Ravik Bhattacharya , Atri Mitra , Amitava Chakraborty
Nandigram boils over : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் தொகுதியான நந்திகிராமில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின் போது அளவுக்கு அதிகமான பதட்டம் நிலவியது. குற்றச்சாட்டுகள் அதிகமாகவும் வேகமாகவும் பரவின. 30 தொகுதிகளில் மாலை ஐந்து மணி வரை நடைபெற்ற வாக்கு பதிவில் 80% வாக்குகள் பதிவாகியிருந்தன. மேற்கு வங்கத்தில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 76 லட்சம்.
டிஎம்சி மற்றும் பாஜக ஆதரவாளர்கள் பரபரப்பை ஏற்படுத்திய தொகுதி ஒன்றில் மம்தா பானர்ஜி இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக தங்கியிருந்தார். அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தபோது அவருடைய பாதுகாவலர்கள் ஒரு பாதுகாப்பு வளைவை உருவாக்கியிருந்தனர். மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் வந்த பிறகு அவர் அங்கிருந்து வெளியேற முடிந்தது.
பின்பு அவர் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் பாஜக வாக்காளர்களை எழுதியதாகவும் குற்றம் சுமத்தினார். ஆளுநர் ஜெகதீப் தங்கரை அழைத்து பேசிய அவர் அதுகுறித்த தகவல்களை வெளியிட மறுத்துவிட்டார். ஆளுநர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு பார்வையாளரிடம் பேசினேன். ஆனால் அதில் என்ன பேசினோம் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியாது என்று வாக்குச் சாவடியில் இருந்து வெளியே வந்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார் மம்தா பானர்ஜி. அவருக்கு எதிராக பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி அந்த தொகுதியின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும் மத்திய பாதுகாப்பு படையினர் தேர்தல் ஆணையத்தின் நடத்தையும் அவர் பாராட்டினார்.
பானர்ஜியின் கருத்துக்கு பதில் கூறிய அவர் இந்த நிகழ்வு மற்றும் அவருடைய நடத்தை அவர் தேர்தலில் தோல்வியுற்றதை காட்டுகிறது. அவர் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறார். சுவேந்து அதிகாரி மற்றும் 41 மக்களின் தியாகம் இல்லாமல் மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தின் முதல்வராக 2011 ஆம் ஆண்டு பொறுப்பேற்றிருக்க முடியாது. இம்முறை நான் அவருடன் இல்லை எனவே இம்முறை அவர் முதல்வராக முடியாது. அவர் ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி பொய் கூறினார். மத்திய பாதுகாப்பு பிரிவினர் அவர்களின் கடமையை சிறப்பாக செய்திருக்கின்றனர். தேர்தல் ஆணையம் சுதந்திரமான நியாயமான தேர்தலை உறுதி செய்துள்ளது.
பானர்ஜீ மற்றும் பாஜகவினற்கு நந்திகிராம் தொகுதியில் போட்டி என்பது கௌரவ சண்டை என்று தான் கூற முடியும். 2007ம் ஆண்டு நடைபெற்ற நில கையக முயற்சி தான் மம்தா பானர்ஜியை மேற்கு வங்கத்தின் மைய அரசியலுக்கு நகர்த்தி வந்தது. அதன் மூலம் 2011ம் ஆண்டு, டி.எம்.சி. 34 வருட இடதுசாரி ஆட்சியை புறம்தள்ளி ஆட்சியை கைப்பற்றியது.
நீண்ட வரிசைகளில் மக்கள் காத்துக் கொண்டிருந்த பல்வேறு இடங்களில் புகார்கள் எழுந்தன. போயலில் இருக்கும் 7ம் எண் வாக்குச்சாவடியில் டி.எம்.சி. பூத் ஏஜெண்ட் வெளியேற்றப்பட்டதாக புகார் எழுந்தது. பானர்ஜீ அந்த பூத்திற்கு மதியம் 01:30 மணிக்கு வருகை புரிந்தார்.
பாஜகவை குறிவைத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மம்தா பானர்ஜி, வெளியிடங்களில் இருந்து குண்டர்களை இங்கு அழைத்து வந்துள்ளனர். அவர்கள் இங்கு பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். பாயில் மட்டுமல்லாமல் கோகுல் நகர் மற்றும் பலராம்பூர் ஆகிய இடங்களிலும் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டன. ஜனநாயகம் என்பது மக்களின் திருவிழா. நான் தேர்தல் ஆணையத்திற்கு என்னுடைய பணிவை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் கடந்த இரண்டு கட்ட தேர்தல்களில் நீங்கள் என்ன செய்தீர்களோ அதை வருகின்ற தேர்தல்களில் செய்யாதீர்கள். நான் சேஷனை பார்த்திருக்கிறேன் குரேஷியை பார்த்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற மோசமான தேர்தலை நான் பார்த்ததே இல்லை.
