தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்தற்கு எதிராக கொல்கத்தாவின் முக்கிய இடமான காந்தி மூர்த்தியில் மூன்றரை மணி நேரம் தர்ணாவில் அமர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை இரவு கொல்கத்தாவில் அடுத்தடுத்து 2 பொதுக்கூட்டங்களை நடத்தினார். அவர் ஒரு தெரு போராளி என்றும் பாஜகவின் மிரட்டல் உத்திகளால் அவரை பணிய வைக்க முடியாது என்றும் கூறி பாஜகவை கடுமையாக சாடினார்.
பரசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியதாவது: “பாஜக பிரச்சாரம் செய்யலாம். நான் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. நான் எதுவும் சொல்ல மாட்டேன். இதைப் பற்றி வங்க மக்கள் முடிவெடுப்பார்கள். அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.” என்று கூறினார்.
தேர்தல் ஆணையம் விதித்த 24 மணி நேர தடை முடிந்த பின்னர், சரியாக இரவு 8.01 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் பேசிய அவர், “தோல்வியை உணர்ந்ததால்தான் என்னை பிரச்சாரம் செய்வதிலிருந்து பாஜக தடுக்க விரும்புகிறது” என்று கூறினார்.
பைதான்நகரில் நடந்த தனது அடுத்த பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷாவுக்கு தனது அரசாங்கம் மாதுவா சமூகத்திற்கு என்ன செய்தது என்பதை விவாதிப்பதற்கு தயாரா என்று சவால் விடுத்தார்.
“நான் மாதுவாக்களுக்கு என்ன செய்தேன் என்பது குறித்து ஒரு பொது விவாதத்திற்கு அமித்ஷாவுக்கு சவால் விடுகிறேன். அதில் நான் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்தேன் என்பதை நிரூபிக்கத் தவறினால், நான் அரசியலை விட்டு விலகுகிறேன். ஆனால், உங்கள் கருத்தை நீங்கள் நிரூபிக்கத் தவறினால், நீங்கள் அமைதியாக அமர வேண்டும்” என்று அவர் கூறினார்.
“பாஜக எல்லா சக்தியையும் பயன்படுத்த முயற்சிக்கிறது. பெரிய தலைவர்கள் மற்றும் சிறிய தலைவர்கள் என பாஜக தலைவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்திற்கு வருகிறார்கள். அவர்கள் எல்லா சக்தியையும் பயன்படுத்த முடியும். ஆனால், வங்காளத்தை குஜராத் ஆக்குவதற்கு நாங்கள் அவர்களை அனுமதிக்கமாட்டோம்… இந்தத் தேர்தல் வங்காளத்தின் கௌரவத்தைக் காப்பாற்றும் தேர்தலாகும். இந்த தேர்தல் வங்காளம் குஜராத்தாக மாறாது என்பதை உறுதி செய்யும் தேர்தலாகும். இந்தத் தேர்தல் வங்காளம் குண்டர்களின் கைகளுக்குச் செல்லாது என்பதை உறுதி செய்யும் தேர்தல். பாஜகவை வங்காளத்திலிருந்து வெளியேற்றுவதற்கான தேர்தல் இது. இந்த நாட்டை காப்பாற்றுவதற்கான தேர்தல் இது” என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 10ம் தேதி நடைபெறும் நான்காவது கட்ட வாக்குப்பதிவின்போது மத்திய படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 4 பேரின் குடும்பத்தினரை சந்திக்க புதன்கிழமை கூச் பெஹரில் உள்ள சிதல்குச்சிக்கு வருவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். மேலும், அன்றைக்கு கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினரையும் அவர் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நான் நாளை சிதல்குச்சிக்குச் செல்வேன். மத்திய படைகளின் தோட்டாக்களால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை மட்டுமல்ல, சமூக விரோதிகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களையும் சந்திப்பேன். இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். எல்லா மரணங்களுக்கும் நான் வருத்தப்படுகிறேன்” என்று மம்தா பானர்ஜி கூறினார்.
கடந்த சனிக்கிழமையன்று சிதல்குச்சியில் 5 பேர் இறந்தனர். இதனைத் தொடர்ந்து, அடுத்த 72 மணிநேரத்துக்கு அரசியல்வாதிகள் இப்பகுதியில் நுழைவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதிக்குச் செல்ல விரும்பினார். ஆனால், தேர்தல் அமைப்பின் முடிவு காரணமாக, அவர் அந்த திட்டத்தை ஒத்திவைக்க வேண்டியிருந்தது.
முன்னதாக, 24 மணி நேரம் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து அவர் கொல்கத்தா நகரின் மையப் பகுதியில் தர்ணாவில் அமர்ந்தார்.
கடந்த மாதம், நந்திகிராமில் ஏற்பட்ட காயம் காரணமாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிற மம்தா பானர்ஜி, காலை 11.40 மணியளவில் மாயோ சாலைக்கு வந்து மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகில் உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கினார். அந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்திருந்தனர். அங்கே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களோ ஆதரவாளர்களோ அருகில் காணப்படவில்லை.
“மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்ட இடத்திற்கு அருகில் கட்சி உறுப்பினரும் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர் அங்கே தனியாக அமர்ந்திருந்தார்” என்று ஒரு மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அப்போது எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அடையாளமாக கழுத்தில் கறுப்பு துணியை மூடியிருந்த முதல்வர் மம்தா பானர்ஜி, மூன்றரை மணி நேர உள்ளிருப்பு போராட்டத்தின்போது அவருடைய பொழுதுபோக்குகளில் ஒன்றான ஓவியங்களை பார்த்துக்கொண்டிருந்தார். எதுவும் பேசாமல் வீடு திரும்பும் முன் பார்வையாளர்களுக்கு ஓவியங்களைக் காட்டினார்.
தேர்தல் ஆணையம் மம்தா பானர்ஜியின் ஆத்திரமூட்டும் கருத்துக்களுக்காக 24 மணிநேரம் பிரச்சாரம் செய்யத் தடையை விதித்தது. அவருடைய பேச்சு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும் திறன் உள்ளதாக தேர்தல் அமைப்பு கூறியது.
தேர்தல் ஆணையத்தின் முடிவை “ஜனநாயகத்துக்கு விரோதமானது அரசியலமைப்பிற்கு விரோதமானது” என்று கூறிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை தர்ணாவில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.