சுற்றுச்சூழல் ஆர்வலரும் யூடியூப் இன்ஃப்ளூயன்சருமான பத்மப்ரியா, வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மதுரவாயல் தொகுதியில் போட்டியிடுகிறார். 25 வயதான இளம் வேட்பாளரான இவர் எதிர்கொள்ளும் முதல் சட்டமன்ற தேர்தல் இது. இந்நிலையில் காலை நடைப்பயிற்சியை அரசியல் களமாக மாற்றி வித்தியாச முறையில் வாக்குகளை சேகரித்து வருகிறார்.
Advertisment
கடந்த 16-ம் தேதி பத்மப்ரியா சென்னையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் பெஞ்சமின், திமுக சார்பில் காரப்பாக்கம் கணபதி ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அனுபவத்திலும், வயதிலும், ஊழலிலும் மூத்தவர்களை நான் எதிர்த்து நிற்கிறேன். இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை மக்கள் விரும்புகின்றனர். நிச்சயம் எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது'' என்று நம்பிக்கையுடன் கூறினார்.
ஏற்கெனவே சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து தனது வலுவான கருத்துக்களை முன் வைப்பதில் தீவிரமாக இருந்த இவர், 'சென்னை தமிழச்சி' என்ற பெயரில் தனிப்பட்ட முறையில் யூடியூப் செயலையும் தொடங்கினார். இதனால், மக்களிடத்தில் தனக்கென தனி இடத்தை ஏற்கெனவே செதுக்கியுள்ளார். சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டை (இ.ஐ.ஏ) விமர்சிக்கும் வீடியோவை உருவாக்கியதற்காகக் கடுமையான ஆன்லைன் தாக்குதல்களை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர், முன்னாள் விஞ்ஞானி, நடனக் கலைஞர், பாடகர் மற்றும் சொற்பொழிவாளரான பத்மப்ரியா, காலை நடைப்பயிற்சியை வாக்கு சேகரிக்கும் களமாக மாற்றியிருக்கிறார். நடைப்பயிற்சியின்போது அங்கு வரும் மக்களிடம் தனக்கான ஆதரவை சேகரித்திருக்கிறார். இதனை அவருடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார் பத்மப்ரியா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"