TamilNadu Election Results Live News : தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தற்போதையை நிலவரப்படி, திமுக தனித்து நின்ற தொகுதிகளில் 115 இடங்களில் வெற்றிப் பெற்றும், 17 இடங்களில் முன்னிலையிலும் இருந்து வருகிறது. கூட்டணி கட்சிகளின் வெற்றி உள்பட ஏறத்தாழ 155 இடங்களில் திமுக வெற்றி உறுதியாகி உள்ளது.
Advertisment
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக கொளத்தூரில் களம் கண்ட திமுக தலைவர் ஸ்டாலின், 1,05,794 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதிராஜாராமை விட 70,580 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிப் பெற்றுள்ளார்.
வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொள்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை லாயோலா கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்துக்கு நள்ளிரவில் சென்றார். பின், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொண்ட பின், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
அதன்பின், செய்தியாளரக்ளைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக வின் வெற்றிக்கு வழிவகுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப, பொறுப்பு உணர்ந்து செயல்படுவோம். தேர்தலுக்கு முன் வெளியிட்ட 7 அறிவிப்புகளை 10 ஆண்டுகள் அடிப்படையில் செயல்படுத்துவோம். தற்போது வெற்றிப்பெற்றுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டி, முறையாக தலைவரை தேர்ந்தெடுத்து ஆட்சி அமைப்போம். பதவியேற்பு விழா, கொரோனா சூழலால் மிகவும் எளிமையான முறையில், ஆளுநர் மாளிகையிலேயே நடைபெறும். திமுக வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், தனிப் பெரும்பாண்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil