தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தமிழகத்தில் திமுகதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் திமுகவில் யார் யாருக்கு எந்தெந்த துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்படும் என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, முக்கிய துறைகளான பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, நிதித்துறை யாருக்கு ஒதுக்கப்படும் என்ற பேச்சுகள் கிளம்பியுள்ளன.
தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததுமே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்று ஓய்வெடுத்தார். அங்கே மலைகளை இயற்கை சூழலை குடும்பத்துடன் சுற்றிப் பார்த்தார். திமுகதான் தேர்தலில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வந்ததால், மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் ஓய்வு மட்டும் எடுக்காமல், ஒரு உத்தேச அமைச்சர்களின் பட்டியலையும் தயார் செய்தார் என்று செய்திகள் வெளியானது.
அது மட்டுமில்லாமல், திமுக முன்னாள் எம்.பி சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு சபாநாயகர் பதவி அளித்து தமிழகத்தின் முதல் பெண் சபாநாயகர் என்று வரலாற்றில் பதிவு செய்ய மு.க.ஸ்டாலின் முடிவு செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவார்கள் புதுமுகங்களுக்கு இடம் கொடுக்கப்படுமா? யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கபடும்? பொதுப்பணித் துறை, உள்ளாட்சி துறை, நிதித்துறை, சுகாதாரத்துறை ஆகிய முக்கிய துறைகள் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற விவாதங்கள் திமுகவிலும் திமுகவுக்கு வெளியேயும் நடந்து வருகிறது.
மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் சீனியர்களுக்கும் முக்கியத்துவம் இல்லாத துறைகளை ஒதுக்கிவிட்டு இளைஞர்களுக்கு முக்கிய துறைகளை அளிக்க முடிவுசெய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் பட்டியலை மூத்த நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோரை வைத்து தயார் செய்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின், திமுகவில் அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவியை வகித்துவரும் மூத்த தலைவர் துரைமுருகனிடம் அமைச்சரவை அமைப்பது குறித்து ஆலோசனை கேட்டதாகவும் அதற்கு துரைமுருகன் வேட்பாளர் தேர்வை சிறப்பாக செய்ததைப் போல அமைச்சர்கள் தேர்வையும் நீங்களே சிறப்பாக செய்யுங்கள் என்று கூறினார் என்று வட்டாரங்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளன. வேட்பாளர் பட்டியல் தயார் செய்ததைப் போல, அமைச்சர்கள் பட்டியலும் தயார் செய்துவிட்டு சடங்குக்கு தன்னிடம் ஆலோசனை கேட்பதாக அதிருப்தியில் உள்ளதாக காட்பாடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யார் என்ன அதிருப்தியில் இருந்தாலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தலைமையிலான அமைச்சரவையில், இளைஞர்களுக்கு புது முகங்களுக்கும் இடம் தர முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி, அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும், 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் மு.க.ஸ்டாலின் வகித்த உள்ளாட்சித் துறை அல்லது மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அண்ணா காலத்தில் அமைச்சர் பதவி வகித்த பொதுப்பணித்துறை உதயநிதிக்கு ஒதுக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதோடு, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்புவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டுள்ள டாக்டர் எழிலனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதே நேரத்தில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு நிதித் துறை ஒதுக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அமைச்சரவையில் பொதுத்துறையை எதிர்பார்த்ததாகவும் ஆனால், அவருடைய முதுமை உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஸ்டாலின் சட்டத்துறையை ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் மற்றொரு திமுக வட்டாரங்கள் தெரிவிகின்றன.
திமுக தேர்தலில் வெற்றி பெற்றால், ஸ்டாலின் தலைமையில் அமைய உள்ள அமைச்சரவை குறித்த விவாதங்கள், பேச்சுகளுக்கு எல்லாம் தேர்தல் முடிவுகள் வெளியாகிற அன்று விடை தெரியவரும். அதுவரை காத்திருப்போம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.