மகாராஷ்ட்ராவை ஆளப்போவது யார்? பாஜக – சிவசேனா கடும் போட்டி

Maharashtra election results : பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது

By: Updated: October 28, 2019, 12:37:35 PM

 Shubhangi Khapre

Maharashtra CM Post Shiv Sena vs BJP : மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் 24ம் தேதி வெளியிடப்பட்டன. ஹரியானாவில் பாஜக – ஜெ.ஜெ.பி கூட்டணியில் லால் மனோகர் கட்டார் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் மகாராஷ்ட்ரா அரசியலில் முதல்வர் யார் என்ற இழுபறி இன்னும் நிலவி வருகிறது.

சிவசேனா – பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து மகாராஷ்ட்ரா தேர்தலை சந்தித்தது. ஆட்சி – அதிகாரத்தை இவ்விரண்டு கட்சிகளும் சரிசமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என சிவசேனா விரும்புகிறது. ஆனால் பாஜகவோ சிவசேனா கட்சி சார்பில் ஒருவர் துணை முதல்வராக இருந்து கொள்ளலாம் என்ற சலுகையை மட்டுமே வழங்கிவருவதால் யார் முதல்வர் என்ற இழுபறி தொடர்ந்து நிலவி வருகிறாது. முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தொடர்ந்து முதல்வராக பதவி வகிப்பார் என்றும், துணை முதல்வர் பதவிக்கு சிவசேனாவை பரிந்துரை செய்யப் போவதாகவும் பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார். இரண்டு கட்சிகளும் இது தொடர்பாக முக்கியமான ஆலோசனையை இன்று மேற்கொண்டு வருகிறது. முக்கிய முடிவுகள் இன்று பிற்பகலுக்குள் அறிவிக்கப்படலாம்.

வியாழக்கிழமை அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடனே சரிபாதியாக நிர்வாகத்தினை கவனித்தல் என்ற ஃபார்முலாவை பாஜகவிடம் அறிவித்தார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. இரண்டரை ஆண்டு காலம் சிவசேனா கட்சியின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என சிவசேனாவின் விருப்பதை அறிவித்தார் அவர். அதற்கு பாஜக ஒத்துக்கொள்ளவில்லை என்றால் இதனை சரி செய்ய வேறேதும் வழிகள் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் எனவும் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

இரண்டு கட்சிகளும் ஒரே எண்ணிக்கையில் இடங்களைக் கைப்பற்றினால் மட்டுமே சரிசமமான ஆட்சி வாய்ப்புகள் அமையும். சிவசேனாவைக்காட்டிலும் அதிகப்படியான இடங்களை நாங்கள் வென்றிருக்கும் போது முதல்வர் பதவிக்கான வாய்ப்புகள் நிச்சயம் அவர்களுக்கு வழங்கப்படமாட்டாது. ஃபட்னாவிஸ் தொடர்ந்து முதல்வராக பதவி வகிப்பார் என பாஜகவின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் நிதி அமைச்சரான சுதிர் முகந்திவார் அறிவித்துள்ளார்.

288 தொகுதிகளைக் கொண்டது மகாராஷ்ட்ரா சட்டசபை. இதில் 105 தொகுதிகளை தற்போதைய தேர்தலில் பாஜக வென்றிருக்கிறது. 2014ம் ஆண்டு தேர்தலில் பாஜக 122 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா 56 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 2014 தேர்தலில் 63 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு தற்போது 17 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்திருப்பதால் 122 என்ற கணக்கை தற்போது வரை தக்க வைத்துள்ளது.

மேலும் படிக்க : 2 மாநில தேர்தல் முடிவுகள் : ராகுல் பொறுப்பில் இருந்து விலக, தேர்தலில் அசத்திய காங்கிரஸ்…!

1995ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியான போது, பாஜக குறைவான இடங்களில் வெற்றி பெற்றதால் துணை முதல்வர் பதவியை வகித்தது. இரண்டு கட்சிகளும் பெற்றிருக்கும் தொகுதி எண்ணிக்கைகளில் மிகக்குறைவான வேறுபாடுகள் இருந்த போதும், துணை முதல்வர் பதவியை பாஜக ஏற்றுக் கொண்டது என பெயர் சொல்ல விரும்பாத பாஜக தலைவர் அறிவித்தார். 1995ம் ஆண்டு சிவசேனாவின் மனோகர் ஜோஷி 73 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று முதல்வரானார். அப்போது பாஜக 65 இடங்களை வென்றிருந்தது. பாஜகவின் கோபிநாத் முண்டே துணை முதல்வர் பதவி வகித்தார்.

சிவசேனாவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் குறிப்பிடுகையில் “உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றால் மட்டுமே முதல்வர் பதவி என பாஜகவுடன் ஏற்கனவே ஒரு புரிந்துணர்வு இருக்கிறது. ஆனால் தற்போது அது நடக்க இயலாத காரியம். ஆதித்யா தாக்கரே அரசியலுக்கு மிகவும் புதியவர், மேலும் நிர்வாகத்திறன் அனுபவம் குறைவாக கொண்டவர் என்று குறிப்பிடுகிறார்.

மகாராஷ்ட்ராவின் அமைச்சரவை 42 உறுப்பினர்களுக்கு மேல் போகாது. உள்துறை, வருமானவரி, நிதி, நகர்ப்புற வளர்ச்சி, வேளாண்மை, பாசனம், சுகாதாரம், பொதுவளர்ச்சி போன்ற அமைச்சரவை பொறுப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. பாஜக நிச்சயமாக தங்கள் கட்சி உறுப்பினர்களை உள்துறை, நிதி மற்றும் நகரவளர்ச்சி துறையில் அமைச்சர்களாக நியமனம் செய்யும்.  அதிகாரத்திற்கான ரிமோட் கண்ட்ரோல் தற்போது சிவசேனாவின் கையில் உள்ளது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ரௌத் அறிவித்துள்ளார். புலியின் (சிவசேனா) கையில் தாமரை (பாஜக) என்பது தான் தற்போது நிலவும் சூழல் என்று சூசகமாக தெரிவிக்கிறார் அவர்.

Get all the Latest Tamil News and Election 2020 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Maharashtra cm post shiv sena vs bjp bjp likely to offer deputy cm

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X