நாங்கள் நந்திகிராமில் வெற்றி பெறுவோம். 90 சதவீத வாக்குகள் எங்களுக்கு தான். நான் ஆளுநரிடம் பேசியதையோ தேர்தல் பார்வையாளரிடமும் பேசிய கருத்துக்களையோ இங்கே வெளியிட முடியாது. நான் மத்திய படையினரை குற்றம் சொல்லவில்லை, ஆனால் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சரின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகின்றனர். அவர்கள் வங்க மொழி கூட தெரியாத பாஜக மற்றும் வெளியாட்களை உள்ளே அழைத்து வர உதவுகின்றனர் என்று கூறினார்.
நரேந்திர மோடி குறித்து பேசிய அவர், தேர்தல் நாள் அன்று ஏன் அவர் இங்கே வந்து பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவது செயல் இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.
மோசடி குற்றச்சாட்டு குறித்து அவர் பேசிய போது பாஜக ஆதரவாளர்கள் அங்கே ஒன்று கூடி, கோஷங்களை எழுப்பினர. டி.எம்.சி. ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து சுவேந்து அதிகாரிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். அங்கு சிறிது நேரத்தில் இரு தரப்பினராலும் பதட்டம் நிலவியது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய பாதுகாப்பு படையினர் அங்கே சூழ்ந்தனர். தேர்தல் ஆணைய பார்வையாளர்கள், பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட பணி அமர்த்தப்பட்ட நாகேந்திர திரிபாதி ஆகியோர் அதிக காவல்துறையினருடன் அங்கே விரைந்தனர். திரிபாதி முதல்வரிடம் பேசிய பிறகு இருபிரிவினரிடம் தனித்தனியே பேசினார். பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.
மம்தா பானர்ஜி அங்கிருந்து வெளியேறிய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய திரிபாதி, நான் இரண்டு குழுக்களிடமும் பேசினேன். அவர்களை சமாதானம் செய்ய முடிந்தது. நியாயமான சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதை நான் முதல்வரிடம் உறுதி செய்தேன் என்று கூறினார்.
ஆளுநர் ஜெக்தீப், சிறிது நேரத்திற்கு முன்பு மமதா கூறிய விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு விசயத்தை தெரிவித்துள்ளேன். சம்பந்தப்பட்டவர்களும் முழுமையாக சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான். அனைவரும் நேர்மையாகவும் ஆர்வத்துடனும் செயல்படும் போது ஜனநாயகம் செழிக்கும் என்று நம்புகிறேன் என அவர் கூறினார்.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் நந்திராமில் உள்ள வாக்குச்சாவடி 7-ல் தேர்தல் அமைதியாக நடைபெற்றது என்றும், 4 மணி அளவில் 74% வாக்காளார்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர் என்றும் பொது பார்வையாளர் மற்றும் காவல்துறை பார்வையாளர்கள் ஆகியோரை பாயல் பள்ளிக்கு அனுப்பி அறிக்கையை சம்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் கூறியது.
முதல்வர் பானர்ஜி மாநில தலைமை நிர்வாக அதிகாரிக்கு சமர்ப்பித்த கையால் எழுதப்பட்ட புகாரின் பேரில், சிறப்பு காவல்த்துறை பார்வையாளர் விவேக் துபே மற்றும் சிறப்பு பொது பார்வையாளர் அஜய் நாயக் ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணையம் கேட்டுக்கொண்டது.
இதற்கிடையில், தாம்லூக் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும், சுவேந்து அதிகாரி சகோதரரும் நந்திகிராமில் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதைக் கண்டு புர்பா மதினிபூர் மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதினர்.
அவர் எழுதிய கடிதத்தில், ‘இப்பகுதியில் தற்போதைய அரசியல் நிலைமையைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள வகுப்புவாத நல்லிணக்கத்தை அப்பட்டமாக சீர்குலைக்கக்கூடும் என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். அங்கு வசிக்கும் மக்களின் சாதாரண அமைதியான வாழ்வில் முழுமையான அழிவை ஏற்படுத்தும். எனவே இங்குள்ள அனைத்து மக்களின் ஒருங்கிணைந்த மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு அதிக அக்கறை செலுத்துவதற்காக தற்போதுள்ள வகுப்புவாத நல்லிணக்கத்தை பேணுவதற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முன்கூட்டியே எடுக்குமாறு உங்கள் நல்ல அலுவலகத்தை நான் மனதார கேட்டுக்கொள்கிறேன் ’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.