முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேட்புமனுக்களில் கையெழுத்திட தடை கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அதிமுக.வில் பொதுச்செயலாளர் பதவி ஒழிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இயங்கி வருகிறார்கள். அதிமுக.வில் பொதுச்செயலாளர் மேற்கொள்ளவேண்டிய அத்தனைப் பணிகளையும் இவர்கள் இருவரும் இணைந்து மேற்கொள்கிறார்கள்.
இது தொடர்பாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘அதிமுக.வில் பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் அதிகாரம் அடிமட்டத் தொண்டர்களுக்கு உரியது. இது மாற்றவே முடியாத ஒரு விதி. ஆனால் அந்த விதியை புறந்தள்ளிவிட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள்.
மேற்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களுக்கான அங்கீகாரப் படிவத்தில் கையெழுத்திட தடை விதிக்க வேண்டும். பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கையை நிராகரித்தது.
இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் நீதிபதி யேகேஷ் கண்ணா இன்று தீர்ப்பு வழங்கினார். கே.சி.பழனிசாமி அதிமுக.வில் இருந்து நீக்கப்பட்டும், அதை எதிர்த்து அவர் வழக்கு தொடுக்காததை நீதிபதி தீர்ப்பில் சுட்டிக் காட்டினார். கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால் அதிமுக வேட்பாளர்களின் அங்கீகாரப் படிவங்களில் இபிஎஸ், ஓபிஎஸ். கையெழுத்திட தடை எதுவும் இல்லை. தேர்தல் நெருங்கிய முக்கியமான சூழலில் இந்த உத்தரவு, அதிமுக.வினருக்கு நெருக்கடியை தவிர்த்திருக்கிறது.