தமிழகத்தில் வருகிற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், அதிமுக கட்சியைத் தொடங்கிய முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு பாஜக, தேமுதிக உரிமை கொண்டாடி வந்த நிலையில், தற்போது அதிமுகவுக்கு எதிர் துருவமான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் எம்.ஜி.ஆர்-ஐ பெரியப்பா என்று உரிமை கொண்டாடியுள்ளது தமிழக அரசியலில் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் நேரு, அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர், அண்ணா, போன்ற தலைவர்கள் கட்சிகளைக் கடந்து பொது அரசியல் பிம்பங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்துள்ளனர். அந்த வரிசையில் சமீப காலமாக அதிமுகவைத் தோற்றுவித்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரும் சேர்ந்துள்ளார்.
எம்.ஜி.ஆரை அதிமுக மட்டுமே கொண்டாடி வந்த நிலையில், தேமுதிக விஜயகாந்த்தை அக்கட்சியினர் கருப்பு எம்.ஜி.ஆர் என்று கூறி பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். அவரைத் தொடர்ந்து, பாஜகவும் வேல் யாத்திரை பிரச்சாரப் பாடல் வெளியிட்டபோது அதில் பொன்மனச் செம்மல் என்று எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தியது. பாஜகவை அடுத்து, எம்.ஜி.ஆர் பெயரை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பயன்படுத்தினார். எம்.ஜி.ஆர் கைகளில் தவழ்ந்து விளையாடியவன் அதனால் மற்றவர்களைவிட எம்.ஜி.ஆரை உச்சரிக்க தனக்கு அதிக உரிமை உள்ளதாக கமல்ஹாசன் கூறினார். இதற்கு அதிமுகவில் இருந்து அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்.ஜி.ஆர் பெயரையும் அவருடைய புகைப்படத்தையும் அதிமுக மட்டுமே பயன்படுத்தும். மற்றவ அரசியல் கட்சிகள் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.
இந்த சூழலில்தான், ஆளும் அதிமுகவுக்கு எதிர் துருவமாக இருக்கும் எதிர்க்கட்சியான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனியா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், எம்.ஜி.ஆரை பெரியப்பா என்று அழைத்ததை உணர்வுப் பூர்வமாக நினைவு கூர்ந்தார். அதில், ஸ்டாலின் தன்னுடைய சிறுவயதில் ஒரு நாடகம் போட்டதாகவும், அந்த நாடகத்தின் நிறைவு விழாவில் அப்போது திமுக தலைவர் கருணாநிதி நாடகத்தில் நடித்த அனைவரையும் பாராட்டி மோதிரம் போட்டார். அப்போது திமுகவின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் பாராட்டு சான்றிதழ் வழங்கியதாகவும் நினைவு கூர்ந்தார். மேலும், அப்போது எனக்கு அறிவுரை கூறி வாழ்த்தி பேசும்போது கூறினார், “நான் அப்பா ஸ்தானத்தில் இல்லை. பெரியப்பா ஸ்தானத்தில் இருந்து உனக்கு அறிவுரை கூறுகிறேன். நீ இதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு படிப்பில் கவனத்தை செலுத்து. படித்து முன்னேறி வர வேண்டும். அதற்குப் பிறகு, நீதி இதில் வர வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை. உன்னுடைய பணிகள் எல்லாம் பாராட்டுக்குரியது. ரொம்ப மகிழ்ச்சிக்குரியது. உன்னுடைய அப்பா இதை சொல்ல முடியாவிட்டாலும் கூட பெரியப்பா என்ற ஸ்தானத்தில் இருந்து நான் இதை சொல்கிறேன் என்று எம்.ஜி.ஆர் கூறியது இன்னும் பசுமையாக தனது நினைவில் இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் பெரியப்பா என்று கூறிய மு.க.ஸ்டாலினின் பேட்டி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரிய அளவில் வைரலானது. தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆரின் பெயரையும் புகழையும் பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறார் என்று அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, “இதே பெரியப்பாவை திமுகவில் இருந்து வெளியே தூக்கிப்போடும்போது, ஏம்பா பெரியப்பாவை தூக்கி வெளியே போடுற? செய்யக்கூடாதுப்பா அப்படினு அவங்க அப்பாவிட சொல்லியிருக்கலாம்ல… அடம் பிடிச்சிருகலாம்ல.. சரி பெரியப்பா கட்சி ஆரம்பிச்சாருல்ல அவர் (ஸ்டாலின்) வந்தாரா? வந்து பேசினாரா? பெரியப்பாவை (எம்.ஜி.ஆர்) இந்த எலக்ஷன் நேரத்தில்தான் தெரிந்ததா?” என்று கேட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.