Lok Sabha Election 2019 Rahul Gandhi Statements in Tamil Nadu : காங்கிரஸ் கட்சியின் ஆளுமையை அதிகரிக்க தென்னிந்தியாவில் இம்முறை அதிக அளவு அக்கட்சியின் முக்கியத்துவம் வெளிப்பட்டது. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டது கூட அதற்கு ஒரு முன்னுதாரணம். தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ், தேனி, கரூர் உட்பட 10 தொகுதிகளில் களம் இறங்கியது.
Rahul Gandhi Statements in Tamil Nadu During Election 2019
மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு சிலை திறப்பு நிகழ்வன்று, திமுக தலைவர் முக ஸ்டாலின் தான் ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக முன்மொழிந்தார். அதன் காரணமோ என்னவோ, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் ராகுலின் தமிழக வருகை தமிழர்கள் நலன் அதிமுக்கியத்துவம் பெற்றது.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் திமுக 20 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், மதிமுக, முஸ்லீம் லீக், ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலா ஒரு இடங்களிலும் போட்டியிட்டது.
மேலும் படிக்க : லோக்சபா தேர்தல் 2019 – தமிழக தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடியின் பேச்சு
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி “சேஞ்ச் மேக்கர்ஸ்” கலந்துரையாடல்
அதே நாளில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளுடன் உரையாடினார். சேஞ்ச் மேக்கர்ஸ் என்ற தலைப்பில் பேசிய ராகுல் காந்தியிடம் மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு மிகவும் கூலாக பதில் சொல்லி அனைவரின் மனதினையும் கவர்ந்தார்.
மேலும் பெண்கள் உரிமையைப் பொறுத்தவரை வட இந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியாவில் பெண் உரிமை மிகவும் சிறப்பாக உள்ளது என்று கூறினார். தமிழகத்தில் இந்நிலையை எட்ட நிறைய தலைவர்கள் கடுமையாக உழைத்தனர். ஆனால் பிஹார், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெண்கள் நடத்தப்படும் விதம் மிக மோசம் என்றும் அவர் குறிப்பிடார்.
நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் போன்றவைகளில் பெண்கள் போதுமான அளவில் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் கூறினார்.
மார்ச் 13ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பு
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட உடனே தமிழகத்தில் தான் பிரச்சாரத்தை துவங்கினார் ராகுல் என்றே சொல்ல வேண்டும். மார்ச் 13ம் தேதி சென்னை வந்த ராகுல் காந்தி, தனியார் விடுதி ஒன்றில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார்.
தமிழ் கலாச்சாரம், மொழியின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தமிழகத்தை தமிழர்களே ஆள வேண்டும். நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள், தேசியக் கட்சிகள் தமிழக அரசியல் மீது கவனம் செலுத்துகிறது என்று. ஆனால் பாஜக தான் தமிழகத்தை ஆளுகிறது என்று அவர் கூறினார்.
மேலும் 7 பேர் விடுதலை குறித்து பேசிய போது, எனக்கு அவர்கள் மீது வெறுப்பு ஒன்றும் கிடையாது. இவர்களின் விடுதலை குறித்து நீதிமன்றங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் ஈழப்படுகொலைகள் குறித்து காங்கிரஸ் மீது தமிழக மக்களுக்கு கோபம் ஒன்றும் இல்லை. அவர்களுக்கு தெரியும், காங்கிரஸூக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.
நாகர்கோவிலில் நடைபெற்ற திமுக பிரச்சாரம்
சஞ்சய் காந்தி முதல் ராகுல் காந்தி வரை, தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வரும் தலைவர்களின் கருத்தினை மக்களுக்கு தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்தது கே.வி. தங்கபாலு தான். இந்த முறை தேவைக்கு சற்று அதிகமான சொந்தக் கருத்துகளும் உடன்புக, நெட்டிசன்களின் மீம்களுக்கு இறையானர் பாலு.
இருப்பினும் ராகுல் காந்தி கூறிய கருத்துகள்,
தமிழக மக்கள் என்றும் நேர்மையின் பக்கம் நிற்பவர்கள் என்றும், அதே நேர்மையின் துணை கொண்டு மோடியை ஜெயிலுக்கு அனுப்புவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். காமராஜர் மற்றும் கருணாநிதி போன்ற தலைவர்கள் இன்னும் மக்கள் மனதில் அழியாமல் வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்துத்துவ கொள்கைகளால், மோடி தமிழக மக்களை தாக்குவது மட்டுமல்லாமல், தமிழ் மொழியையும் தாக்குதலுக்கு உள்ளாக்குகிறார். மோடியோ, ஆர்.எஸ்.எஸ் அமைப்போ உங்களின் கலாசாரம், வரலாறு, மற்றும் மொழியை அழிக்க ஒருபோதும் விட மாட்டோம் என்றும் கூறினார் ராகுல் காந்தி.
மத்தியில் ஆட்சி அமைந்தால் நிச்சயம் பல்வேறு புதிய தொழிற்சாலைகளும், வேலை வாய்ப்புகளையும் தமிழகத்தில் உருவாக்குவோம் என்று கூறினார் ராகுல்.
2 ஏப்ரல் 2019 - தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கியத்துவம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தமிழகம் அதிக முக்கியத்துவம் பெற்றது. நீட் மற்றும் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி, மாநிலப் பட்டியலில் இடம் பெற செய்தல் போன்ற முக்கிய அம்சங்கள் பெரிய தமிழக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
சில மாநிலங்களில் நீட் தேர்விற்கு எதிர்ப்பு உள்ளது. அம்மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்கள் அரசு மருத்துவமனை மருத்துக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வழி வகை செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. நீட்டிற்கு அதிக அளவு எதிர்ப்பு கிளம்பியிருந்தது தமிழகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று மீனவர்களுக்கான மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டது.இது போன்ற தேர்தல் வாக்குறுதிகளால் தமிழகம் பயன்பெரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.