இன்று மே.25ம் தேதி நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பதவி விலகுவதாக ராகுல் காந்தி வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுஜெர்வாலா தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, மீண்டும் தலைவர் பதவியில் செயலாற்றி, "கட்சியை முழுமையாக மறு சீரமைப்பு செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், "இந்த கடினமான காலக்கட்டத்தில்" இருந்து கட்சியை ராகுல் காந்தி வழிநடத்த வேண்டும். அவரது தலைமைப் பண்பு குறித்து யாரும் ஐயம் கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில் கட்சியை ஒருவரால் வழிநடத்த முடியுமென்றால் அது ராகுல் காந்தி மட்டும் தான். எதிர்க்கட்சிக்கு ஒருவரால் தலைமைத் தாங்க முடியுமென்றால் அது ராகுல் காந்தி மட்டும் தான்" என்றார்.
கட்சித் தீர்மானத்தில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு எதிர்க்கட்சியாக பணியை சிறப்பாக செய்ய வேண்டும். மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.
ராகுல் காந்தி நமது சித்தாந்தத்தின் படி கட்சியை வழிநடத்தி, இந்தியாவின் இளைய தலைமுறை, விவசாயிகள், எஸ்சி/எஸ்டி/ஓபிசி-க்கள், சிறுபான்மையினர், ஏழைகள் ஆகியோரின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்" என்றார்.
நரேந்திர மோடி வழிநடத்தும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி இரண்டாவது முறையாக மாபெரும் சக்தியாக ஆட்சியை பிடித்திருக்கிறது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை வென்றது. காங்கிரஸ் தனித்து 52 இடங்களை மட்டுமே வென்றது.
இருப்பினும், வங்கித் துறை, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் பாஜக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'காங்கிரஸ் தேர்தலில் தோற்றிருக்கலாம், ஆனால், நமது தைரியம், போராடும் குணம், நமது சித்தாந்தங்கள் இதுவரை இல்லாததைவிட அசுர பலம் பெற்றிருக்கிறது' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.