நடத்தத் தயாரா?
தூத்துக்குடியில் எங்களை பயமுறுத்துவதாக நினைத்துக் கொண்டு சோதனை நடத்தி இருக்கிறார்கள். எந்தவித அடிப்படையும் இல்லாமல் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
தேர்தலை நிறுத்திவிடலாம் என்ற நப்பாசையில் சோதனை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், இதற்கெல்லாம் நீங்கள் அஞ்ச மாட்டோம். எதிர்க்கட்சிகளை பயமுறுத்த ஐடி துறையை கையில் வைத்துக் கொண்டு பிரதமர் மோடி இதை செய்திருக்கிறார். அந்த அச்சம் எங்களுக்கு உள்ளது.
பணம் இருப்பதாக புகார் அளித்தது யார் என்பதை கடைசி வரை அதிகாரிகள் சொல்லவில்லை" என்று தெரிவித்துள்ளார்.