Ritika Chopra :
J&K Assembly polls : புகழ் பெற்ற புனித யாத்திரையான அமர்நாத் யாத்திரைக்கு பின்பு, ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு காஷ்மீர் பகுதியில் பனி படர்ந்த இமயமலை உச்சியில் அமைந்திருக்கிறது அமர்நாத் குகைக் கோயில். இந்துக்கள் அனைவருமே தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது இங்கே சென்று தரிசித்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள். ஓவ்வொரு ஆண்டும் இந்த புனித யாத்திரை ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்கும்.
அந்த வகையில் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் முடிவடைகிறது. தொடர்ந்த 46 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரைக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும், பகுதிகளில் இருந்து திரளான இந்து மக்கள் கலந்துக்கொள்வார்கள். இந்த வருடம் நடைபெறும் அமர்நாத் யாத்திரையால் ஜம்மு காஷ்மீரில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தேதி மாற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தின் பல்டால் ஆகிய இரண்டு பாதைகள் வழியாகப் பயணிகள் பயணம் மேற்கொண்டு அமர்நாத் குகைக் கோயில் பனி லிங்கத்தை தரிசிப்பார்கள். அமர்நாத் குகைக் கோயிலுக்கு எந்தவித வாகனங்களும் செல்லமுடியாது. நடந்துதான் பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
ஜூலை மாதம் தொடங்கவுள்ள அமர்நாத் யாத்திரைக்கு முன்பே ஜம்மு காஷ்மீரில் தேர்தலை நடத்தி முடிக்க வாய்ப்புள்ளதா? என்பதை தெரிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் சிறப்பு தேர்தல் அதிகாரியை நியமித்தது. இந்நிலையில், மே- ஜூன் மாதத்திற்குள் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என ஜம்மு காஷ்மீர் தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.
காரணம், அனந்த்நாக் மாவட்டத்தில் போக்குவரத்து வசதி மாற்றம் செய்வதில் தொடங்கி, அனைத்து மக்களிடமும் தேர்தல் விழிப்புணர்வை கொண்டு போய் சேர்பதற்கு நாட்கள் அதிகம் தேவைப்படும் என்பதால் தேர்தல் நடத்த கூடுதல் நாட்கள் கேட்கப்பட்டன. இந்நிலையில் இப்போது அமர்நாத் யாத்திரை சீசனும் தொடங்கி விட்டதால் அது முடிந்தவுடன் ஆகஸ்ட் மாத இறுதியில் ஜம்மு காஷ்மீரில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதே போல் லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் 23 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த முடிவுகளுக்கு பிறகு 5 அல்லது 6 கட்டமாக ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுக் குறித்து தேர்தல் ஆணையம் ஜம்மு கஷ்மீர் அமைச்சர்கள் மற்றும் ஆளுநரிடமும் கருத்துகளை கேட்ட சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் கலந்துக் கொண்ட அமைச்சர்கள் மற்றும் மாநில அதிகாரிகள் தேர்தல் ஆணையம் முடிவை ஏற்பதாக கூறியுள்ளனர்.