MK Alagiri comments on DMK-Congress Alliance: அரசியல் வட்டாரத்தில் மாயமாகியிருந்த மு.க.அழகிரி சரியாக தேர்தல் நெருங்கும் நேரத்தில் மறுபடியும் லைம்லைட்டுக்கு வருகிறார். திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி வாய்ப்பு குறித்து அவரது கருத்து இங்கே...
கருணாநிதி மறைவை தொடர்ந்து, கடைசியாக தனது ஆதரவாளர்களை திரட்டி சென்னையில் இரங்கல் ஊர்வலம் நடத்தினார் மு.க.அழகிரி. அதன்பிறகு அதிகம் அரசியல் கருத்துகள் பேசாமல் இருந்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிற வேளையில், மறுபடியும் வாய் திறந்திருக்கிறார் அழகிரி. சென்னையில் இன்று அவரை சந்தித்த செய்தியாளர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து கருத்து கேட்டனர்.
அதற்கு அழகிரி, ‘கடந்த தேர்தல்களைப் போல இருக்கும்’ என்று மட்டும் சொன்னார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சிக்கு வரவில்லை. எனவே திமுக-காங்கிரஸ் கூட்டணி தோற்கும் என்பதாக அவரது கருத்தை ஊடகங்கள் எடுத்துக் கொண்டன.
கடந்த காலங்களில் இடைத்தேர்தல்களில் வாக்கு வித்தியாசத்தைக்கூட சரியாக கணிக்கிறவராக இருந்தார் அழகிரி. இப்போது திமுக அணி வலுவாக இருப்பதாக பலரும் கூறி வரும் நிலையில், அழகிரியின் இந்த கருத்து பலருக்கு ஆச்சர்யத்தையும், திமுக.வினருக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.