Main Bhi Chowkidar Event PM Narendra Modi : நேற்று பாஜக சார்பில் மெய்ன் பி சௌகிதார் “நான் காவலாளி” என்ற பெயரில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் காணொளி பிரச்சாரம் நடைபெற்றது. இந்த காணொளி நிகழ்வு மூலம் கட்சி உறுப்பினர்களிடம் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
பாலகோட் தாக்குதல் குறித்து நரேந்திர மோடி பேசும் போது, பாகிஸ்தான் தானாகவே செத்துவிடும். மோடி தேர்தல் வேலையில் மும்பரமாக இருக்கின்றான் என்று நினைத்துக் கொண்டு தங்களின் விமானப்படையை விரிவுபடுத்தி வருகிறது பாகிஸ்தான். எனக்கு நாடு தான் முக்கியம். தேர்தல் முக்கியமில்லை என்று கூறினார். மேலும், நாம் நிறைய முறை இந்தியா பாகிஸ்தான் குறித்து பேசியாகிவிட்டது. பாகிஸ்தான் தானாகவே செத்துவிடும். நாம் அதை கிடப்பில் போட்டுவிட்டு முன்னேறிச் செல்வோம் என்று அந்த கூட்டத்தில் உரை நிகழ்த்தினார் மோடி.
ராகுலின் வறுமை ஒழிப்பு திட்டம் குறித்து மோடியின் கருத்து
ராகுல் காந்தி கொண்டு வர இருக்கும் குறைந்தபட்ச வருமான உத்தரவு தொடர்பாக பேசிய போது “நேரு காலத்தில் இருந்து இதையே தான் கூறிக் கொண்டிருக்கிறார்கள். வறுமையை ஒழிக்கும் ஸ்லோகன்கள் தான் அதிகமாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் முதல் பிரதமரான நேரு முதல்முறையாக வறுமையை ஒழிக்க வேண்டும் என்று பேசத் துவங்கினார். அதன் பின்பு அவருடைய மகள் வறுமையோடு ஸ்லோகனையும் கொண்டு வந்தார். அவருடைய மகனும் அதையே தான் செய்தான் செய்தார். வறுமையும் வளர்ந்தது ஸ்லோகனும் வளர்ந்தது. அவருடைய மனைவி 10 வருடங்கள் நாட்டை ஆண்டார். அவரும் அதைத் தான் சொல்கின்றார். அவருடைய மகனும் அதைத்தான் சொல்கின்றார்.
பொய் வாக்குறுதிகளை நம்பாதீர்கள். சிலருக்குத் தெரியும் அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று. முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் வாக்காளர்கள், எதிர்கட்சியினர் கடந்து வந்த பாதையை கவனியுங்கள். அவர்கள் திரும்பத் திரும்ப அவர்கள் பேசும் ரெக்கார்ட் செய்யப்பட்ட வாக்குறுதிகளை நம்பாதீர்கள் என்றும் அவர் பேசினார்.
இனி இந்த நாட்டிற்கு ராஜாக்களும், மகாராஜாக்களும் தேவையில்லை. மக்கள் காவலாளிகளை விரும்புவார்கள் என்று நம்புகின்றேன். சௌகிதார் தரும் உத்வேகம் பரவிவருவதை நான் மகிழ்ச்சியுடன் காண்கின்றேன்.
மேலும் படிக்க : பாஜக தொப்பியை அணிய மறுத்த அமித் ஷா பேத்தி : க்யூட் வீடியோ
இந்த நாட்டை கொள்ளை அடித்தவர்கள் அனைவரும் நிச்சயமாக ஒரு பைசா கூட மிச்சம் வைக்காமல் இந்த நாட்டிற்கு திருப்பித் தருவார்கள். 2014 முதல் 2019 வரை நான் சில நபர்களை சிறையில் அடைக்க போதுமான முயற்சிகள் மேற்கொண்டேன். உங்களின் ஆசி இருந்தால் நிச்சயமாக அதனை வருகின்ற வருடங்களில் செய்து முடிப்பேன். இந்த நாட்டை கொள்ளையடிப்பவர்களிடம் இனி மிகவும் கடுமையாக நடந்து கொள்வேன் என்று கூறினார்.
மகாராஷ்ட்ராவில் இருந்து மோடியுடன் உரையாற்றிய கட்சித் தொண்டர் ஒருவர் பாலகோட் தாக்குதலுக்கான பாராட்டுகளை மோடியிடம் தெரிவித்த போது, தாக்குதலை நான் நடத்தவில்லை. நம் வீரர்கள் நடத்தினார்கள். நான் அவர்களை முழுமையாக நம்பினேன்” என்று பதில் கூறினார் மோடி.
40 வருடங்களுக்கு மேலாக நாம் தீவிரவாதத்தால் பெரும் அளவு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். நமக்குத் தெரியும் எந்த பிரச்சனைகளின் மூலவேர் எதுவேன்று. அதனால் தான் அங்கேயே தாக்குதல் நடத்தினோம். அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று மோடி கூறினார்.
மோடியை அவமானப்படுத்துபவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டே பாகிஸ்தானிற்கு உதவுபவர்கள் என்று சில முறைகள் கூறினார் மோடி.