ஒரு வழியாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. 17-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலான இது, ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுவதாகவும், அதோடு சேர்த்து இடைத் தேர்தலும் நடத்தப்படுவதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடப்பு மக்களவையில் பதவிக்காலம் வரும் ஜூன் 3-ம் தேதி முடிகிறது என்பதால், அதற்குள் நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாகி வருகிறது. இதை முன்னிட்டு, இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தலைமைத் தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 17வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடத்தப்படும். இந்த ஏழு கட்டத் தேர்தலில் தமிழகத்தில் இரண்டாம் 2ம் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதுவும், தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றார்.
வேட்பு மனுத் தாக்கல் - மார்ச் 19
வேட்பு மனுத் தாக்கல் முடிவு - மார்ச் 26
வேட்பு மனு பரிசீலனை - மார்ச் 27
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் - மார்ச் 29
வாக்குப்பதிவு - ஏப்ரல் 18
வாக்கு எண்ணிக்கை - மே 23
நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும், மக்களவைத் தேர்தலுடன் மார்ச் 9 வரை காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றார். ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவை தேர்தலோடு இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.