திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே உத்தேச அமைச்சர்கள் பட்டியல், சபாநாயகர் யார் என முடிவு செய்திருந்த நிலையில், தேர்தல் முடிவில் தான் எதிர்பார்த்த வேட்பாளர்கள் வெற்றி பெறாததால் யாரை சபாநாயகராக்குவது என்று ஆலோசித்து வருகிறார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாக்குப்பதிவு முடிந்ததுமே குடும்பத்துடன் கொடைக்காணல் சென்ற மு.க.ஸ்டாலின், திமுகதான் ஆட்சி அமைக்கப்போகிறது என்ற உறுதியான நம்பிக்கையில் உத்தேச அமைச்சர்கள் பட்டியலையும் சட்டப்பேரவை சபாநாயகர் யார் என்பதையும் முடிவு செய்துள்ளதாக உத்தேச பட்டியல் ஊடகங்களில் பேசப்பட்டது.
அதில், சென்னை ஆயிரம் விளக்கில் போட்டியிட்ட டாக்டர் எழிலன், உதயநிதி, அன்பில் மகேஷ் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அதே போல, வயது காரணமாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் துணை பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசனை சபாநாயகராக நியமிக்க ஸ்டாலின் திட்டமிட்டிருந்ததாக பேசப்பட்டது.
ஆனால், தேர்தல் முடிவுகள் ஸ்டாலின் முடிவுகளை மாற்றும் வகையில் வெளியாகி உள்ளது. மொடக்குறிச்சி தொகுதியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் மிகவும் குறவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதே போல, திமுக ஆட்சிக் காலத்தில் சபாநாயகராக இருந்த ஆவுடையப்பனும் தோல்வியடைந்தார். திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தனது சொந்த தொகுதியான காட்பாடியில் போராடி 748 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுகவில் ஸ்டாலின் எதிர்பார்த்த முத்துலட்சுமி ஜெகதீசன், ஆவுடையப்பன் உள்ளிட்ட சிலர் தோல்வியடைந்ததால், அமைச்சர் பட்டியலையும் சபாநாயகராக யாரை நியமிக்கலாம் என்று ஆலோசித்து வருவதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆவுடையப்பன் ஆகியோர் தோல்வியடைந்ததால், அவருக்கு பதில் அனுபவம் வாய்ந்த திறமையான நம்பிக்கையான ஒருவர் சபாநாயகராக நியமிக்க வேண்டும். அதற்கு யாரை தேர்வு செய்யலாம் என்ற பேச்சில் இரண்டு பெயர்கள் விவாதிக்கப்படுகிறதாம். ஒன்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், இரண்டாவது சைதாப்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்.
துரைமுருகன் பொதுப்பணித்துறையைத்தான் எதிர்பார்க்கிறாராம். அவருக்கு சட்டத்துறை அளிக்கப்படும் என்ற பேச்சையே அவர் விரும்பவில்லை என்று வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சூழலில் அவர்தான் சபாநாயகர் என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கிறார்கள் திமுகவினர். ஏனென்றால், சபாநாயகராக இருப்பவர் கட்சிப் பதவியில் இருக்கக் கூடாது. திமுகவில் அதிகாரமிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவியை அவர் ஒருபோதும் விடமாட்டார். அதனால், துரைமுருகனை சபாநாயகராக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்கின்றனர்.
ஆனால், மா.சுப்பிரமணியனை சட்டப்பேரவை சபாநாயகர் ஆக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சி மேயர் பதவி மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு மா.சுப்பிரமணியன்தான் வகித்தார். அவருக்கு மேயராக இருந்து சபையை நடத்திய அனுபவம் இருக்கிறது. அதே போல, எம்.எல்.ஏ-வாகவும் இருந்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், மு.க.ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் மிகவும் நம்பிக்கையானவர் மா.சுப்பிரமணியன். சாபாநாயகர் பதவி என்பது அதிகாரமிக்க அமைச்சர் பதவி போல இல்லை என்றாலும் கௌரவமான மதிக்கத்தக்க பதவி. அந்த பதவியின் மேன்மையை உணர்ந்து நடந்துகொள்வார் மா.சுப்பிரமணியன். சபை நடவடிக்கைகளையும் நல்லபடியாக நடத்துவார். அதே நேரத்தில், இனிவரும் காலங்களில் அமைச்சர் பதவி வகிக்க அவருக்கு வயதும் இருக்கிறது. அதனால், மு.க.ஸ்டாலின், சபாநாயகர் பதவி மா.சுப்பிரமணியனுக்குதான் வழங்க முடிவு செய்துள்ளார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“