NTK Vote Bank News Assembly Election 2021 : சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ள நிலையில், ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் பத்தாண்டுகளை கடந்து, தனிப் பெரும்பான்மையோடு தற்போது ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகமும், வலுவான எதிர்க்கட்சியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் 16-வது சட்டப்பேரவையை அலங்கரிக்க உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலே, ஆட்சியில் திமுக, எதிர்க்கட்சியாக அதிமுக என்ற அரசியல் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், மூன்றாம் இடம் யாருக்கு என்ற தலைப்பு தமிழக அரசியல் களத்தையே அனல் பறக்க வைத்தது.
அதிமுக, திமுக வை அடுத்து, தினகரன் தலைமையிலான அமமுக, கமல்ஹாசன் தலைமையிலான மநீம ஆகிய கட்சிகளில் ஏதேனும் ஒன்று மூன்றாம் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்ப்புகள் அனைத்தும் தவிடு பொடியாகி உள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பிற கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு சிம்ம சொப்பனமாகவே விளங்கி உள்ளனர். திராவிட அரசியலுக்கு மாற்றாக, மாற்று அரசியலை மக்கள் நாட தொடங்கி உள்ளனர் என்பதை விளக்கும் விதமாக, சுமார் 175 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார். வெற்றிப் பெற்றுவிடுவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 39588 வாக்கு வித்தியாசத்தில் 48,597 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியானது, இந்த தேர்தலை அடிப்படையாக கொண்டு 6.85 சதவீதமாக உயர்ந்துள்ளது. 234 தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை 2,967,853 ஆகும். சீமானுக்கு அடுத்தப் படியாக, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட வேல்ராஜ் 30,937 வாக்குகளையும், ஆவடி தொகுதியில் போட்டியிட்ட விஜயலட்சுமி 30,063 வாக்குகளையும், பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்ட மணிமேகலை 29,871 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் 17 வேட்பாளர்கள் 20000-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளனர். துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட முகமது கடாபி 3,357 வாக்குகளைப் பெற்று, நாம் தமிழர் கட்சிக்கு மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளராக உள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 60000 வாக்குகளை பெற்று அரசியல் முக்கியத்துவம் பெற்ற நாம் தமிழரின் அறிமுக வேட்பாளரான காளியம்மாள், பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டதில் 14,823 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளார்.
இருப்பினும், சீமான் உள்பட நாம் தமிழர் வேட்பாளர்கள் யாரும் வெற்றிப் பெறாத சூழலில், அவர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. இருபெரும் திராவிட கட்சிகளுக்கு அடுத்து, தமிழ் தேசிய அரசியல் பேசும் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தை தற்போது பிடித்திருப்பது, எதிர்கால அரசியலுக்கான் அச்சாணி என அரசியல் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil