பொதுத்தேர்தல் 2019-ன் அறிவிப்புகள் வெளியாகி விட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக இது நடத்தப் படுகிறது. தேர்தல் அறிவிப்பு வந்ததும், அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வருகின்றன. அந்த நடைமுறைகள் எவை? என்று இங்கே பார்க்கலாம்.
1. மத்தியிலோ, மாநிலத்திலோ ஆட்சியில் இருக்கும் கட்சி தங்களின் அரசு அதிகாரத்தை பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் புதிய கொள்கை முடிவுகள், திட்டங்கள் ஆகியவற்றை அறிவிக்க கூடாது.
2. அரசுப் பணத்தில் சாதனைகளை விளம்பரம் செய்வதோ, அரசு ஊடகத்தை விளம்பரத்திற்கு பயன்படுத்துவதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
3. அமைச்சர்கள் அரசுப் பயணத்துடன் தேர்தல் பணியை இணைத்து செய்யக்கூடாது. இதற்காக அரசு எந்திரத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அரசு வாகனங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது.
4. பொது மைதானங்கள், ஹெலிபேட் ஆகியவற்றை ஆளும்கட்சி எந்த அடிப்படையில் பயன்படுத்துகிறதோ, அதே அடிப்படையில் எதிர்க்கட்சிகளுக்கும் வழங்க வேண்டும்.
5. வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அரசுத் துறைகளிலோ, பொதுத்துறை நிறுவனங்களிலோ இடைக்கால கமிட்டி நியமனம் எதுவும் நிகழ்த்தக்கூடாது.
6. அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களை அவர்களது பணி அடிப்படையில் விமர்சனம் செய்யலாம். மாறாக ஜாதி, மத செண்டிமெண்ட் அடிப்படையிலான விஷயங்களை எடுத்து விமர்சிக்க கூடாது. சர்ச்கள், மசூதிகள், கோவில்கள் ஆகியவற்றில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது.
7. வாக்காளர்களுக்கு லஞ்சமோ, அன்பளிப்புகளோ வழங்கி வாக்களிக்க கூறுவது தண்டனைக்குரிய குற்றம்.
8. வாக்குப் பதிவு முடியும் நேரமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக 48 மணி நேரம் எந்த பிரசாரமும் நடைபெறக்கூடாது. அமைதி நேரமாக இது கடைபிடிக்கப்பட வேண்டும்.
வாக்காளர்கள் பிரசார தாக்கத்தில் இருந்து மீண்டு சுயமாக சிந்தித்து வாக்களிக்க வகை செய்யும் வகையில் இந்த ஏற்பாடு.