இறுதி நாள் பிரசாரத்தில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை ஆதரித்து சினிமா நடன இயக்குனர் கலா மாஸ்டர் செம டான்ஸ் ஆடி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தனது அதிரடி நடவடிக்கைகளால் கர்நாடகாவின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென தனது பதவியை ராஜினா செய்துவிட்டு விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர், தமிழகம் திரும்பிய அண்ணாமலை ரஜினி கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவில் இணைந்தார். ரஜினியும் தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார்.
பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு மாநில துணை தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை அரவக்குறிச்சி வேட்பாளராக அறிவிக்கப்படார். அண்ணாமலை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரை ஆதரித்து, பாஜக தலைவர்கள், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.
இந்த நிலையில், இறுதி நாள் பிரசாரத்தில், பிரபல சினிமா நடன இயக்குனர் கலா மாஸ்டர் அரவக்குறிச்சிக்கு சென்று பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசார வாகனத்தில் அண்ணாமலையுடன் இருந்தபடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாட்டுக்கு சுற்றி சுற்றி டான்ஸ் ஆடி பொதுமக்களை உற்சாகப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கலா மாஸ்டரின் டான்ஸால் உற்சாகம் அடைந்த பாஜக வேட்பாளர் அண்ணாமலையும் அவருடன் சேர்ந்து கைகளைத் தூக்கி நடனம் ஆடினார்.
சினிமா நடன இயக்குனர் கலா மாஸ்டரை, மானாட மயிலாட, போன்ற டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே பார்த்த பொதுமக்கள் அவர் நேரில் வந்து நடனம் ஆடியதைப் பார்த்து உற்சாகம் அடைந்தனர்.
இறுதி நாள் பிரசாரத்தில் கலா மாஸ்டர் அரவக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து டான்ஸ் ஆடி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“