தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மாநிலத்தின் இருபெரும் கட்சிகளான ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகிறது. முதல்வர் பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவாளி பிரச்சாரம் செய்துவருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மாநிலம் முழுவதும் சூறாவளியாக பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இவர்களுடன் போட்டி போடும் விதமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.
தமிழகத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் அறிவித்த அதே நாளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் தனது கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம் என்று அறிவித்தார்.
2018ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி நடிகர் கமல்ஹாசனை தலைவராகக்கொண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி, ஒரு ஆண்டு கடந்த நிலையில், 2019ம் ஆண்டில் மக்களவைத் தேர்தலை சந்தித்தது. மக்கள் நீதி மய்யம் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் சுமார் 4 சதவீத வாக்குகளைப் பெற்று கவனத்தை ஈர்த்தது.
தற்போது கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. மக்களவைத் தேர்தலைப் போல, சட்டமன்றத் தேர்தல் கிடையாது.
அண்மையில் மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுக்குழு கமல்ஹாசனை நிரந்தரத் தலைவராக அறிவித்தது. அதோடு, அக்கட்சி கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அளித்தது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்குமா மூன்றாவது அணி அமைக்குமா என்று ஊடகங்கள் கமல்ஹாசனிடம் கேட்டபோது, தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது அணி அமைப்பதற்கு சாத்தியம் உள்ளதாகவே அவர் பதிலளிதிருந்தார்.
கடந்த மாதம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மக்கள் நீதி மய்யத்துக்கு கூட்டணி அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியபோது எல்லாம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
ஆனால், கமல்ஹாசன் எதிர்பார்த்த கூட்டணியோ வேறு என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சீட் பங்கீட்டில் வெளியே வந்தால் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்றே கமல்ஹாசன் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர்கள் யாரும் வெளியே வராததால் கமல்ஹாசனின் கூட்டணி திட்டம் சாத்தியமாகவில்லை. அதனால்தான் தற்போது கமல்ஹாசன் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கிறாஅர் என்று கூறுகிறார்கள்.
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி விருப்பமனு அறிவிப்பே மிகவும் வித்தியாசமானது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். கமல்ஹாசன் அறிவிப்பில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வெளியே இருப்பவர்களும் விருப்பமனு அளிக்கலாம் என்றும் விருப்பமனு விண்ணப்பக் கட்டணமாக ரூ.25,000 செலுத்த வேண்டும் என்றும் அறிவித்திருந்தார். கமல்ஹாசனின் இந்த அறிவிப்புதான் அவருடைய தேர்தல் வியூகத்தைப் பற்றியும் மநீம 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கப் போகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சி மக்களவைத் தேர்தலைத் தனித்து சந்திக்கிறது என்றால் 39 தொகுதிக்கு வேட்பாளர்களை கண்டுபிடிப்பது என்பது சுலபம். அதுவே சட்டமன்றத் தேர்தல் என்றால் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். இது பெரிய வேலை. ஒரு வளரும் கட்சி 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களைக் கண்டுபிடிப்பது என்பது உண்மையில் மிகபெரிய விஷயம்தான். இந்த வேலைதான் கமல்ஹாசனின் முன் உள்ள சவாலாக கூறப்படுகிறது.
மநீம 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டால் எல்லா தொகுதிகளுக்கும் வெற்றி வேட்பாளர்கள் கிடைப்பார்களா என்பது பெரிய கேள்வி எழுந்துள்ளது. அதனால்தா, கமல்ஹாசன் கட்சிக்கு வெளியேயும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்துவிட்டதால் பல ரஜினி மன்ற பொறுப்பாளர்கள் வருகிற தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தில் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத் தலைமையும் அரசியல் கட்சிகளில் இணையும் பொறுப்பாளர்கள் தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விரும்பு அரசியல் கட்சிகளில் சேரலாம் என்று தெரிவித்துவிட்டது. அதனால், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விருப்பமுள்ள சில பிரபலங்கள், கட்சிக்கு வெளியே உள்ளவர்களும் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளிக்கலாம் என்ற கமல்ஹாசனின் அறிவிப்பை பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால், இருதரப்புக்குமே லாபம்தான். மநீம என்ற ஒரு கட்சியின் பேனர் கிடைக்கிறது. மநீம-வுக்கு ஒரு வேட்பாளரும் கிடைக்கிறார்.
கமல்ஹாசனின் இந்த திட்டம் மூலம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த தயாராக இருக்கிறார் என்று மநீம வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.