கனிமொழி - தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் நேரடியாக போட்டியிட இருப்பதால், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் இப்போதே தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. இரு தரப்பும் தேர்தல் பணிகளையும் தொடங்கியிருக்கிறார்கள்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்த முறை வி.ஐ.பி. அந்தஸ்து பெற இருக்கிறது. இங்கு திமுக சார்பில் அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி போட்டியிடுவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கேயே முகாமிட்டு ஊராட்சி சபைக் கூட்டங்களில் கனிமொழி கலந்து கொண்டார். திமுக மாவட்டச் செயலாளர்களான அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக அழைத்து, தேர்தல் பணிகள் தொடர்பான உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறார்.
இன்று (மார்ச் 4) சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தூத்துக்குடி தொகுதிக்காக கனிமொழி விருப்ப மனுவும் தாக்கல் செய்தார். இது அவரது போட்டியை அழுத்தமாக உறுதி செய்தது.
கனிமொழியை எதிர்த்து இங்கு அதிமுக சிட்டிங் எம்.பி. தியாகராஜ நட்டர்ஜியே நிற்க வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அதில் திருப்பம் நிகழ்ந்திருக்கிறது.
அதிமுக அணியில் பாஜக தங்களுக்கான 5 தொகுதிகளாக கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, திருப்பூர், தென் சென்னை ஆகியவற்றைக் கேட்டது. இவற்றில் தென் சென்னையில் போட்டியிட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் திட்டமிட்டார்.
ஆனால் தென் சென்னையின் தற்போதைய எம்.பி.யாக இருப்பவர், அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன். ஏற்கனவே ஓ.பன்னிர்செல்வம் திரும்பி வந்தபோது, நிதி அமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த ஜெயகுமார் தற்போது தனது மகனின் இடத்தை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.
அதேசமயம் தூத்துக்குடி தொகுதியை பாஜக.வுக்கு ஒதுக்கிக் கொடுக்க அதிமுக விரும்பியது. இதை பாஜக.வும் ஏற்றுக் கொண்டதாக தெரிய வந்திருக்கிறது. மேலும் தென் சென்னையில் போட்டியிட திட்டமிட்ட தமிழிசை செளந்தரராஜன், தற்போது தூத்துக்குடி தொகுதியில் களம் காண இருக்கிறார்.
இன்று (மார்ச் 4) தூத்துக்குடியில் துறைமுக சபை நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அங்கு சென்றார். இதையொட்டி அங்கு சென்ற தமிழிசை செளந்தரராஜன், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி திரும்பியிருக்கிறார். இது தமிழிசை அங்கு போட்டியிட இருப்பதற்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.
தமிழிசை கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும், தூத்துக்குடி பகுதியில் நல்ல அறிமுகம் உள்ளவர்தான். அதேபோல கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் முதன்முதலாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவெங்கடேசபுரத்தை மாதிரி கிராமமாக தேர்வு செய்து அங்கு நலத்திட்டப் பணிகளை செய்தார். இருவருமே தனிப்பட்ட முறையில் அங்கு மெஜாரிட்டியாக உள்ள நாடார் சமூக வாக்குகள் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என கணிப்பதாக கூறப்படுகிறது.
இரு பெண் தலைவர்களின் நேரடிப் போட்டி தூத்துக்குடி மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உற்று நோக்கப்படும் மோதலாக அமைந்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.