மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆலந்தூரில் இருந்து சட்டமன்றத் தேர்தலுக்கான 2ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த தேர்தலில் கமல்ஹாசன் ஆலந்தூரில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தமிழக அரசியல் களம் தேர்தல் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளிடம் துரித கதியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
இந்த சட்டமன்றத் தேர்தலில் 3வது அணியை அமைப்பதில் தீவிரமாக இருக்கும் மநீம தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆலந்தூரில் போட்டியிட உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் பல சட்டமன்றத் தொகுதிகள் இருக்கும்போது, கமல்ஹாசன் ஏன் ஆலந்தூர் தொகுதியை போட்டியிடுவதற்கு தேர்வு செய்தார் என்பதற்கு 2 காரணங்கள் கூறப்படுகிறது. அதிமுகவை தோற்றுவித்தவரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் இந்த தொகுதியில்தான் 1967ம் ஆண்டு முதல் 1976 வரை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அப்போது இது ஆலந்தூர் தொகுதி அல்ல பரங்கிமலை தொகுதி என்று அழைக்கப்பட்டது. மற்றொரு காரணம், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி நகர்ப்புறங்களில் இருந்து கிட்டத்தட்ட 10% வாக்குகளைப் பெற்றிருந்தது.
நடிகர் கமல்ஹாசன் 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மக்கள் நீதி மய்யம் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் தேர்தலாக சந்தித்தது. அந்த தேர்தலில் மநீம கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை என்றாலும் 15 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. அதோடு, மொத்தம் பதிவான வாக்குகளில் 3.94 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நகர்ப்புறங்களில் கிட்டத்தட்ட 10% வாக்குகளைப் பெற்றிருந்தது.
சினிமாவில் தனது நடிப்புத் திறமையால் கமல்ஹாசன் உலகநாயகனாக விஸ்வரூபம் எடுத்து நின்றார். தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் என்று கொண்டாடப்பட்ட சிவாஜி கணேசன், நவராத்திரி படத்தில் 9 வேடங்களில் நடித்தார் என்றால் கமல்ஹாசன் தசவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்து சினிமாவில் தான் சிவாஜியின் வாரிசு நீரூபித்தார்.
சினிமா துறையில் நடிப்பில் சிவாஜியின் வாரிசு என்று அழைக்கப்படும் கமல்ஹாசன் அரசியல் கட்சியைத் தொடங்கியபோது அவருடைய விமர்சகர்கள் எல்லோரும் கமல்ஹாசன் சிவாஜி போல அரசியலில் சோபிக்கமாட்டார் என்று கூறினார்கள். ஆனால், யாரும் எதிர்பார்க்காத நிலையில், கமல்ஹாசன் அரசியலில் எம்.ஜி.ஆரின் புகழைப் பேசினார். அதிமுகவை தோற்றுவித்தவரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசி அவருடைய அரசியல் மரபுக்கு உரிமை கோருவதன் மூலம் கமல்ஹாசன் தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரின் தொண்டர்களை ஈர்த்து வருகிறார். அதோடு, அதிமுக எம்.ஜி.ஆரைப் பின் பற்றுவதாகக் கூறி அவருடைய கனவை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.
சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் தான் எப்போதும் எம்ஜி.ஆரின் பெயரைக் கேட்டால் உற்சாகமடைவேன். எங்கள் கட்சியின் முழக்கம் ‘நாளை நமதே’ எம்.ஜி.ஆர் படத்தின் பெயர்தான் என்று கூறினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டமன்றத் தேர்தலில் அவர்களுடைய கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர்களை நேர்காணல் செய்து வருகிறது. மார்ச் 7 ஆம் தேதி வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி சமத்துவ மக்கள் கட்சியுடனும் இந்திய ஜனநாயகக் கட்சியுடனும் கூட்டணி அமைத்துள்ளது. சமக தலைவர் சரத்குமார் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் என்று அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் நேற்று (மார்ச் 3) மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அவரால் தொடங்கப்பட்ட சட்டப் பஞ்சாயத்து மற்றும் விஷன் இந்தியா கட்சி உள்ளிட்ட சில சிறிய அமைப்புகளும் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்துள்ளன. முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பழ.கருப்பையா கமல்ஹாசன் கட்சியில் சேர்ந்துள்ளார். நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இன்னும் கட்சிகள் எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அரசியல் மாற்றம் விரும்பும் எல்லா கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பேசப்பட்டதை கமல்ஹாசன் மறுத்தார்.
இந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைமையில் 3வது அணியை வலுவாக அமைப்பதில் தீவிரமாக நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார்.
சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியின் வாரிசாக நிரூபித்த மநீம தலைவர் கமல்ஹாசன், அரசியலில் எம்.ஜி.ஆரின் வாரிசாக நீரூபிப்பாரா என்பது மக்கள்தான் முடிவு செய்வார்கள். அது இந்த சட்டமன்றத் தேர்தலில் தெரியவரும்.