Advertisment

Election 2019: அதிமுக.வை ஆதரிப்பதாக ஜெ.தீபா திடீர் அறிவிப்பு

latest political news in tamil nadu live updates: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் கருமந்துறையில் இன்று (மார்ச் 22) பிரசாரத்தை தொடங்கினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Deepa's Residence, Fake Income Tax Officer Escaped

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் தமிழ்நாட்டில் சூடு பிடித்திருக்கிறது. அதிமுக, திமுக, அமமுக, பாஜக, பாமக, தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

Advertisment

அதிமுக அணிக்கு பிரதானமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். சேலம் கருமந்துறையில் இன்று (மார்ச் 22) அவர் பிரசாரத்தை தொடங்கினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் நேற்று பிரசாரத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

 

Live Blog

latest political news in tamil nadu live updates: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் கருமந்துறையில் இன்று பிரசாரத்தை தொடங்கினார்.














Highlights

    19:36 (IST)22 Mar 2019

    மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

    கோடநாடு கொலை வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு படுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார்.

    19:10 (IST)22 Mar 2019

    காங்கிரஸ் பட்டியல் நாளை வெளியாகும்

    தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என டெல்லியில் மேலிட ஆலோசனைக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தார்.

    18:14 (IST)22 Mar 2019

    காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயார்?

    டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடத்தியது. தேர்தல் குழு ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

    டெல்லி ஆலோசனைக்கு பின் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

    18:01 (IST)22 Mar 2019

    அதிமுக.வுக்கு தீபா ஆதரவு

    நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா கூறினார். அதிமுக அழைத்தால் பிரசாரம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். ‘எந்த பதவியும் எனக்கு தேவையில்லை; அதிமுகவின் எதிர்கால நலன் மற்றும் வெற்றியை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கப்படுகிறது’ என ஜெ.தீபா கூறினார்.

    15:24 (IST)22 Mar 2019

    தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி

    மதுரை சித்திரை திருவிழா, பெரிய வியாழன் பண்டிகை உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய 3 மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரையில் வாக்களிக்க நேரம் நீட்டிப்பு, கிறிஸ்தவ பள்ளிகளில் வாக்களிக்க செய்யப்படும் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

    எனவே ஏப்ரல் 18-ம் தேதி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நடைபெறும்.

    13:56 (IST)22 Mar 2019

    தமிழகத்தில் பிரசாரம் முடியும் நேரம்

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. ஏப்.16-ம் தேதி மாலை 6 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி உண்டு என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்திருக்கிறார்.

    13:20 (IST)22 Mar 2019

    டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கை

    2019 மக்களவைத் தேர்தலுக்கான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:

    1. விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், எரிவாயு, ஸ்டெர்லைட் திட்டங்கள், இயற்கையை அழித்து சாலை அமைப்பது உள்ளிட்ட எந்தத் திட்டங்களையும் தமிழகத்தில் அமைக்க விட மாட்டோம்.

    2. விவசாயத்தை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் டெல்டா மாவட்டங்களில் அமைக்க விட மாட்டோம்.

    3. ஜி.எஸ்.டி.யில் மாநிலங்களுக்கு உரிய பங்களிப்பு கிடைக்க உரிய திருத்தங்கள் செய்ய நடவடிக்கை எடுப்போம்.

    4. விவசாய கடன் தள்ளுபடிக்கு நடவடிக்கை எடுப்போம்.

    5. மரபணு மாற்றப் பயிர்கள் தமிழகத்தில் நுழைவது தடுத்து நிறுத்தப்படும்.

    6. நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க விவசாயிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

    12:54 (IST)22 Mar 2019

    மேள தாளத்துடன் வந்த பொன்னார்

    நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

    இதையொட்டி பாஜக தொண்டர்கள் மேளதாளத்துடன் திரண்டனர்.

