தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஹெச்.வசந்த குமார் உயிரிழந்ததையடுத்து தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில், விஜய் வசந்த் பொன்னாரை தோற்கடிப்பார் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது
இந்த தொகுதியில் கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் பாஜகவைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவருக்கு மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்ட பொன்னார் காங்கிரஸ் கட்சியின் வசந்த குமாரிடம் தோல்வியை தழுவினார். வசந்த குமார் அப்போது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்ற 2021 இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக பொன்னாரே களமிறங்கியுள்ளார்.
மறுபுறம், இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமாரின் மகன் விஜய் வசந்த்க்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.
இதனால் பொன்னாருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பாஜகவினர் மகிழ்ச்சி அடைந்தனர். பொன்னார் தொகுதிக்கு நன்கு பரிச்சயம் ஆனவர், ஏராளமான நல்ல திட்டங்களை கொண்டுவந்தவர் எனவும் பாஜகவுக்கு கன்னியாகுமரி தொகுதியில் நல்ல வாக்கு வங்கி உள்ளது மேலும் பொன்னார் ஏற்கனவே கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர் அதனால் இம்முறை பொன்னார் எளிதாக வெற்றி பெறுவார் எனவும் பாஜகவினர் கூறிவந்தனர்.
மறுபுறமும் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் வாக்கு வங்கி, ஹெச் வசந்த குமாரின் தனிபட்ட செல்வாக்கு மற்றும் தொகுதிக்கு அவர் செய்த நன்மைகள் என விஜய் வசந்த்க்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கூறி வந்தனர்.
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலான நிறுவனங்கள் காங்கிரஸின் விஜய் வசந்த்திற்கே வெற்றி வாய்ப்பு என கணித்துள்ளன. மேலும் தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பிலும் விஜய் வசந்த் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை தேர்தல் முடிவுகளில் கருத்துக் கணிப்புகள் வெல்லுமா? அல்லது கருத்துக் கணிப்புகளை முறியடித்து பொன்னார் வெல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேலும், நாளை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே தொகுதி பொன்னாருக்கா? அல்லது விஜய் வசந்த்க்கா? எனத் தெரிய வரும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil