Kanyakumari By Election result: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் காலமானதைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தல் தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல, அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட்டுள்ளார். பாஜக சார்பில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மக்கள் தனது தந்தைக்கு அளித்த ஆதரவை தனக்கும் தரவேண்டும் என்று விஜய் வசந்த் களம் கண்டுள்ளார்.
பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தான் அமைச்சராக இருந்தபோது கன்னியாகுமரி தொகுதிக்கு கொண்டுவந்த திட்டங்களை முன்வைத்து ஆதரவு கேட்டு களம் இறங்கியுள்ளார்.
விஜய் வசந்த் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளுக்கும் மேல் பெற்றுள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன் 2,58,712 வாக்குகள் பெற்றுள்ளார். வெற்றி உறுதியான நிலையில், விஜய் வசந்த் எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில், 'என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றி. இந்த வெற்றியை வீதிக்கு வந்து கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன்' என்று நன்றியுடன் கோரிக்கையும் வைத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”