    12:47 (IST)22 Mar 2019

    சென்னையில் 6 கிலோ தங்க நகை பறிமுதல்

    சென்னை துறைமுகம் பகுதியில் ஒரு காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்த போது 6 கிலோ தங்க நகை சிக்கியது. இது தொடர்பாக காரில் இருந்த லோகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    12:28 (IST)22 Mar 2019

    அதிமுக கூட்டணியைப் பார்த்து எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    சேலம் வாழப்பாடியில் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘அதிமுக கூட்டணியைக் கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. 1999-ல் பாஜக.வுடன் கூட்டணி அமைத்து, மத்திய ஆட்சியிலும் இடம் பெற்றது திமுக. ஆனால் நாங்கள் கூட்டணி வைத்தால் மட்டும், அது மதவாதக் கட்சியா?

    திமுக அதிகாரத்தில் இருந்தபோது மக்களுக்காக என்ன செய்தது? தங்கள் குடும்பத்திற்கு பதவிகளை பெற்றார்கள். அந்தக் குடும்ப அரசியலை வீழ்த்தும் தேர்தல் இது’ என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

    11:52 (IST)22 Mar 2019

    அமமுக சின்னம் எது?

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எந்தச் சின்னத்தில் போட்டியிடும் என்பது வருகிற 25-ம் தேதி தெரியும் என அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

    11:48 (IST)22 Mar 2019

    அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல்

    தமிழ்நாடு முழுவதும் அதிமுக மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் 20 பேரும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 பேரும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்கள்.

    திமுக, அமமுக வேட்பாளர்கள் வருகிற 25-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய இருக்கின்றனர்.

    11:32 (IST)22 Mar 2019

    நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மன்சூர் அலிகான்

    திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    11:24 (IST)22 Mar 2019

    கனிமொழி - தமிழிசை நேரடி மோதல்

    தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கனிமொழி அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளராக தமிழிசை செளந்தரராஜன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் பிரபலமான இரு பெண் தலைவர்களின் நேரடி மோதல் களமாக தூத்துக்குடி மாறியிருக்கிறது. இதற்கிடையே இன்று தூத்துக்குடியில் பேசிய தமிழிசை செளந்தரராஜன், ‘பாரதிய ஜனதா கட்சி பாசிச பாஜக அல்ல; பாசமான பாஜக’ என்றார். மாணவி சோஃபியா மேற்படி விமர்சனத்தை வைத்ததும், அதற்கு தமிழிசை நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து பெரும் பிரச்னை ஆனதும் நினைவு கூறத்தக்கது.

    11:16 (IST)22 Mar 2019

    சேலத்தில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

    சேலம் கோட்டை மைதானத்தில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்தீபனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசினார். ‘கோட்டை மைதானத்தில் திரண்டிருக்கும் கூட்டத்தைப் பார்த்தால், சென்னை கோட்டையில் திமுக கொடியேற்றும் நாள் வந்துவிட்டதாக தோன்றுகிறது. உதயசூரியன் சின்னம் போட்டியிடுகிறது என்றால், தலைவர் கலைஞர் போட்டியிடுவதாக அர்த்தம்.உதயசூரியன் உதித்த பிறகுதான் தமிழ் சமுதாயம் வெளிச்சத்தை பார்த்திருக்கிறது. அனைவரும் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு வாக்களிக்க வேண்டும்’ என்றார் மு.க.ஸ்டாலின்.

    11:04 (IST)22 Mar 2019

    பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் திடீர் மாற்றம்

    பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் முருகன் திடீரென மாற்றப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக மயில்வேல் போட்டியிடுவார் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

    மாவட்ட அதிமுக.வினரின் வேண்டுகோள் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    latest political news in tamil nadu live updates: மக்களவைத் தேர்தல் நெருங்குகிற சூழலில் தமிழக அரசியல் நிலவரம், பிரசாரம் தொடர்பான செய்திகள் இங்கே:
    Dmk Aiadmk J Deepa General Election
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment