Manoj C G
Maharashtra Haryana assembly elections 2019 results : மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களில் 21ம் தேதி சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. மேலும் இந்த இரண்டு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்களிலும் விலகியே இருந்தார் ராகுல். தேர்தல் முடிவுகள் வெளியானது குறித்தும் கருத்துகள் எதையும் தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவிக்கவில்லை. அவர் தலைமைப் பொறுப்பில் இல்லாத நேரத்தில் நடைபெற்ற இந்த இரண்டு மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் சிறப்பாக பணியாற்றியுள்ளது. இது ராகுலின் நிர்வாகத்திறன் மற்றும் தலைமைப் பண்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
தலைவர்களின் கருத்துகள் என்ன?
நேற்று ரே பரேலி தொகுதிக்கு வந்திருந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் பிரியங்கா காந்தியிடம் தேர்தல் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் “ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் எழுச்சி மகிழ்வினைத் தருகிறது. லோக் சபா தேர்தல்களுக்கு பிறகு, உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது” என அறிவித்தார்.
ஹரியானா காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இது குறித்து கூறிய போது “பாஜகவை யாராலும் வென்றிட இயலாது என்று உருவாக்கப்பட்டிருந்த பிம்பங்கள் நேற்றோடு நொறுங்கிப் போகின. பாஜகவாகவே இருந்தாலும் அதனை போராடி தோற்கடிக்க முடியும் என இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுக்கு ஒரு செய்தியை நேரடியாக தெரிவித்திருக்கிறது.” என்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆனந்த் ஷர்மா அறிவித்தார். ஹரியானாவின் முன்னாள் முதல்வர் புபிந்தெர் ஷிங் ஹூடாவின் வெற்றி பெரிய மாற்றத்தையே உருவாக்கியுள்ளது என்று அவர் கருத்து கூறினார்.
மத்தியப்பிரதேசத்தின் முதல்வர் கமல்நாத் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் “ஹரியானாவில் காங்கிரஸ் பாஜகவுக்கு கடும் சவாலாக இருந்தது. எதிர்பார்த்த இடங்களைவிட இரண்டு மடங்கு தொகுதிகளை வென்றுள்ளது காங்கிரஸ். இதற்கு ஹூடாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது” என்று கூறியுள்ளார். இந்த தேர்தல் முடிவுகள் மாநில தலைவர்களுக்கு கூடுதல் பொறுப்பையும் பலத்தையும் தந்திருப்பதோடு, ராகுல் காந்தியின் தலைமையையும் நிர்வாகத்திறனையும் மறு சீராய்வு செய்ய வைத்திருக்கிறது. மாநிலங்களில் மூத்த காங்கிரஸ் உறுப்பினர்களுக்கான உரிமை இவ்வாறாக முன்பே உறுதி செய்யப்பட்டிருந்தால், காங்கிரஸ் நிச்சயமாக வெற்றியையும் முன்பே பதிவு செய்திருக்கும் என்றும் கட்சியில் பேச்சுகள் எழுந்து வருகிறது.
சட்டமன்ற தேர்தல்களில் வெற்றியை தக்க வைக்க அம்மாநிலங்களில் இருக்கும் சக்தி வாய்ந்த தலைவர் ஒருவரை தேர்வு செய்து, அம்மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்தாலே போதுமானது. ஹூடா தன்னுடைய பிரச்சாரத்தின் போது எங்கும் மோடியின் பெயரையோ, தேசிய பிரச்சனை குறித்தோ பேசவில்லை. மாறாக உள்ளூர் பிரச்சனைகளை மட்டுமே பேசினார்.
டெல்லி மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கின்ற நேரத்தில் மாநிலத் தலைவர்களை தான் அதிகமாக ஊக்குவிக்க வேண்டும். ஹரியானாவில் தேர்தல் வேலைகளை செய்ய ஹூடாவை நியமிப்பதற்கு ராகுல் காந்தி காலம் தாழ்த்தி வந்தார். நாடாளுமன்ற தேர்தல்களில் தன்வரை தலைமையாக கொண்டு தேர்தலை சந்தித்தது காங்கிரஸ். ஆனால் தன்வரால் மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கவோ, கட்சியை ஒருங்கிணைக்கவோ இயலவில்லை. தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே இருந்த நிலையில் குமாரி செல்ஜாவையும், ஹூடாவையும் மீண்டும் ஹரியானாவில் தலைமை பொறுப்பில் அமர்த்தி தேர்தலை சந்திக்க வைத்தார் சோனியா காந்தி.
தேசிய கட்சியாக இருந்து இந்த தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்ளவில்லை. தேர்தலுக்கு வெறும் 10 நாட்களே இருந்த நிலையில் தான் கோ-ஆர்டினேசன் கமிட்டியே உருவாக்கப்பட்டது. அக்டோபர் 11ம் தேதி தான் முதல்முறையாக அந்த கமிட்டி உறுப்பினர்கள் சந்தித்தனர். அதன் பின்பு ஒரு முறையோ இருமுறையோ தான் சந்திப்பே நடைபெற்றது. கடந்த காலங்களைப் போல் இல்லாமல், இம்முறை ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் அதிக அளவு ஈடுபடவில்லை. மகாராஷ்ட்ராவில் ஐந்தும், ஹரியானாவில் 2ம் என 7 முறை தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சோனியா காந்தி பிரச்சாரத்திலேயே ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ராகுல் காந்தி கட்சியை நிர்வாகம் செய்த விதத்தினை குறை கூறி வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ப்ரெஸிடெண்ட் மற்றும் வொர்க்கிங் ப்ரெஸிடெண்ட்களை அவர் நியமித்திருந்தார். மகாராஷ்ட்ராவிலும் அவ்வாறு தான் நியமித்திருந்தார். அனைவரும் தேர்தலில் போட்டியிட, தலைமையின்றி தடுமாற்றத்தில் நின்றது மகாராஷ்ட்ரா காங்கிரஸ். ஆனால் ஹரியானாவில் வொர்க்கிங் ப்ரெஸிடெண்ட்கள் என யாரையும் நிர்ணயிக்கவில்லை சோனியா காந்தி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.