ஓரிரு வாரங்களுக்கு முன்பு எந்த கோபாலபுரம் வாசலில் நின்று புதிய கட்சித் தொடங்கப்போவதாக மு.க.அழகிரி கூறினாரோ... அதே கோபாலபுரம் வாசலில் வரிசையாக இருக்கைகளைப் போட்டு திங்கட்கிழமை பிரஸ்மீட் நடத்தி முடித்திருக்கிறார் ஸ்டாலின்.
கிட்டத்தட்ட ஆட்சிக்கு வந்துவிட்டதுபோலவே ஸ்டாலின் முழக்கம் இருந்தது. ‘மு.க.ஸ்டாலின் ஆகிய நான், மக்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறேன். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் மக்களின் தனிப்பட்ட பிரச்னைகளை தீர்ப்பேன்’ என்றார் ஸ்டாலின். ஆனால், ‘தொண்டர்களிடம் ஆலோசித்து கட்சி தொடங்குவதாக’ இதே இடத்தில் கூறிய மு.க.அழகிரி இன்னும் மவுனமாக இருக்கிறார்.
கோபாலபுரம் முழக்கத்திற்கு பிறகு மதுரையில் அழகிரி கூட்டிய ஆலோசனைக் கூட்டத்திற்கு, பலரும் வியக்கிற விதமாக கூட்டம் திரண்டது உண்மை. எனவே அழகிரி அதிவிரைவில் கட்சி தொடங்குவார் என்கிற எதிர்பார்ப்பும் எகிறியது. ஆனால் அதன்பிறகு அழகிரியே எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் அரங்கேறியது. அதுதான் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் துறவறம்!
ரஜினிகாந்துடன் அழகிரிக்கு நல்ல புரிதல் உண்டு. எனவே ஒரு கட்சி தொடங்கி, ரஜினிகாந்துடன் இணைந்து களமாடுவது அவரது விடுப்பமாக இருந்தது. ஆனால் ரஜினியே விலகியபிறகு, கட்சி தொடங்கி என்ன செய்வது? என்கிற பெரும் கேள்வி அழகிரியை ஆட்டிப் படைப்பதாகக் கூறுகிறார்கள்.
இதையும் தாண்டி ஜனவரி 20 முதல் 22-க்குள் ஒரு தேதியில் கட்சி அறிவிப்பை அழகிரி வெளியிட இருப்பதாக தகவல்கள் வந்தன. அதுவும் நடைபெறவில்லை. இதனால் மதுரை ஆலோசனைக் கூட்டத்திற்கு சென்ற அழகிரி ஆதரவாளர்கள் பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
‘கட்சி தொடங்கினால், ஜெயித்தே ஆகவேண்டும்; ஆட்சியைப் பிடித்தே ஆகவேண்டும் என்று அவசியமில்லை. அண்ணன் புதிதாக ஒரு இயக்கம் அல்லது கட்சி தொடங்கினால், திமுக.வின் இன்றைய செயல்பாடுகளில் வெறுப்புற்றிருக்கும் கலைஞரின் விசுவாசிகள் பலர் அணிவகுக்கத் தயாராகவே இருக்கிறார்கள்.
அவர்களில் பலர் திமுக.வில் கலைஞர் காலத்தில் ஒன்றியச் செயலாளர், மாவட்ட இணை, துணைச் செயலாளர் என பொறுப்பு வகித்தவர்கள். இவர்கள் யாருக்கும் எம்.எல்.ஏ., எம்.பி பதவி மீது ஆசை இல்லை, அதே சமயம் கலைஞர், அழகிரி அடையாளத்துடன் தங்கள் பகுதியில் இயங்குவதன் மூலமாக மக்கள் பிரச்னைகளுக்காக களத்தில் நிற்க முடியும் என நம்புகிறார்கள். எனவே அண்ணன் (அழகிரி) ஒரு இயக்கம் தொடங்க வேண்டும் என்பதுதான் என் போன்றவர்களின் விருப்பம்’ என்றார், மத்திய மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி ஒருவர்.
ஆனால் அழகிரி கடந்த சில நாட்களாகவே பெரும் அமைதியில் இருக்கிறார். ஜனவரி 30-ம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வருகிறார். அங்கு கட்சியின் பூத் ஏஜெண்டுகள் மத்தியில் அவர் பேசுகிறார். அதே 30-ம் தேதிதான் அழகிரியின் பிறந்த நாள். மதுரைக்கு வரும் ஜே.பி.நட்டா அப்படியே அழகிரியையும் சந்தித்து வாழ்த்து கூறக்கூடும் என அரசியல் வட்டாரம் எதிர்பார்க்கிறது.
ஆனால் அழகிரிக்கு நெருக்கமான மதுரை பிரமுகர்களோ, ‘பாஜக தேசியத் தலைவரை சந்தித்து வாழ்த்து பெறும் மனநிலையில் அண்ணன் இல்லை. பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளின் அடையாளம் தன் மீது படிவதையும் அண்ணன் விரும்பவில்லை. இந்த ஆண்டு ஜனவரி 30-ம் தேதி பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் அண்ணன் தவிர்க்கிறார். அநேகமாக அன்று அவர் (மு.க.அழகிரி) மதுரையில் இருக்க மாட்டார். அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தை புறக்கணிக்கிறாரா? அல்லது, ஜே.பி.நட்டாவை புறக்கணிக்கிறாரா? என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறோம்’ என்கிறார்கள்.
ரஜினி ஒதுங்கிவிட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியாது என்கிற மனநிலைக்கு அழகிரி வந்துவிட்டார். எனவே அவர் இப்போதைக்கு அரசியல் அரிதாரம் பூசமாட்டார். தேர்தல் முடிந்தபிறகே அவரது நகர்வுகள் இருக்கும் என இன்னொரு தரப்பினர் கூறுகிறார்கள். சஸ்பென்ஸ் மயமாக இருக்கிறது, அழகிரி வட்டாரம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"