ஸ்டாலின், சபரீசன், பி.கே. : ‘ஐபேக்’ ஆபீஸில் உற்சாக சந்திப்பு வீடியோ

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாள் அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென திமுகவின் தேர்தல் பிரசார உத்தி வகுத்து தந்த ஐபேக் தலைமை அலுவலகத்தை திடீரென விசிட் அடித்து பிரசாந்த் கிஷோருக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாள் அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென திமுகவின் தேர்தல் பிரசார உத்தி வகுத்து தந்த ஐபேக் தலைமை அலுவலகத்தை திடீரென விசிட் அடித்து பிரசாந்த் கிஷோருக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளார். ஐபேக் குழு அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் விசிட் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது. இதனிடையே, சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற கருத்துக் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியை இழந்துள்ள திமுக இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தலை எதிர்கொண்டது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, பிரபல தேர்தல் பிரசார உத்தி நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழு திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார உத்தி வகுத்து அளிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதற்காக, பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துக்கு 250 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அப்போதே, திமுகவின் முக்கிய தலைவர்களான ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்தனர். 50 ஆண்டுகளாக அரசியலில் ஊறிப்போயுள்ள திமுககாரர்களுக்கு தெரியாத தேர்தல் பிரசாரம் உத்தி வடநாட்டில் இருந்து வரும் யாரோ ஒரு பிரசாந்த் கிஷோருக்கு தெரிந்துவிடுமா என்று சலசலப்புகளும் திமுகவில் எழுந்தது.

திமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் ஐபேக் உடன் தேர்தல் பிரசார உத்தி ஒப்பந்தம் செய்வதில் தங்களுக்கு இருந்த அதிருப்தியை ஸ்டாலினிடம் வெளிப்படுத்தாமல் முனுமுனுத்தனர். திமுக மூத்த தலைவர்களின் மௌன அதிருப்தியைத் தாண்டி பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழு ஒப்பந்தப்படி தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார உத்திகளை வகுத்து அளிப்பதில் இறங்கியது.

திமுகவுடன் தேர்தல் பிரசார ஒப்பந்தம் செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நிதிஷ்குமாரால் வெளியேற்றப்பட்டார். பிரசாந்த் கிஷோர் 2014ம் ஆண்டு பிரதமர் மோடிக்கும் அதற்கு அடுத்து வந்த டெல்லி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக தேர்தல் உத்திகளை வகுத்து அளித்தார். பிரசாந்த் கிஷோரின் ஐபேக் எப்போது வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சிகளுக்குதான் பிரசாரம் செய்து வெற்றிக்கான காரணத்தை எடுத்துக்கொள்கிறது என்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டது.

இந்த சூழலில்தான், பிரசாந்த் கிஷோரின் ஐபேக், தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் உத்திகளை வகுத்து செயல்பட்டது. ஐபேக் குழுவினர் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்து தரவுகளை சேகரித்தது. அதோடு, திமுகவின் வேட்பாளர்கள் தேர்விலும் களப் பணிகளை உத்தரவிடுவதிலும் ஐபேக்கின் டஸ் இருந்தது. அதுமட்டுமில்லாமல் தேர்தலுக்கு முன்னதாகவே, ஸ்டாலினின் விடியலை நோக்கி போன்ற பிரசார திட்டங்களை வகுத்து அளித்தது.

அவ்வப்போது சில சலசலப்புகள் இருந்தாலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாந்த் கிஷோரின் ஐபேக்கை முழுமையாக நம்பி சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டார். ஐபேக் குழுவினர் சென்னை தேனாம்பேட்டையில் அலுவலகம் அமைத்து சுமார் 150 பேருக்கு மேல் தேர்தல் பிரசார உத்திகள் செயல்படுத்துவதையும் தேர்தல் களத்தையும் கண்காணித்து வந்தனர். ஐபேக் குழு வாக்குப்பதிவு அன்று ஒவ்வொரு தொகுதியையும் அங்குலம் அங்குலமாக கண்காணித்து வந்தது.

ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சாதகமான தேர்தல் கணிப்புகள் வந்து சேர்ந்து கொண்டிருந்தது. மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினரின் கணிப்பு 180 இடங்களில் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறியிருந்த நிலையில், வாக்குப்பதிவும் முடியும் நேரம் நெருங்க நெருங்க திமுக எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும் என்ற தகவல்களை ஐபேக் தெரிவித்துக்கொண்டிருந்தது. இதனால், மு.க.ஸ்டாலினின் திமுக வட்டாரங்களும் இதையே கூறியதால், மகிழ்சியடைந்த மு.க.ஸ்டாலின், தனது மருமகன் சபரீசனுடன் புறப்பட்டு தேனாம்பேட்டையில் உள்ள ஐபேக் தலைமை அலுவலகத்துக்கு திடீரென விசிட் அடித்திருக்கிறார். மு.க.ஸ்டாலின் திடீரென அலுவலகத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்காத ஐபேக் குழுவினர் ஸ்டாலினின் வருகை சரபிரைஸாக அமைந்தது.

ஐபேக் குழுவினர் வாக்குப்பதிவு அன்று ஊடகங்களையும் தொகுதி நிலவரங்களையும் பிஸியாக கண்காணித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஸ்டாலின் வருவதைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் திகைத்துப்போனதோடு, அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அங்கே தன்னை வரவேற்ற அனைவரையும் கைகூப்பி வணக்கம் தெரிவித்தபடி உள்ளே சென்ற மு.க.ஸ்டாலின் ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோரை சந்தித்துப் பேசினார். ஐபேக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அப்போது, ஸ்டாலினுடன் அவருடைய மருமகன் சபரீசனும் உடன் இருந்தார். ஐபேக் தலைமை அலுவலகத்துக்கு மு.க.ஸ்டாலின் திடீரென விசிடி அடித்து சர்பிரைஸ் கொடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

கருத்துக் கணிப்புகள், ஐபேக் ரிப்போர்ட்கள், எல்லாம் சாதகமாக இருந்தாலும், ஆக்கப்பூர்வமாக வெற்றியை அறிவிக்கும் வரை திமுகவினருக்கு பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஐபேக்கின் வேலை திமுகவுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருந்தது என்பது மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போதுதான் தெரியவரும். அதுவரை எல்லாம் நம்பிக்கை சார்ந்ததாகவே இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mk stalin surprise visit prashant kishor ipac team video goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com