சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மீண்டும் நட்சத்திர தொகுதி என்ற அடையாளத்துக்குள் வந்துள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. பாஜகவில் கடும் போட்டிக்கு இடையே சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்புவை எதிர்த்து திமுக சார்பில் டாக்டர் நா.எழிலன் போட்டியிடுகிறார்.
குஷ்பு சினிமா பிரபலம் என்றால், டாக்டர் நா.எழிலன் அடித்தளத்தில் இளைஞர்கள் மத்தியில் தனது செயல்பாட்டின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதுமட்டுமில்லாமல், ஆயிரம் விளக்கு தொகுதி மு.க.ஸ்டாலின் ஹாட்ரிக் வெற்றி பெற்ற தொகுதி பின்னணியும் இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி என்றாலே 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரை திமுகவில் மு.க.ஸ்டாலின் தொகுதி என்றே பெரும்பாலும் அழைக்கப்பட்டுவந்தது. ஆனால், 1984ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தோல்வியைத்தான் சந்தித்தார். இதற்கு அடுத்து வந்த 1989ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அடுத்து வந்த 1991ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ஆனால், அதற்குப் பிறகு, வந்த 1996, 2001, 2006 சட்டமன்றத் தேர்தல்களில் மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்று ஹாட்ரிக் அடித்தார். இப்படித்தான் மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியை திமுகவின் தொகுதியாக மாற்றியிருந்தார்.
மு.க.ஸ்டாலின் 2011ம் ஆண்டு தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டதால், ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பா.வளர்மதி வெற்றி பெற்றார். 2016ம் ஆண்டு தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் கு.க.செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து அந்த தொகுதி மீண்டும் திமுக வசமானது.
சில மாதங்களுக்கு முன்பு கு.க.செல்வம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் கு.க.செல்வத்துக்குதான் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகை குஷ்புவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுவே கு.க.செல்வத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயிரம் விளக்கு நடிகை குஷ்புவுக்கு ஒளி கொடுக்குமா?
பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்புவும் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் நா.எழிலன் இருவருமே சந்திக்கும் முதல் தேர்தல் இது.
நடிகை குஷ்பு முதலில் தனது அரசியல் பிரவேசத்தை திமுகவில் இருந்துதான் தொடங்கினார். பின்னர், திமுகவில் அவருடைய கருத்துகளால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக திமுகவில் இருந்து விலகினார். சிறிது நாட்களிலேயே நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில், கடந்த மக்களவைத் தேர்தலின்போது நட்சத்திர பிரச்சாரப் பேச்சாளராக வலம் வந்த நடிகை குஷ்பு கட்சியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இப்படி குஷ்பு அரசியலில் இப்படி 3வது இன்னிங்ஸை விளையாடிக்கொண்டிருக்கிறார். பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு சென்னையின் முக்க்கிய தொகுதிகளில் ஒன்றான ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குஷ்புவுக்கு பலம் என்றால் அவருடைய சினிமா நட்சத்திர பிரபலம் பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அதோடு, கூட்டணி கட்சியான அதிமுகவின் ஒத்துழைப்பு ஆகியவைதான் பலமாக பார்க்கப்படுகிறது.
அதே போல, திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் நா.எழிலன், சமூக செயல்பாட்டில் ஈடுபாடு உள்ளவர். திட்டக்குழு தலைவராக இருந்த நாகநாதன்தான் டாக்டர் எழிலனின் தந்தை. டாக்டர் நா.எழிலன் அரசியலுக்கு புதுமுகம் அல்ல. அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பே தனது அரசியல் செயல்பாட்டைத் தொடங்கிவிட்டவர் என்கிறார்கள் அவரை அறிந்த அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். சென்னையில் உள்ள அரசு கல்லூரி விடுதிகளில் பெரியார், அம்பேத்கர் கருத்துகளைப் பரப்பியவர். அவர் களத்தில் செயல்படக் கூடியவர் என்கின்றனர்.
அதனால், ஸ்டாலின் வென்ற ஆயிரம் விளக்கு தொகுதி நடிகை குஷ்புவுக்கு ஒலி கொடுக்குமா என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. எல்லாவற்றுக்கும் தேர்தல் முடிவுகளே பதிலளிக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.