தமிழ்நாட்டில் பாஜக.வின் 5 வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டனர். ஹெச்.ராஜா ஏற்கனவே அறிவித்த அதே 5 வேட்பாளர்களை தலைமை அறிவித்திருக்கிறது.
மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. காங்கிரஸும், பாஜக.வும் வேட்பாளர்களை அறிவிக்க தாமதம் செய்தன. பாஜக.வின் 5 வேட்பாளர்களையும் நேற்றே (மார்ச் 20) அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அறிவித்தார். பின்னர் அது யூகங்களில் அடிப்படையில் சொல்லப்பட்டதாக கூறினார்.
தலைமை அறிவிக்கும் முன்பே ஹெச்.ராஜா வேட்பாளர்களை அறிவித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் பாஜக தலைமை இன்று (மார்ச் 21) முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது. பாஜக தலைவர் அமித்ஷா குஜராத்தில் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக.வுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஹெச்.ராஜா நேற்று தெரிவித்த அதே 5 வேட்பாளர்களும் அதிகாரபூர்வ பட்டியலில் இடம் பெற்றனர்.
தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் விவரம் வருமாறு:
1. கன்னியாகுமரி: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
2.தூத்துக்குடி: தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்
3. ராமநாதபுரம் : முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன்
4. சிவகங்கை: பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா
5. கோவை : முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா இந்தத் தகவல்களை வெளியிட்டார்.